பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதி பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதி  

பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களிடையே காரித்தாஸ்

பெருவெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வறிக்கை தயாரிப்பதில் அரசுடனும், உதவிகள் வழங்குவதில் அரசு சாரா அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றும் பங்களாதேஷ் காரித்தாஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கடந்த மாதம் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நாட்டில் மீண்டும் பெரிய அளவில் மழை பெய்து வருவதால், 15 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காரணமாக 14 ஆறுகள் நிரம்பி வழிவதாலும், இந்தியாவிலிருந்து உபரி நீர் தாழ்வான பங்களாதேஷ் பகுதிக்குள் நுழைவதாலும், அந்நாட்டின் வடக்கு, மற்றும், மத்தியப்பகுதியிலுள்ள 15 மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், மேலும் 8 மாவட்டங்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களால் அனைவருக்கும் உதவ முடியாது என்பதால், ஏனைய அரசு சாரா அமைப்புக்களுடன் இணைந்து, ஆயிரக்கணக்கான மக்களுக்கு, கடந்த மாதத்திலிருந்து, அவசர உணவு உதவிகளையும், பண உதவிகளையும் ஆற்றிவருவதாக, அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு அறிவிக்கிறது.

பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாகவும் தினாஜ்பூர் காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி Uzzal Ekka அவர்கள் தெரிவித்தார்.

16 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட பங்களாதேஷ் நாட்டில் மழைக்காலத்தின்போது, பெரும் வெள்ளப் பெருக்கால், மனித உயிரிழப்புகளும், பயிர்கள் அழிவும், உடைமைகள் சேதமும் இடம்பெறுவதால், நாட்டு மக்களுள் நான்கில் ஒரு பகுதியினரின் ஏழ்மைக்கு இவை காரணமாகின்றன என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2020, 13:28