கொல்கத்தாவில் கிறிஸ்தவர்கள் கொல்கத்தாவில் கிறிஸ்தவர்கள் 

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து கொலை

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான காழ்ப்புணர்வுக் குற்றங்கள் தொடர்பாக, 2016ம் ஆண்டு சனவரிக்கும், 2020ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், 2,067 வழக்குகள் பதிவாகியுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கடந்த இரு மாதங்களில் ஐந்து கிறிஸ்தவர்கள், இந்துமதத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளவேளை, மாநில அரசும், ஏனையத் தலைவர்களும் இது குறித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு, தலத்திருஅவை ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்தார்.

இம்மாதம் 19ம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் Khunti மாவட்டத்திலுள்ள Redhadi என்ற கிராமத்தில், 25 வயது நிரம்பிய Suman Munda என்ற பெண் கொல்லப்பட்டுள்ளதை முன்னிட்டு, யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்த, Khunti மறைமாவட்ட ஆயர் Binay Kandulna அவர்கள், கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து அரசு அக்கறை காட்டவேண்டும் என்று கூறினார்.

மனிதர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும், அவர்கள் கடவுளின் படைப்புக்கள், மற்றும் அவர்களை நாம் மதிக்கவேண்டும் என்று கூறிய ஆயர் Binay Kandulna அவர்கள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைதியை அன்புகூர்ந்து வாழ்கின்ற பல்வேறு மதத்தவர் மத்தியில், வெறுப்பை பரப்பும் நோக்கத்தில், சில குழுக்கள், சிறுபான்மை மதத்தவரைத் தாக்கிவருகின்றன என்று கூறினார்.  

மக்கள் கொலைசெய்யப்படுவதற்கு எதிராகக் கண்டனக்குரல் எழுப்புகிறோம், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமாறு விண்ணப்பிக்கிறோம் விலைமதிப்பற்ற வாழ்வை இழந்தவர்களுக்காக வருந்துகிறோம் என்றும், ஆயர் Kandulna அவர்கள் கூறியுள்ளார். 

Suman Munda என்ற இளம்பெண் கிறிஸ்தவத்திற்கு மனம் மாறியபின், இந்து தீவிரவாதிகளால் துன்புறுத்தப்பட்டார். இந்தப் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, நான்கு இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில், 2020ம் ஆண்டின் முதல் பாதிப்பகுதியில், கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர் என்று, 293 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதே காலக்கட்டத்தில், இந்த எண்ணிக்கை, 2019ம் ஆண்டில் 527 ஆகவும், 2018ம் ஆண்டில் 447 ஆகவும், 2017ம் ஆண்டில் 440 ஆகவும், 2016ம் ஆண்டில் 330 ஆகவும் இருந்தன என்பது கவனிக்கத்தக்கன.

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு குற்றங்கள் தொடர்பாக, 2016ம் ஆண்டு சனவரிக்கும், 2020ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், 2,067 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று, ஓர் அரசுசாரா அமைப்பு கூறியுள்ளது. (UCAN) 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2020, 12:50