சிட்டகாங் பேராயராகப் பணியாற்றிய மோசஸ் கோஸ்தாவின் அடக்கச்சடங்கு சிட்டகாங் பேராயராகப் பணியாற்றிய மோசஸ் கோஸ்தாவின் அடக்கச்சடங்கு  

இறையடி சேர்ந்த பங்களாதேஷ் பேராயர் கோஸ்தா

மக்களால் அன்புகூரப்பட்டவரும், கடினமாக உழைத்தவருமான ஒரு மேய்ப்பரை, ஆசிய துணைக்கண்டம் இழந்துவிட்டது - இந்திய ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மக்களால் அன்புகூரப்பட்டவரும், கடினமாக உழைத்தவருமான ஒரு மேய்ப்பரை, ஆசிய துணைக்கண்டம் இழந்துவிட்டது என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பங்களாதேஷ் நாட்டின் சிட்டகாங் பேராயராகப் பணியாற்றிய மோசஸ் கோஸ்தா அவர்கள், கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து விடுபட்டிருந்த நிலையில், வேறுசில நலக்குறைவு காரணங்களால், ஜூலை 13, இத்திங்களன்று இறையடி சேர்ந்தார்.

இவரது மறைவையொட்டி, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்ட மும்பைப் பேராயர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பங்களாதேஷ் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், அவர் Rohingya புலம்பெயர்ந்தோரைச் சந்திக்க, பேராயர் கோஸ்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை நினைவுகூர்ந்தார்.

புனித சிலுவை துறவு சபையைச் சேர்ந்த பேராயர் கோஸ்தா அவர்கள், ஜூன் 13ம் தேதி, கோவிட் 19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு சில நாள்களில் இந்நோயினின்று விடுபட்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 8ம் தேதி வேறுசில காரணங்களால் அவர் மீண்டும் இம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஜூலை 13 இத்திங்களன்று, தன் 69வது வயதில் இறையடி சேர்ந்தார்.

1950ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி பிறந்த மோசஸ் கோஸ்தா அவர்கள், 1971ம் ஆண்டு புனித சிலுவை துறவு சபையில் இணைந்து, 1981ம் ஆண்டு அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

உரோம் நகரில் உள்ள கிரிகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்திலும், புனித தோமா அக்குவினா பல்கலைக்கழகத்திலும், உளவியல், மற்றும், ஆன்மீக இயலில் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற மோசஸ் கோஸ்தா அவர்கள், 1996ம் ஆண்டு, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களால், தினாஜ்பூர் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார்.

2011ம் ஆண்டு சிட்டகாங் மறைமாவட்டத்திற்கு பணிமாற்றம் பெற்ற ஆயர் கோஸ்தா அவர்கள், அந்த மறைமாவட்டம் 2017ம் ஆண்டு உயர் மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டதையடுத்து, பேராயராக தன் பணிகளைத் தொடர்ந்தார்.

பங்களாதேஷ் ஆயர் பேரவையின் பொதுச் செயலராகவும், இந்த ஆயர் பேரவையின், நலவாழ்வுப் பணிக்குழுவின் தலைவராகவும், பேராயர் மோசஸ் கோஸ்தா அவர்கள் பணியாற்றியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2020, 15:12