"இங்கிலாந்தில் உள்ள சபைகள் இணைந்து" இலச்சினை "இங்கிலாந்தில் உள்ள சபைகள் இணைந்து" இலச்சினை 

இன அடிப்படையில் நீதி நிலவவேண்டும் – கிறிஸ்தவத் தலைவர்கள்

இன அடிப்படையில் நீதியான சமுதாயத்தை உருவாக்குவதில், கிறிஸ்தவ சபைகள் ஆற்றக்கூடிய பணி மிக முக்கியமானது. அப்பணியை, கிறிஸ்தவ சபைகளுக்குள் முதலில் துவங்கவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ சபைகளிலும், மனித சமுதாயத்திலும் இன அடிப்படையில் நீதி நிலவவேண்டும் என்பதை வலியுறுத்தி, இங்கிலாந்தில் வாழும் அனைத்து கிறிஸ்தவ தலைவர்களும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

"இங்கிலாந்தில் உள்ள சபைகள் இணைந்து" என்ற பொருள்படும் Churches Together in England என்ற அமைப்பின் தலைவர்களான வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ், கான்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி மற்றும் ஏனைய கிறிஸ்தவ சபைகள், ஆர்த்தடாக்ஸ் சபைகள் ஆகியவற்றின் தலைவர்கள் ஒன்றிணைந்து இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜார்ஜ் ஃபிளாய்ட் அவர்கள் கொல்லப்பட்ட அநீதியை அடுத்து, இன அடிப்படையில் பாகுபாடுகள் நீங்கி, ஒருங்கிணைந்த, நீதியான சமுதாயம் உருவாகவேண்டும் என வலியுறுத்தி, உலகின் பல பகுதிகளில் எழுப்பப்பட்டு வரும் குரல்களுக்கு நாங்கள் செவிமடுக்கிறோம் என்று, இவ்வறிக்கையின் துவக்கத்தில் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன அடிப்படையில், நீதியான சமுதாயத்தை உருவாக்குவதில், கிறிஸ்தவ சபைகள் ஆற்றக்கூடிய பணி மிக முக்கியமானது என்றும், அந்தப் பணியை, கிறிஸ்தவ சபைகளுக்குள் முதலில் துவங்கவேண்டும் என்றும் தலைவர்களின் அறிக்கை அழைப்பு விடுக்கிறது.

"புதுப்பிக்கப்பட்ட நிலையில், கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்" (கொலோசையர் 3:11) என்று புனித பவுல் கூறியுள்ள சொற்கள், கிறிஸ்தவ சமுதாயத்தின் அடித்தளமாக இருப்பதை நாங்கள் விரும்புகிறோம் என்று தலைவர்களின் அறிக்கை கூறுகிறது.

கறுப்பின மக்களுக்கும், குற்றப்பிரிவு, நீதித்துறை ஆகியவற்றிற்கும் இடையே உள்ள உறவு குறித்து கிறிஸ்தவ தலைவர்கள் அக்கறை கொண்டுள்ளனர் என்றும், இவ்விரு தரப்பினருக்கும் இடையே நீதியான, உறவு வளர உழைப்பது முக்கியம் என்றும் இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2020, 13:54