நியுயார்க் பேராலயம் நியுயார்க் பேராலயம் 

அமெரிக்க திருஅவை, கொரோனா கொள்ளைநோயை கையாளும் முறை

நேர்மறையான எண்ணங்கள், எச்சூழ்நிலையிலும் மகிழ்வுடன் வாழும் மனநிலை என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை நம் வாழ்வில் கடைபிடித்தால் எத்தகைய நுண்கிருமிகளையும் அழிக்கும் ஆற்றலை நம் ஆன்மா பெறும்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜூலை 16, இவ்வியாழனன்று ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின்படி, கொரோனா தொற்றுக்கிருமி 213 நாடுகள் மற்றும் பகுதிகளைப் பாதித்துள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 36,17,301 பேர், இந்த கொரோனா கொள்ளைநோயால் தாக்கப்பட்டுள்ளனர், மற்றும், 1,40,150 பேர் இறந்துள்ளனர். இந்த கொள்ளைநோயின் மத்தியில், அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவையின் மேய்ப்புப்பணிகள் பற்றி, அருள்பணி லூர்து சேவியர் அவர்கள், வாட்சப் வழியாக பகிர்ந்துகொண்டதை இன்று வழங்குகின்றோம். தஞ்சாவூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி லூர்து சேவியர் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிஃபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஆஞ்சலிஸ் நகரில், இயேசு சபையினர் நடத்தும் லொயோலா மேரி மவுண்ட் பல்கலைக்கழகத்தில் மேய்ப்புப்பணி இறையியலில், முதுகலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

அமெரிக்க திருஅவை, கொரோனா கொள்ளைநோயை கையாளும் முறை

அருள்பணி லூர்து சேவியர், தஞ்சாவூர் மறைமாவட்டம்

வத்திக்கான் வானொலியின் இனிய நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கத்தையும் இறை இயேசுவின் ஆசியையும் கூறி வாழ்த்துகிறேன்.  2020 என்ற வருடத்தின் எண் அமைப்பே ஏதோ ஒரு வித்தியாசமாக இருப்பதாக அழகாக இருப்பதாக, நாம் முதன்முதல் இந்த வருடத்தில் காலடி எடுத்து வைத்த பொழுது நினைத்திருப்போம். உண்மையில் கண்ணுக்குப் புலப்படாத கிருமி ஒன்று இவ்வுலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அரசன் முதல் ஆண்டி வரை அச்சப்பட்டு வாழும் அவல நிலைக்கு இன்று நம்மை இந்த கிருமி தள்ளி விட்டுள்ளது. நல் வாழ்வை உறுதிப்படுத்த இந்நோயின் தன்மை, பாதை, பாதிப்பு எவைஎவை என்பதை நாம் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.

சீனாவின் ஹிபே மகாணத்தில் உள்ள வூகான் நகர மக்கள் அதிக அளவில் புதியவகை நிமோனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருப்பதாக சீன அரசு உலக சுகாதார அமைப்பிடம் (WHO) டிசம்பர் 31, 2019  அன்று தெரிவித்தது. அன்று முதல் ஜூலை இரண்டாம் வாரம் வரை உலக அளவில் ஏறக்குறைய ஒரு கோடியே 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏறக்குறைய ஐந்தரை இலட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறிப்பாக அமெரிக்காவில் இக்காலக்கட்டத்தில் 31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏறக்குறைய ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.  கொரோனாவைப் பற்றி  அமெரிக்க அறிவியலாளர்கள்  கூறும்போது இது ஒரு வைரஸ்  குடும்பத்தைச் சார்ந்தது, வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்டதாகும்.  உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் நம்மிடையே உள்ளன. ஏற்கனவே கொரோனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இவை ஏழாவது வைரஸ் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது சீனாவின் வூகான் நகரத்தில் கண்டறியப்பட்ட கொரானா வைரஸ் வவ்வால்களிடமிருந்து பரவியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.கொரோனா (Covid -19) நோயை உலகம் முழுக்க பரவக்கூடிய நோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.  நோய் பாதிக்கப்பட்ட முதல் 14 நாட்களுக்குள் சளி, காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தெரியும்.  உடலின் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பாதிப்புகளை இந்நோய் ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.  இத்தகைய ஆய்வுகளே தற்போதுவரை உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில அங்கீகரிக்கப்படாத ஆய்வறிக்கைகளும் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றது.

ஆஸ்திரிய அறிவியலாளர் ருடால்ப் ஸ்டெய்னர் 1918 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட "ஸ்பானிஷ் புளூ" என்ற நுண்கிருமியையும் அதனால் ஏற்பட்ட பேரழிவையும் பற்றி குறிப்பிடும் பொழுது பூமியின் மின்மயமாக்கலில் ஏற்படும் திடீர் மாபெரும் நிகழ்வு (a radical change in the electrification of the Earth) நுண்கிருமிகளைத் தோற்றுவித்து மனித உயிர்களுக்கு பேரழிவை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். 1917-ஆம் ஆண்டு அமெரிக்கா உயர் மின்னழுத்த ரேடார்களை நிறுவியது. அதிலிருந்து வெளியேறிய ரேடியோ அலைகள் பூமியின் மேற்பரப்பில் உள்ள மின்காந்த அலைகளை சேதப்படுத்தி அவை மனித செல்களை பாதித்தது என ஆராய்ச்சியில் தெரிய வந்தது.

தற்பொழுது நமது பூமியை சுற்றி  இருபதாயிரம் செயற்கைகோள்கள் சுற்றிவந்து ரேடியோ அலைகளை அதாவது 2G, 3G, 4G, 5G என்ற அலைகளை பூமியின் மேற்பரப்பில் வெளிப்படுகிறது. இவை பூமியின் மின்காந்த அலைகளை சேதப்படுத்தி வைரஸ்களை உண்டாக்கியது எனவும், வூகான்  நகரம் தான் தற்போது முழுவதும் 5ஜியினால் செயல்பட்டு வரும் உலகின் முதல் நகரம் என்பதும், இங்குதான் இவ்வைரஸ் தோன்றியது என்பதும் நம்மை சற்று சிந்திக்க வைக்கின்றது. தற்பொழுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை முறை குறித்தோ அல்லது தடுப்பு மருந்துகள் குறித்தோ எந்த கண்டுபிடிப்பும் நிரூபிக்கப்படவில்லை. புதிய தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இச்சூழலில் அமெரிக்க கத்தோலிக்க திருச்சபை கொரோனா பாதிப்பை எப்படி கையாள்கின்றது என பார்ப்போம். கொரோனா பாதிப்பு காலங்களில் அமெரிக்காவின் பெரும்பான்மையான பங்கு தளங்கள் இணையவழி திருப்பலி, திவ்ய நற்கருணை ஆராதனை, கருத்தரங்கு, விவிலிய கல்வி, ஆலோசனை, ஆற்றுப்படுத்துதல் போன்றவற்றை இணையவழியின் மூலமாக மக்களின் ஆன்மீக தேவைகளை மற்றும் மக்களுடனான உறவினை உறுதி செய்து வருகின்றன. கத்தோலிக்க தொண்டு அமைப்புகள் தன்னார்வலர்கள் மூலம் ஏழைகளுக்கும், வீடிழந்தோருக்கும் உணவு மற்றும் அடிப்படை தேவைளுக்குரிய பொருட்களை அவரவர்களின் இருப்பிடம் சென்று கொடுத்து உதவுதல், வீடுகளில் முடங்கி போயுள்ள முதியவர்களுக்கும், உடல் நலம் பாதித்தோருக்கும் அவர்களின் இல்லம் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுத்தல், இணையவழி ஜெபக்குழுக்களை உருவாக்கி உடைந்துபோன உள்ளங்களை ஊககப்படுத்துதல் போன்ற இறை இயேசுவின் விழுமியங்களை விதைத்து கொண்டேயிருக்கின்றது.

கொரோனா பாதிப்பு அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையின் பொருளாதார நிலையை கடுமையாக பாதித்துள்ளது எனலாம். ஆலயங்கள் மூடப்பட்டதாலும், காணிக்கைகள் கணிசமாக குறைந்து விட்டதாலும் ஆலய பராமரிப்பு, ஆலய பணியாளர்களுக்கான ஊதியம், கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து நடத்துதல், குருக்கள் மற்றும் கன்னியர்களை பராமரிக்கும் செலவு போன்ற காரியங்கள் மிகப்பெரிய சவாலை சந்தித்துள்ளன.

தற்போதைய சூழலில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பினும் அமெரிக்க கத்தோலிக்க திருச்சபை ஆன்மீக செயல்களின் மூலமாகவும், பிறரன்பு சேவையின் மூலமாகவும் இயேசு கிறிஸ்துவின் அன்பையும், அரவணைப்பையும், அருளையும் மக்களுக்கு அயராது கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

எல்லா நிலைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த சிறு வைரஸ் நம்மை அணுகாமல் இருக்க, நம் வாழ்வை ஆட்டி படைக்காமல் இருக்க, அகில உலகையே புரட்டிப்போடும் இந்நிலை மாற நாம் செய்ய வேண்டிய காரியங்களை பற்றி சிந்திக்க வேண்டும். இந்நோய்க் கிருமியை நம்மிடமிருந்து விரட்ட இரண்டு வழிகளில் நாம் போராடவேண்டும். அவைகள் ஒன்று, உடல் நலன்; மற்றொன்று,  ஆன்ம நலன்.

உடல் பாதுகாப்புக்கு நாம் செய்ய வேண்டியவை: முதலாவது இவ்வுடல் இறைவனுக்குரியது, தூய ஆவியாரின் ஆலயம் என்னும் உயரிய நோக்கோடு சரியான முறையில் பராமரிப்பது அவசியம். மனவியல் ரீதியாக நம்மை, நம் உடலை முதலில் முழுமையாக அன்பு செய்ய வேண்டும். எளிய முறையில் அதேநேரம் இயற்கை நமக்கு அளித்துள்ள உயரிய நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய உணவுப் பொருட்களை மட்டும் உட்கொள்ள வேண்டும். உடலுக்கு வலுவூட்டுமுகமாக முறையான அவரவர் உடல் நிலைக்கு தக்கவாறு உடற்பயிற்சியை மேற்கொண்டால் இந்த வைரஸை மட்டுமல்ல எந்த வைரஸையும் எதிர்த்துப் போராட நம் உடலால் முடியும். சரியான நேரத்தில் உறங்கி நல்ல ஓய்வு எடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

இரண்டாவதாக, ஆன்ம நலன் பெற நாம் செய்ய வேண்டியது: எனக்கு வலுவூட்டும் இறைவனை கொண்டு எதையும் செய்ய ஆற்றல் எனக்கு உண்டு என்னும் பவுலடியாரின் கூற்றுக்கு ஏற்ப நமக்கு வலுவூட்டும் இறைவன் என்னுள் வாழ்கிறார், எதனையும் எதிர்த்துப் போராடும் ஆற்றல் தருவார் என்னும் நம்பிக்கையை முதலில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மறையான எண்ணங்கள், எச்சூழ்நிலையிலும் மகிழ்வுடன் வாழும் மனநிலை என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை நம் வாழ்வில் கடைபிடித்தால் எத்தகைய நுண்கிருமிகளையும் அழிக்கும் ஆற்றலை நம் ஆன்மா பெறும். ஆலயங்களில் மட்டுமல்ல, அடுத்தவரிலும் ஆண்டவர் உரைக்கிறார் என நம்புவோம், தீமைகள் அல்ல நன்மைகள் மட்டுமே நம்மிலும் பிறரிலும் நிறைந்திருக்கின்றன என நம்பும்போது, நம்மால் பிறரன்பு செயல்களில் ஈடுபட்டு, நம்முடைய ஆன்மாவை வளம் பெறச் செய்து, நோய் நொடிகளின் என்று காத்துக் கொள்ள முடியும். மிகவும் முக்கியமாக வீணான பயத்தை நீக்கி கவனத்துடனும் விவேகத்துடனும் செயலாற்ற வேண்டும். இறைவனும், இறை வார்த்தையும் நம்மில் உரமாக இருந்தால், உலகையே அச்சுறுத்தும் எதுவாயினும் நம்மை வெல்ல முடியாது என்னும் உறுதி ஏற்போம். வைரசை வெல்வோம் வளமோடு வாழ்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2020, 13:00