திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-30

2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் வீரத்துவ புண்ணிய நற்பண்புகளை அங்கீகரித்து, அவரை வணக்கத்துக்குரியவர் என்று அறிவித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்-2

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள், அல்லது திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், 20ம் நூற்றாண்டில் பிறந்து, அதே நூற்றாண்டில் உலகளாவிய கத்தோலிக்கத். திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதே  நூற்றாண்டில் இறையடி சேர்ந்தவர். திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 20ம் நூற்றாண்டில் திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், 21ம் நூற்றாண்டிலும் திருஅவையை வழிநடத்தியவர். எனவே, 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர் பட்டியலில் இறுதியாக வருபவர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் என்றே சொல்லலாம். அதேநேரம், இவர், அண்மைகால திருத்தந்தையர் வரலாற்றில் மிகக் குறுகிய காலமே, அதுவும் 33 நாள்களே திருஅவையை வழிநடத்தியவர். கத்தோலிக்கத் திருஅவை மற்றும், இறையாண்மை பெற்ற வத்திக்கான் நாட்டின் தலைவராக, 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  26ம் தேதி முதல், 1978ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதிவரைதான் இவர் பணியாற்றினார். புனிதர் நிலைக்கு உயர்த்தும் படிமுறைகளின் ஒரு கட்டமாக, 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இவரை இறை ஊழியர் என்று அறிவித்தார். 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் வீரத்துவ புண்ணிய நற்பண்புகளை அங்கீகரித்து, அவரை வணக்கத்துக்குரியவர் என்று அறிவித்தார்.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், திருத்தந்தையரைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் என்ற அவை கூடுவதற்குமுன், தனக்கு நெருக்கமானவர்களிடம், தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் எவ்வித விருப்பமும் கிடையாது என்று கூறியுள்ளார். ஆனால், கர்தினால்கள் அவை, அவரைத் தேர்ந்தெடுத்தபின், அதற்கு, ஆம் என்று சொல்வதற்கு, தான் கடமைப்படவன் என்பதை அவர் உணர்ந்திருந்தார். தான் தெரிவுசெய்யப்பட்ட முடிவையும் அவர் ஏற்றார். தனக்கு முந்தைய இரு திருத்தந்தையர் மீது அவர் வைத்திருந்த நன்மதிப்பின் காரணமாக, அவர்கள் இருவரின் பெயர்களை இணைத்து, யோவான் பவுல் என்ற பெயரை ஏற்றார். இரண்டு பெயர்களைக் கொண்டிருந்த முதல் திருத்தந்தை என்ற பெருமையையும் பெற்றார், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல். இந்தப் பெயரைத் தெரிவுசெய்தது குறித்து அவர் பேசுகையில், திருத்தந்தை புனித யோவான் அவர்கள் தன்னை ஆயராகவும், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், தன்னை கர்தினாலாகவும் அறிவித்தனர், அவர்கள் இருவருக்கும் தான் கடமைப்பட்டவர் என்பதைக் குறிப்பிட்டார் என்று சொல்லப்படுகிறது. இவருக்குப்பின் திருஅவையின் தலைமைப் பணியை வகித்திருந்த திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், இவரது இனிய நற்பண்புகளை பல்வேறு உரைகளில் நினைவுகூர்ந்துள்ளனர். திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், இத்தாலி நாட்டில், "புன்னகை திருத்தந்தை (Il Papa del Sorriso)", "கடவுளின் புன்னகை (Il Sorriso di Dio)" ஆகிய புனைப்பெயர்களுடன் நினைவுகூரப்படுகின்றார். Times இதழும், மற்ற பல வெளியீடுகளும், இவரை, "செப்டம்பர் திருத்தந்தை" என்று குறிப்பிடுகின்றன. இவர் இத்தாலியில் "திருத்தந்தை லூச்சியானி (Papa Luciani)" எனவும் அறியப்படுகிறார். இவரது வாழ்வு மற்றும், தலைமைப்பணியை கவுரவிக்கும் விதமாக, இவரது சொந்த ஊரான Canale d'Agordoவில் ஓர் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இளமைப்பருவம்

அல்பினோ லூச்சியானி (Albino Luciani) என்ற திருமுழுக்குப் பெயரைக் கொண்ட திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், வட இத்தாலியில், வெனெத்தோ மாநிலத்தில், தற்போதைய Canale d'Agordo (முன்னர் Forno di Canale) என்ற ஊரில், 1912ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி பிறந்தார். இவரது தந்தை ஜொவான்னி லூச்சியானி (1872–1952), கொத்தனார் வேலைசெய்து வந்தார். அவரது அன்னையின் பெயர் Bortola Tancon (1879–1947). இவருக்கு பெதரிக்கோ (1915–1916), எத்வார்தோ (1917–2008) என்ற இரு சகோதரர்களும்,  அந்தோனியா (1920–2010) என்ற ஒரு சகோதரியும் இருந்தனர். இவர் பிறந்தவுடனே மரண ஆபத்தில் இருந்ததால், அவரது அன்னைக்கு பிரசவம் பார்த்த பெண்ணே முதலில் இவருக்கு திருமுழுக்கு அளித்தார். அதற்குப்பின் இருநாள்கள் சென்று ஆலயத்தில் சிறப்பாக இவருக்குத் திருமுழுக்கு வழங்கப்பட்டது. மிகவும் துடிப்பான சிறுவனாக வளர்ந்துவந்த இவர், 1922ம் ஆண்டில், தனது பத்தாவது வயதில், அவரது கிராமத்திற்குச் சென்றிருந்த கப்புச்சின் துறவு சபை அருள்பணியாளர்கள் ஆற்றிய மறையுரையால் கவரப்பட்டார். அந்த மறையுரை அவரில் அருள்பணித்துவ வாழ்வுக்கு வித்திட்டது. தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தார் அவர். அதற்கு இசைவு தெரிவித்த தந்தை,  "நீ அருள்பணியாளராகப் பணியைத் தொடங்கும்போது, தொழிலாளர் சார்பாகப் பணியாற்றுவாய் என்று நம்புகிறேன், ஏனெனில் கிறிஸ்துவே அவர்கள் பக்கம்தான் இருந்தார்" என்று கூறினார். 1923ம் ஆண்டில் Feltre நகரில், இளம் அருள்பணித்துவ இல்லத்தில் சேர்ந்த இவர், பின்னர் பெல்லூனோ அருள்பணித்துவ கல்லூரியில் சேர்ந்தார். இவர் இயேசு சபையில் சேர முயற்சித்தார். ஆனால் அந்த கல்லூரியின் தலைவராக இருந்த ஆயர் Giosuè Cattarossi அவர்கள், அவருக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். 1935ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்.

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2020, 14:41