Tuquவிலுள்ள பழமை வாய்ந்த திருமுழுக்குத் தொட்டி Tuquவிலுள்ள பழமை வாய்ந்த திருமுழுக்குத் தொட்டி 

பழமை வாய்ந்த திருமுழுக்குத் தொட்டியை அகற்றிய இஸ்ரேல் அரசு

பெத்லகேம் பகுதியில் உள்ள Tuqu என்ற ஊரில் பாதுகாக்கப்பட்டு வந்த பழமை வாய்ந்த திருமுழுக்கு தொட்டியொன்றை, ஜூலை 20 இத்திங்கள் அதிகாலையில், இஸ்ரேல் இராணுவ வீரர்கள் எடுத்துச்சென்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான பெத்லகேம் பகுதியில் உள்ள Tuqu என்ற ஊரில் பாதுகாக்கப்பட்டு வந்த பழமை வாய்ந்த திருமுழுக்குத் தொட்டியொன்றை, ஜூலை 20 இத்திங்கள் அதிகாலையில், இஸ்ரேல் இராணுவ வீரர்கள் எடுத்துச்சென்றனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

இளம் சிவப்பு கல்லினால் உருவாக்கப்பட்ட இந்த திருமுழுக்குத் தொட்டி, 5 அல்லது 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், புனித பூமியில் உள்ள மூன்று முக்கியமான திருமுழுக்குத் தொட்டிகளில் இதுவும் ஒன்று என்றும் பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான WAFA அறிவித்துள்ளதென ICN செய்தி மேலும் கூறுகிறது.

பாலஸ்தீனாவுக்குச் சொந்தமான இந்த தொட்டி, 2000மாம் ஆண்டு, சட்டத்திற்குப் புறம்பான வர்த்தகர்களால் திருடப்பட்டு, பின்னர், 2002ம் ஆண்டு அது, Tuqu நகரப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும், அந்நகரில் உருவாகிவந்த ஒரு கலைக்கூடத்தில் வைப்பதற்கென பாதுகாக்கப்பட்ட இத்தொட்டியை தற்போது இஸ்ரேல் இராணுவம் அகற்றியுள்ளது என்றும் WAFA செய்தி கூறியுள்ளது.

மேற்குக் கரை எனப்படும் West Bank பகுதியில், இஸ்ரேல் அரசு தன் முழு அதிகாரத்தை நிலைநாட்டும் ஒரு முயற்சியாக, பாரம்பரியம் மிக்க இந்த திருமுழுக்குத் தொட்டியை, இஸ்ரேல் இராணுவம், இரவோடிரவாக அகற்றியுள்ளது கண்டனத்திற்குரியது என்று பாலஸ்தீனிய ஊடகங்கள் கூறுகின்றன. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2020, 13:54