திருத்தந்தையர் திருத்தந்தையர் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-29

திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், 20ம் நூற்றாண்டில் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 21ம் நூற்றாண்டுக்குள் திருஅவையை நுழையச் செய்தவர். இவர் 1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி முதல், 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதிவரை திருஅவையில் தலைமைப்பணியாற்றினார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை முதலாம் ஜான் பால்-1

20ம் நூற்றாண்டில் எட்டு திருத்தந்தையர் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியை வகித்துள்ளனர். திருஅவையின் 256வது திருத்தந்தையாகப் பணியேற்ற திருத்தந்தை 13ம் லியோ அல்லது 13ம் சிங்கராயர் அவர்கள், 1878ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி முதல், 1903ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி வரை, 25 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்தியுள்ளார். திருஅவை 20ம் நூற்றாண்டுக்குள் வாழ இவர் உந்து சக்தியாக இருந்தது மட்டுமன்றி, அது, நவீன உலகு மற்றும், நவீன கலாச்சாரத்திற்கேற்ப தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் முயற்சித்தார். மேலும், அவர், 1891ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி, வெளியிட்ட மற்றும், வரலாற்றில் முத்திரை பதித்த, ‘ரேரும் நோவாரும்’ (Rerum Novarum) என்ற திருமடலில், தொழிலின் உரிமைகள் மற்றும், கடமைகள் பற்றி வலியுறுத்தினார். முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே, அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையே நிலவும் உறவுகள், மற்றும் கடமைகள் பற்றி இம்மடலில் இத்திருத்தந்தை விளக்கியுள்ளார். ரேரும் நோவாரும் என்ற இந்த திருமடல், நவீன கத்தோலிக்கத் திருஅவையின் சமூகப் போதனைகளுக்கு அடித்தளமாகவும் கருதப்படுகிறது. உலகில் சில சனநாயகச் சீர்திருத்தங்கள் இடம்பெறவும் இவர்  ஆதரவளித்தார். செபமாலை அன்னைமரியாமீது மிகுந்த பக்தி கொண்டிருந்த திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், செபமாலை அன்னை மரியா விழா தொடர்பான 11 திருமடல்களை எழுதியிருக்கிறார். இவற்றில் 1883ம் ஆண்டில் அவர் எழுதிய “Supremi Apostolatus Officio” என்ற முதல் திருமடலில், கத்தோலிக்கர், தங்களின் ஆபத்துக்களிலும் துன்பங்களிலும் எப்பொழுதும் மரியாவிடம் செல்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை 13ம் லியோ அவர்களுக்குப்பின், 257வது திருத்தந்தையாகப் பணியேற்ற திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் அல்லது 10ம் பத்திநாதர் அவர்கள், 1903ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி முதல், 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி வரை, 11 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திச் சென்றுள்ளார். புதுநன்மை பெறுகிறவர்களின் பாதுகாவலர் எனவும், நற்கருணையின் திருத்தந்தை எனவும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் மறைக்கல்வியைத் திருத்தி வழங்கினார் மற்றும், திருப்பலி பாடல்கள் பக்தி நிறைந்தவையாக இருக்கவேண்டும் என்றும் கூறினார். இவர் திருத்தந்தை ஐந்தாம் பயஸ் அவர்களுக்குப்பின் புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தையாவார். இவர் திருஅவையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ முறையில் விளக்கம் அளிப்பதை எதிர்த்தார். அதேநேரம், பாரம்பரிய விளக்கங்களையே இவர் ஊக்குவித்தார். இவர் வெளியிட்ட திருஅவை சட்ட தொகுப்பே, இவரது மிக முக்கிய செயலாகக் கருதப்படுகிறது. திருஅவை சட்ட தொகுப்பு வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகின்றது.

திருத்தந்தை புனித 10ம் பயஸ் அவர்கள் இறைபதம் அடைந்ததற்குப்பின், 258வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், திருத்தந்தை 15ம் பெனடிக்ட். இவர், 1914ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 1922ம் ஆண்டு சனவரி 22ம் தேதி வரை, ஏழு ஆண்டுகள் திருஅவையின் தலைமைப்பணியை ஆற்றினார். இவர், முதல் உலகப்போர் நடைபெற்ற காலக்கட்டத்தில் திருஅவையை வழிநடத்தி, போர் முடிவுறவும், உலகில் அமைதி நிலவவும் அழைப்பு விடுத்தார். போரில் புலம்பெயர்ந்த குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கு இவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களுக்குப்பின், 259வது திருத்தந்தையாகத் தலைமைப்பணியாற்றியவர் திருத்தந்தை 11ம் பயஸ் அல்லது 11ம் பத்திநாதர். 1922ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து, 1939ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதிவரை, 17 ஆண்டுகள் இவர் ஆற்றிய தலைமைப்பணிக் காலக்கட்டத்தில், கம்யூனிசத்தை எதிர்த்தார். 1929ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, இறையாண்மை பெற்ற வத்திக்கான் நாட்டின் முதல் தலைவராக இவர் விளங்கினார். வத்திக்கான் வானொலியை உருவாக்கியவரும் இவரே. திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், புனித குழந்தை தெரேசா மீது மிகுந்த நன்மதிப்பு வைத்திருந்தார். இவர், தனது பாப்பிறைப்பணியின் விண்மீன் என, இப்புனிதரை அழைத்தார். புனிதர்கள் பெரிய ஆல்பர்ட், பீட்டர் கனிசியுஸ், சிலுவை யோவான், இராபர்ட் பெல்லார்மின் ஆகியோரை, திருஅவையின் மறைவல்லுனர்கள் எனவும் அறிவித்தார், திருத்தந்தை 11ம் பயஸ்.

திருத்தந்தை 12ம் பயஸ் அல்லது 12ம் பத்திநாதர் அவர்கள், திருஅவையின் 260வது திருத்தந்தையாக, 1939ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி முதல், 1958ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி வரை, 19 ஆண்டுகள் ஏழு மாதங்கள் தலைமைப்பணியை ஆற்றினார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் திருஅவையை வழிநடத்திய இவர், போர்க் கைதிகள், மற்றும், போரினால் துன்புற்ற மக்களுக்குப் பெரிதும் உதவினார். இவர் இறைவனடி எய்தியதைத் தொடர்ந்து, திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், 261வது திருத்தந்தையாக, 1958ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1963ம் ஆண்டு சூன் 3ம் தேதி இறையடி சேர்ந்த நாள் வரை, நான்கு ஆண்டுகள், ஏழு மாதங்கள் தலைமைப்பணியை ஆற்றினார். அண்மைகால திருஅவை வரலாற்றில் மிகவும் அன்புகூரப்பட்ட திருத்தந்தையருள் ஒருவராக இவர் திகழ்கின்றார். நல்ல திருத்தந்தை என போற்றப்படும் இவர், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டி, திருஅவையில் பல மாற்றங்கள் இடம்பெற வித்திட்டார்.

திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்களுக்குப்பின், 262வது திருத்தந்தையாக, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 1963ம் ஆண்டு சூன் 21ம் தேதி முதல், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வரை, 15 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்தினார். இவர், திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள் தொடங்கி நடத்திய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை தொடர்ந்து நடத்தி நிறைவுசெய்தார். அச்சங்கத்தின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில் மிகுந்த அக்கறை காட்டினார். இவர் எழுதி வெளியிட்ட, மனித வாழ்வு பற்றிய Humanae Vitae என்ற திருமடலால், இவர் அதிகம் நினைவுகூரப்படுகிறார். திருத்தூதுப்பயண திருத்தந்தை எனவும் இவர் அறியப்படுகிறார். இந்தியா, இலங்கை, பிலிப்பீன்ஸ் உட்பட பல நாடுகளுக்கு இவர் திருத்தூதுப்பயணங்களை மேற்கொண்டார். இவர் 1964ம் ஆண்டில், எருசலேமில், கான்ஸ்தாந்திநோபிள் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை அத்தனாகோரஸ் (Athenagoras) அவர்களைச் சந்தித்தார். 1054ம் ஆண்டில் கிறிஸ்தவத்தில் இடம்பெற்ற மாபெரும் பிரிவினையில், இவ்விரு திருஅவைகளும் ஒன்றையொன்று புறம்பாக்கிய நிகழ்வு, இந்த சந்திப்பில் இரத்து செய்யப்பட்டது. இவ்வாறு கிறிஸ்தவர்களிடையே ஒன்றிப்பை ஊக்குவித்தார், திருத்தந்தை புனித 6ம் பவுல்.

20ம் நூற்றாண்டு திருத்தந்தையர் வரிசையில் இறுதியாக வருபவர் திருத்தந்தை முதலாம் ஜான் பால். திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், 20ம் நூற்றாண்டில் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 21ம் நூற்றாண்டுக்குள் திருஅவையை நுழையச் செய்தவர். இவர் 1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி முதல், 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதிவரை திருஅவையில் தலைமைப்பணியாற்றினார்.

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள், 263வது திருத்தந்தையாக, 33 நாள்களே, 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல், 1978ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதிவரை கத்தோலிக்கத் திருஅவையை வழிநடத்தியவர். இவர், 20ம் நூற்றாண்டில் பிறந்து, அதே நூற்றாண்டில் இறைபதம் சேர்ந்தவர். திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள், திருத்தந்தையர் வரலாற்றில், 1605ம் ஆண்டிற்குப்பின், மிகக் குறுகிய காலம், தலைமைப்பணியை ஆற்றியவர். மேலும், திருத்தந்தை 2ம் ஸ்தேவான் அவர்கள், கி.பி.742ம் ஆண்டில், மார்ச் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை இரண்டே நாள்கள் திருத்தந்தையாக இருந்தவர். திருத்தந்தை 11ம் லியோ அல்லது 11ம் சிங்கராயர் அவர்கள், 1605ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி முதல் 12ம் தேதி வரை 11 நாள்களும், திருத்தந்தை 7ம் உர்பான் அவர்கள் 12 நாள்களும், திருத்தந்தை 2ம் மார்செல்லுஸ் அவர்கள் 20 நாள்களும், திருத்தந்தை 2ம் பயஸ் அவர்கள் 26 நாள்களும் பணியாற்றினர்.

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள் பற்றி அடுத்த சாம்பலில் பூத்த சிரித்திரம் என்ற நிகழ்ச்சியில் கேட்ப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2020, 14:33