பெற்றோருடன் குழந்தைகள் பெற்றோருடன் குழந்தைகள் 

இறையன்பை முதன்முதலில் நம் பெற்றோர் வழியாகவே சுவைத்தோம்

கிறிஸ்தவக் குடும்பத்தை ஊட்டி வளர்க்கும் பெற்றோர், குழந்தைகளுக்கு நற்செய்தி அறிவிப்பவர்களாகவும், குழந்தைகளின் நன்னெறி வாழ்வில் வழிகாட்டுபவர்களாகவும் செயல்படுகிறார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

அன்னைமரியாவின் பெற்றோரின் திருவிழாவாகிய இஞ்ஞாயிறன்று, உலக பெற்றோர் நாளைச் சிறப்பிக்கும் நாம், நம் பெற்றோர் எனும் கொடைக்காக, இறைவனுக்கு நன்றி கூறுவோம் என தன் ஞாயிறு மறையுரையில் அழைப்புவிடுத்தார், மியான்மார் கர்தினால், சார்ல்ஸ் போ.

இறையன்பை முதன்முதலில் நம் பெற்றோர் வழியாகவே சுவைத்தோம் என்று கூறிய கர்தினால் போ அவர்கள், தான் சிலுவையில் தொங்கிய வேளையிலும், தன் தாய் மீது இயேசு காட்டிய அக்கறை, நமக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக உள்ளது என கூறினார்.

இயேசு தன் வாழ்வின் இறுதிவேளையிலும் தன் தாய்மீது காட்டிய நன்றியுணர்வுடன், நாமும் செயல்படவேண்டியதை, இந்த பெற்றோர் தினம், நமக்கு நினைவுறுத்துகிறது என கூறினார் கர்தினால் போ.

தன் சொந்த பிள்ளைகளாலேயே கைவிடப்பட்ட  பெற்றோர், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர், உறவினரின்றி மருத்துவமனைகளில் தனித்திருப்போர், என அனைத்து பெற்றோருக்காகவும் செபிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவுறுத்திய கர்தினால் போ அவர்கள், நம்மைப் படைப்பதில், கடவுளோடு ஒத்துழைத்த இவர்கள், கடவுளுக்கு அடுத்தநிலையில் வைக்கப்பட வேண்டியவர்கள் என்று எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவக் குடும்பத்தை ஊட்டி வளர்க்கும் பெற்றோர், குழந்தைகளுக்கு நற்செய்தி அறிவிப்பவர்களாகவும், குழந்தைகளின் நன்னெறி வாழ்வில் வழிகாட்டுபவர்களாகவும் செயல்படுகிறார்கள் எனவும் எடுத்துரைத்தார், மியான்மார் கர்தினால்.

குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் எடுத்துரைத்த கர்தினால் போ அவர்கள், பெற்றோரை மதித்தல், அவர்களுக்கு கீழ்ப்படிதல், அவர்களின் அறிவுரைகளை செவிமடுத்தல், அவர்களைப் பேணுதல், போன்ற கடமைகளைச் சுட்டிக்காட்டினார். (ZENIT)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2020, 15:57