ஏந்திய விளக்குகளுடன் செபிக்கும் நலப்பணியாளர்கள் ஏந்திய விளக்குகளுடன் செபிக்கும் நலப்பணியாளர்கள் 

"என்னால் மூச்சுவிட முடியவில்லை" – இறைவேண்டல் முயற்சி

கோவிட்-19 கொள்ளைநோயாலும், அதன் தொடர்புடைய அநீதிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக செபிக்கும்படி, ஜூலை 23, இவ்வியாழனன்று, வலைத்தளம் வழியே, உலகளாவிய ஓர் இறைவேண்டல் முயற்சி நடைபெற்றது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயாலும், அதன் தொடர்புடைய அநீதிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக செபிக்கும்படி, ஜூலை 23, இவ்வியாழனன்று, வலைத்தளம் வழியே, உலகளாவிய ஓர் இறைவேண்டல் முயற்சி நடைபெற்றது.

உரோம் உள்ளூர் நேரம், பிற்பகல் 3 மணிக்குத் துவங்கிய இந்த முயற்சியை, துறவு சபைகளின் உலகத் தலைவர்கள் அவை, இலத்தீன் அமேரிக்கா மற்றும் கரீபியன் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெண் துறவிகள் அமைப்பு ஆகிய மூன்றும் இணைந்து நடத்தின.

கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கங்களிலிருந்து தகுந்த பாதுகாப்பு பெற இயலாத மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த இறைவேண்டல் முயற்சியில், உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் பங்கேற்க அழைப்பு விடப்பட்டது.

இந்தக் கொள்ளைநோயின் தாக்கம் உலகெங்கும் உணரப்பட்டாலும், இதன் கூடுதல் தாக்கத்தை உணர்ந்துவரும் பிரேசில், மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய நாடு, இந்தியா, தென் ஆப்ரிக்கா, எகிப்து, பெரு, சிலே ஆகிய நாடுகளில் வாழும் மக்களுக்கென சிறப்பான வேண்டுதல்கள் இடம்பெற்றதாக, திருத்தூதர்களின் அரசியான அன்னை மரியாவின் துறவு சபை உலகத் தலைவர், அருள்சகோதரி Mary Barron அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மே மாதம் 25ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டில், காவல்துறையைச் சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் அவர்களின் இறுதிச் சொற்களான "என்னால் மூச்சுவிட முடியவில்லை" என்ற சொற்கள், உலகெங்கும் அநீதியின் சுமைகளில் சிக்கியிருக்கும் பலரால் கூறப்பட்டுள்ளது என்றும், இதே சொற்கள், இந்த நோயின் பிடியிலிருந்த பலராலும் உணரப்பட்ட ஒரு துன்பம் என்றும், அருள்சகோதரி Barron அவர்கள் கூறினார்.

உலகின் ஒரு சில நாடுகளில் கிடைக்கும் தரமான மருத்துவ உதவிகள், பல நாடுகளில் கிடைப்பதில்லை என்றும், இந்நாடுகளில், இந்தக் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டோரில் பலர், யாரும் அருகில் இன்றி, தனியே, மூச்சுவிட முடியாமல் இறப்பது கொடுமை என்றும், அருள்சகோதரி Barron அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மூச்சுவிடவும், குரல் எழுப்பவும் வாய்ப்பின்றி இருக்கும் பல கோடி மக்களின் மூச்சாக, குரலாக செயலாற்றும் துறவியர் ஆற்றும் பணிகளை, இந்த இறைவேண்டல் நேரத்தில் நினைவுகூர்ந்ததாக அருள்சகோதரி Barron அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2020, 13:56