மெக்சிகோ கோவில் ஒன்றில் திருநற்கருணை பெறும் விசுவாசி மெக்சிகோ கோவில் ஒன்றில் திருநற்கருணை பெறும் விசுவாசி  

இன்றைய மெக்சிகோ எதிர்நோக்கும் சவால்கள்

மெக்சிகோ ஆயர்கள் : கோவிட்-19 நோயால் துன்புறும் நாட்டில், வன்முறைகளும் பெரிய அளவில் அதிகரித்து வருவது குறித்து மௌனம் காக்க முடியாது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் -19 கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு துயருறும் மெக்சிகோ நாட்டில், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது, வன்முறைகளும் பாதுகாப்பற்ற நிலைகளும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஆயர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.

2020ம் ஆண்டில் மெக்சிகோ குடும்பங்களின் பொருளாதார சூழல்கள் ஏற்கனவே பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, வன்முறைகளும் பாதுகாப்பற்ற நிலைகளும் அதிகரித்துள்ளது குறித்து மௌனம் காக்கமுடியாது எனக்கூறும் மெக்சிகோ ஆயர்கள், வன்முறைகளின் அளவு மட்டுமல்ல, அவற்றின் கொடூரத்தன்மைகளும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

எண்ணற்ற வன்முறை நடவடிக்கைகள், வாழ்வதற்குரிய உரிமை மறுக்கப்படல், கருணைக்கொலை குறித்த அக்கறையற்ற மனநிலை, போதைப்பொருட்களை சட்டபூர்வமாக அனுமதிக்கும் முயற்சி, பாலுறவு குறித்த தவறுகளை ஏற்கும் மனப்போக்கு, ஊழல், மனித வர்த்தகம், ஏழ்மை குறித்த பாராமுகம், பொறுப்பற்ற நுகர்வுக் கலாச்சாரம் போன்றவைகளும், மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு பெரும் சவால்களாக உள்ளன என ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

மெக்சிகோ சமுதாயத்தின் ஆன்மாவில் 'மரணக் கலாச்சாரம்' ஆழமாக வேரூன்றி உள்ளது என்று கூறும் ஆயர்கள், இந்தக் கலாச்சாரத்தை வேரோடு களைவது, மேய்ப்பர்களாகிய தங்களது முதன்மையான கடமை என்றும் ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருவில் உருவானது முதல், இயற்கை மரணம்வரை மனித வாழ்வு பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக உழைத்துவரும் அனைவருடனும் எபோதும் ஒன்றிணைந்து உழைத்துவருவதாகவும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் மேலும் கூறியுள்ளனர். (ZENIT)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2020, 13:39