உக்ரைனில் காரித்தாசின் உதவிகள் உக்ரைனில் காரித்தாசின் உதவிகள் 

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு காரித்தாஸ்

உக்ரைன் நாட்டின் Donbass பகுதியில் பள்ளிகள் மீது குண்டுகள் வீசப்பட்டதால், சிறாரின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டு ஐரோப்பாவில், அப்பகுதியின் சிறார், குண்டு மழைகளைப் பார்த்தே வளர்ந்து வருகின்றனர் – உக்ரைன் காரித்தாஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டு மக்களுக்கு உதவும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "உக்ரைனுக்குத் திருத்தந்தை" என்ற பெயரில், 2016ம் ஆண்டில் தொடங்கிய திட்டம், அம்மக்கள் மீது திருத்தந்தை கொண்டிருக்கும் பாசத்தையும், அக்கறையையும் வெளிப்படுத்துகிறது என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

உக்ரைன் நாட்டில் இடம்பெறும் போர் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என்று, ஜூலை 19, ஞாயிறன்று அழைப்பு விடுத்த திருத்தந்தை, ஜூலை 26, இஞ்ஞாயிறன்று, அந்நாட்டில் போர் நிறுத்தம் கையெழுத்திடப்பட்டிருப்பது குறித்து தன் மகிழ்வையும், பாராட்டையும் தெரிவித்தார்.

இதையொட்டி, வத்திக்கான் செய்தித்துறைக்குப் பேட்டியளித்த, லெயோபோலி (Leopoli) மறைமாவட்ட துணை ஆயர் Eduard Kava அவர்கள், திருத்தந்தை தொடங்கிவைத்த திட்டத்தால் திரட்டப்பட்ட ஒரு கோடியே 15 இலட்சம் யூரோக்கள், முடியும் கட்டத்தில் உள்ளன என்றும், இந்த திட்டத்தால் உக்ரைனில் நிறைய நன்மைகளை ஆற்றமுடிந்தது என்றும் கூறினார்.

2014ம் ஆண்டிலிருந்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்கள் மீது, திருத்தந்தை மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் எனவும், இந்த திட்டத்தால், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஒன்பது இலட்சம் பேர் நன்மை அடைந்தனர் எனவும், ஆயர் Kava அவர்கள் கூறினார்.

உக்ரைனில் காரித்தாஸ்

மேலும், ஜூலை 27, இத்திங்களன்று, உக்ரைனில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததையடுத்து, அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பும், Donbass பகுதியில் மக்களுக்கு உதவிகளை ஆற்றத் துவங்கியுள்ளது, அதோடு, அம்மக்களில், நம்பிக்கையையும் விதைத்து வருகிறது.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ஆறு ஆண்டுகளாகப் போர் நடைபெற்று வந்தது, எண்ணற்ற போர்நிறுத்த ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன, இவ்வேளையில் புதியதொரு ஒப்பந்தம் இத்திங்களன்று நடைமுறைக்கு வந்துள்ளது குறித்து, உக்ரைன் காரித்தாஸ் அமைப்பின் தலைவர் Andrij Waskowycz அவர்கள், வத்திக்கான் செய்தித்துறையிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

இப்போதைய ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது என்றுரைத்த Waskowycz அவர்கள், போர் முடிவுபெற வேண்டும் என்று மக்கள் விரும்பினர், உக்ரைனின் புதிய அரசுத்தலைவர் Volodymyr Zelensky அவர்கள் பணியைத் தொடங்கியதிலிருந்து போரை முடிவுக்குக் கொணர முயற்சித்தார், Donbass பகுதியில், 31 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2020, 13:34