திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-33

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் வழியாக, திருஅவையை புதுப்பித்தல், திருஅவை சட்டத்தை மறுஆய்வு செய்து சீரமைத்தல், திருஅவைக்கு நற்செய்தியை அறிவிக்கவேண்டிய கடமையை நினைவுறுத்துதல்- திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் வகுத்திருந்த சில திட்டங்கள்,

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்-5

1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25, 26 ஆகிய இரு நாள்களில், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் எனப்படும் கர்தினால்கள் அவை வத்திக்கானில் நடைபெற்றது. திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களின் மறைவை முன்னிட்டு, நடைபெற்ற அந்த அவையில், ஆகஸ்ட் 26ம் தேதி, இத்தாலி நாட்டின் வெனிஸ் உயர்மறைமாவட்ட முதுபெரும்தந்தையாகப் பணியாற்றிய, கர்தினால் அல்பினோ லூச்சியானி அவர்கள், புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாம் யோவான் பவுல் என்ற பெயரோடு உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவை மற்றும், வத்திக்கான் நாட்டின் தலைவராக, தன் பணியைத் தொடங்கிய அவர், தனது தலைமைப்பணிக் காலத்தில் நிறைவேற்றுவதற்கு, ஆறு அம்சத் திட்டங்களை வகுத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் வழியாக, திருஅவையை புதுப்பித்தல், திருஅவை சட்டத்தை மறுஆய்வு செய்து சீரமைத்தல், திருஅவைக்கு நற்செய்தியை அறிவிக்கவேண்டிய கடமையை நினைவுறுத்துதல், திருஅவை கோட்பாடுகளைப் பாதிக்காதவண்ணம், திருஅவையில் கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவித்தல், பல்சமய உரையாடலை ஊக்குவித்தல், உலக அமைதி மற்றும், சமுதாய நீதியை ஊக்குவித்தல் ஆகிய ஆறு அம்சத் திட்டங்களை வகுத்திருந்தார் என்று, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் பற்றிய பதிவுகளில் நாம் காண முடிகின்றது.

மேற்குலக மரபுமுறை

அக்காலக்கட்டத்தில் மேற்குலகில் அரசர் அல்லது, ஓர் உயர் பதவியில் இருப்பவர் அறிக்கைகளை வெளியிடும்போது அல்லது, உரையாற்றும்போது, “நாம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி, பன்மையிலே தன்னை குறிப்பிடுவது வழக்கம். அவரின் புகழ் மற்றும், அவர் கொண்டிருக்கும் அதிகாரத்தால் இத்தகைய வழக்கம் நிலவிவந்தது. எடுத்துக்காட்டாக, இரஷ்ய பேரரசர் முதலாம் பவுல் அவர்களின், இரண்டாவது மகனாகிய, Constantine Pavlovich அவர்கள் அரசுரிமையைத் துறந்தது குறித்து அறிக்கை வெளியிட்ட பேரரசர் முதலாம் அலெக்சாந்தர் அவர்கள், "கடவுளின் அருளால், நாம், பேரரசரும், அனைத்து இரஷ்யாவின் மீது அதிகாரத்தைக் கொண்டிருப்பவருமாகிய முதலாம் அலெக்சாந்தர்..." என்று தொடங்கியிருந்தார். இது தனிப்பட்ட மனிதரின் உயர் பதவியைக் குறிப்பது மட்டுமல்லாமல், ஒரு நாடு அல்லது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் தலைவர் என்பதை கவுரவிக்கும் முறையிலும் பயன்படுத்தப்பட்டது. கத்தோலிக்கத் திருஅவையிலும் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்தது. திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், உடனடியாக இந்த நடைமுறையை மாற்றினார்.  இவர் உரையாற்றத் தொடங்கும்போது, “நாம்” என்று சொல்வதை விடுத்து, நான் என்று ஒருமையில் பேசத் தொடங்கினார். திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களே, நவீனகாலத் திருத்தந்தையருள் இவ்வாறு முதலில் பேசத்தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

sedia gestatoria அரியணை

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், sedia gestatoria எனப்படும் அரியணையில் அமருவதற்கு தொடக்கத்தில் மறுப்பு தெரிவித்தார். ஒரு திருத்தந்தை விசுவாசிகள் மத்தியில் வலம்வரும்போது, அனைவரும் அவரை நன்றாகத் பார்ப்பதற்கு உதவியாக, திருத்தந்தையை sedia gestatoria அரியணையில் அமரவைத்து, உதவியாளர்கள் அந்த அரியணையை தோளில் சுமந்து வருவது வழக்கம். அந்த அரியணையில் அமருவதற்கு அவர் தொடக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்தாலும், மற்றவர்களது கட்டாயத்தின்பேரில் அதைப் பயன்படுத்தினார் என்று கூறப்படுகின்றது. அவ்வாறு அந்த அரியணையை கடைசியாகப் பயன்படுத்திய திருத்தந்தையும் இவரே ஆவார். மேலும், புதிய திருத்தந்தையாகத் திருநிலைப்படுத்தப்படும் நிகழ்வில், அரச மகுடம் சூட்டப்படுவதை மறுத்த முதல் திருத்தந்தையும், முதலாம் யோவான் பவுல் அவர்களே. இந்த மகுடம் சூட்டும் நிகழ்வை, "திருத்தந்தையின் தலைமைப்பணி தொடக்க நிகழ்வு" என்று பெயர் மாற்றமும் இவர் செய்தார். அந்நிகழ்வில், திருத்தந்தை, உரோம் ஆயர் என்பதைக் குறிப்பதன் அடையாளமாக, இவர், திருத்தந்தையரின் பால்யம் என்ற கழுத்துப்பட்டையைப் பெற்றார். திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், மிக எளிமையும், தாழ்மையும் உள்ளவர் என்பதற்கு இந்நிகழ்வுகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன.

Illustrissimi  நூல்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், வெனிஸ் உயர்மறைமாவட்ட முதுபெரும்தந்தையாகப் பணியாற்றிய காலக்கட்டத்தில், அவர் எழுதிய மடல்களை எல்லாம் தொகுத்து "புகழ்பெற்றவர்களுக்கு" என்று பொருள்படும் Illustrissimi  என்ற தலைப்பில், ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அவர் எழுதிய மடல் ஒன்றில் தன்னைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் -   “நான் பாராட்டுக்களைப் பெறும்போது, குருத்தோலை ஞாயிறன்று கிறிஸ்துவைச் சுமந்துசென்ற சிறிய கழுதையோடு என்னை ஒப்பிட்டுகொள்ளவேண்டும் என்று நினைப்பேன். அந்த சிறிய உயிரினம், அந்தக் கூட்டத்தின் மகிழ்ச்சி ஆரவாரக் குரல்களைக் கேட்டபோது, மிகவும் பெருமையடைந்திருக்கும். நாடக அரங்கில் முதலில் நிற்கும் பெண்ணைப் போன்று, அந்த கழுதை, பாராட்டுகளுக்கு தன் தலையை வலப்பக்கமும் இடப்பக்கமும் சிலிர்ப்பி, தன் மகிழ்வைத் தெரிவித்திருக்கும். அந்த சிறிய கழுதை, அச்சமயத்தில் எவ்வளவு மகிழ்வை வெளிப்படுத்தியிருக்கும். அதேபோல் நீ செயல்படாதே!”

நன்னெறி இறையியல்

திருஅவையின் நன்னெறி இறையியல் கோட்பாட்டில், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் நிலைப்பாடு பற்றி நோக்குகையில், அவர் முற்போக்குவாதியா, பழமைவாதியா அல்லது மிதவாதியா என்று கணிக்க முடியவில்லை என்பதும் கூறப்படுகின்றது. வெனிஸ் நகரின் நாடக ஆசிரியரும், இசைக்குறிப்புகள் எழுதுபவருமான Carlo Goldoni என்பவருக்கு அவர் எழுதிய மடலில், கருக்கலைப்பு பற்றி குறிப்பிட்டிருக்கிறார். கருக்கலைப்பு, கடவுளின் சட்டத்தை மீறுவதாகவும், பெண்களின் ஆழமான ஏக்கங்களுக்கு எதிராகவும் உள்ளது. இது பெண்களின் மனஅமைதியை மிகவும் குலைக்கின்றது என்று அந்த மடலில் குறிப்பிட்டுள்ளார். 1978ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி பிரித்தானியாவில், உலகில் முதன்முதலாக செயற்கை முறை கருவுறுதல் வழியாக, Louise Joy Brown என்ற பெண் குழந்தை பிறந்தது. அச்சமயத்தில், இந்த சோதனைக்குழாய் முறையில் குழந்தைகளைப்  பெற்றெடுப்பது பற்றி கர்தினால் லூச்சியானி அவர்களிடம் கேட்டபோது, இத்தகைய முறை, குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தொழிற்சாலைகளாக, பெண்களைப் பயன்படுத்தும் நிலைக்கு இட்டுச்செல்லக்கூடும் என்று கூறினார். அதேநேரம், பல்வேறு ஊடகங்கள் அந்த தம்பதியருக்கும், அந்த பெண் குழந்தைக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தன. இது குறித்தும் தன் எண்ணத்தை வெளியிட்ட அவர், மனித வாழ்வை விரும்புகின்ற மற்றும் அன்புகூர்கின்ற கடவுளைப் பின்பற்றி, அந்த பெண் குழந்தைக்கு, நானும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அக்குழந்தையின் பெற்றோரைப் பொருத்தவரை, அவர்கள் மீது கண்டனம் தெரிவிக்க எனக்கு எந்த உரிமையும் கிடையாது. அதேநேரம், அவர்கள் நல்ல நோக்கத்தோடும், நல்ல நம்பிக்கையோடும் செயல்பட்டிருந்தால், கடவுள் முன்னிலையில் அவர்கள் மிகுந்த வெகுமதி பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.

பெண்களுக்கு அருள்பணித்துவ திருநிலைப்பாடு

கர்தினால் லூச்சியானி அவர்கள், 1975ம் ஆண்டில் அருள்சகோதரிகள் குழு ஒன்றிற்கு உரையாற்றுகையில், பெண்களுக்கு அருள்பணித்துவ திருநிலைப்பாடு வழங்குவது குறித்து தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கிறிஸ்து தம் மேய்ப்புப்பணியை தம் திருத்தூதர்களுக்கு மட்டுமே, அதாவது ஆண்களுக்கு மட்டுமே அளித்தார். கிறிஸ்து இவ்வாறு அளித்தது குறுகிய காலத்திற்கு என்றா நினைக்கின்றீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினார் அவர். அதேநேரம், கிறிஸ்து வாழ்ந்த சமுதாயத்தில், பெண்கள் கீழானவர்களாக நடத்தப்பட்டதை அவர் ஒருபோதும் ஏற்கவில்லை என்றும் கூறினார். நற்செய்தியில், திருத்தூதர்களைவிட, பெண்கள் எப்போதும் வியப்பை ஏற்படுத்துகின்றவர்களாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர். திருஅவையில் பெண்கள், விலைமதிப்பற்ற, அருள்பணியாளர்களுக்கு இணையான, வித்தியாசமான பணிகளை ஆற்றுகின்றனர். ஆயினும் பெண்கள் அருள்பணியாளர்களாக ஆக இயலாது. அது பெண்களுக்கு எந்த விதத்திலும் ஊறு விளைவிக்காது என்பதே எனது கருத்து என்றும், கர்தினால் லூச்சியானி அவர்கள், பின்னாளைய திருத்தந்தை முதாலம் யோவான் பவுல் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2020, 10:22