அமேசான் பழங்குடி இனத்தவருடன் திருத்தந்தை பிரான்சிஸ, கர்தினால் Barreto அமேசான் பழங்குடி இனத்தவருடன் திருத்தந்தை பிரான்சிஸ, கர்தினால் Barreto 

கொரோனா தொற்றுக் கிருமிகளைவிடக் கொடிய நிலைகள்

பெரு நாட்டு கர்தினால் Barreto: சுற்றுச்சூழல் பாதுகாப்பில், பழங்குடியினருக்கு உதவ வேண்டியது தலத்திருஅவை மட்டுமல்ல, அனைத்து மக்கள் சமுதாயமும்தான்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழல் அழிவு, இன அழிப்பு, நில அழிப்பு போன்றவை, கொரோனா தொற்றுக் கிருமியைவிட கொடியவை என அமெரிக்கக் கண்டத்தின் திருஅவை அமைப்புகளும், பழங்குடியினர் அமைப்புகளும் இணைந்து நடத்திய, கணணிவழி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கணணிவழி நடத்தப்பட்ட இரண்டு நாள் கூட்டத்திற்குப்பின் அறிக்கை ஒன்றை வெளியிட்ட இந்த அமைப்புக்கள்,  அமேசான் பழங்குடி இனத்தவர் மீதும், அவர்களின் நிலங்கள், மற்றும், கலாச்சாரத்தின் மீதும், அண்மைக் காலங்களில், தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கிறது.

ஈக்குவதோர், கொலம்பியா, பெரு, பொலிவியா, சிலே, பராகுவாய், கயானா, வெனிசுவேலா, பிரேசில், பிரெஞ்சு கயானா, மற்றும், சுரினாம் நாடுகளின் பழங்குடி இன பிரதிநிதிகளும், அவர்களிடையே உழைக்கும் திருஅவை அதிகாரிகளும் கலந்துகொண்ட இந்தக் கலந்தாய்வில், வெளியிலுள்ளோரின் பேராசைக்கும் அதிகாரத்திற்கும் உட்படுத்தப்பட்டு தங்கள் உரிமைகளை இழந்துவரும் மக்களைக்குறித்த கவலை வெளியிடப்பட்டது.

சுற்றுச்சூழல் அழிவு, இன அழிப்பு, நில அழிவு ஆகியவை, வாழ்வின் மீது எவ்வித அக்கறையுமின்றி செயல்படுவதால், அவை கொரோனா கிருமிகளைவிடத் தீங்கு நிறைந்தவை எனக் கூறுகிறது இந்த அறிக்கை.

பழங்குடி இனத்தவர் வாழும் பகுதிகளில் கனிமவளச் சோதனைகள் நடத்தப்பட்டு, நில ஆக்கிரமிப்புகள் இடம்பெறுவது குறித்து, இக்கலந்தாய்வில் கலந்துகொண்டு, கவலையை வெளியிட்ட,  பெரு நாட்டின் இயேசுசபை கர்தினால் Pedro Ricardo Barreto Jimeno அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பழங்குடியினருக்கு உதவவேண்டியது தலத்திருஅவை மட்டுமல்ல, அனைத்து மக்கள் சமூகமும் என்று கூறினார்.

படைப்பு குறித்தும், வாழ்வு குறித்தும் அக்கறையுடன் செயல்படவேண்டியது ஒவ்வொருவரின் கடமை எனவும் விண்ணப்பித்தார் கர்தினால் Barreto.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2020, 14:12