ஹாயா சொஃபியா’ ஹாயா சொஃபியா’ 

ஹாயா சொஃபியா முடிவு, மக்களை பிரித்துவைக்கும் முயற்சி

ஹாயா சொஃபியா மையம், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து வாழமுடியும் என்பதன் அடையாளமாக இதுவரை இருந்துவந்தது - கர்தினால் சாக்கோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 தொற்றுநோய் உலகெங்கும் உருவாக்கியுள்ள நெருக்கடியில், நம்மிடையே ஒருங்கிணைப்பு உருவாவது மிக அவசியம் என்றும், இவ்வேளையில் நம்மைப் பிரித்துவைக்கும் முயற்சிகள் நடைபெறுவது வேதனை தருகிறது என்றும் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள ‘ஹாயா சொஃபியா’ (Hagia Sophia) அருங்காட்சியகத்தை இஸ்லாமியத் தொழுகைக்கூடமாக மீண்டும் மாற்றியுள்ள துருக்கி அரசுத்தலைவர் ரெசெப் தய்யிப் எர்டொகான் அவர்களின் முடிவைக்குறித்து, கர்தினால் சாக்கோ அவர்கள் தன் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.

கோவிட்-19 தொற்றுக்கிருமியினால், துருக்கி நாட்டு மக்கள் ஏற்கனவே நலிவுற்று, இறந்துகொண்டிருக்கும் சூழலில், மக்களை ஒருங்கிணைத்து, இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடவேண்டிய வேளையில், அவர்களை பிரிக்கும் முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, உலகத்தையே வேதனைப்படுத்தியுள்ளது என்று கர்தினால் சாக்கோ அவர்கள் கூறினார்.

ஹாயா சொஃபியா அருங்காட்சியகத்தை இஸ்லாமியத் தொழுகைக்கூடமாக மாற்றும் முடிவு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஜூலை 12, கடந்த ஞாயிறு, மூவேளை செப உரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வேதனையை வெளிப்படுத்தியதையும், கர்தினால் சாக்கோ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தந்தை வெளியிட்ட வேதனை, ஈராக் நாட்டின் அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் காட்டப்பட்டன என்று கூறிய கர்தினால் சாக்கோ அவர்கள், பழம்பெரும் கலாச்சார சின்னமென்று UNESCO அறிவித்துள்ள ஒரு மையத்தின் அடிப்படை பண்பை மாற்றுவது தவறு என்றும் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவர்களின் கோவிலாக உருவாகி, பின்னர் இஸ்லாமியத் தொழுகைக்கூடமாக மாற்றப்பட்டு, அதன் பின்னர், அனைவருக்கும் பொதுவான ஓர் அருங்காட்சியகமாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த மையம், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து வாழமுடியும் என்பதன் அடையாளமாக இதுவரை இருந்துவந்தது என்பதையும் கர்தினால் சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.

'புனித ஞானம்' என்று பொருள்படும் ‘ஹாயா சொஃபியா’ பேராலயம், இஸ்லாமியரின் தொழுகைக்கூடமாக மாறியபின்னரும், அதற்குச் சூட்டப்பட்ட கிறிஸ்தவப் பெயர் தொடரும் என்றும், அங்கு வருகை தரும் கிறிஸ்தவர்களுக்கு நுழைவுக்கட்டணம் கிடையாது என்றும், அரசுத்தலைவர் எர்டோகான் அவர்கள் அறிவித்துள்ளார் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.  (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2020, 15:04