மும்பை இரயில் நிலையத்தில் மும்பை இரயில் நிலையத்தில் 

இந்தியாவில் மேலும் 35,40,00000 பேர் வறுமையில் வாடும் நிலை

யுனிசெப் : தொற்றுநோய் காரணமாக தென்கிழக்கு ஆசியாவில் 60 கோடி குழந்தைகளின் வருங்காலம் பாதிக்கப்படும் அச்சம் நிலவுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
கொரோனா தொற்றுநோயின் காரணமாக இந்தியாவில், வறியோரின் எண்ணிக்கையும், மக்களிடையே, பொருளாதார இடைவெளியும் அதிகரிக்கும் என கவலையை வெளியிட்டுள்ளார், இந்திய காரித்தாஸ் அமைப்பின் முன்னாள் இயக்குனரும், பொருளாதார நிபுணருமான அருள்பணி Frederick D’Souza.
நகர்களில் வாழ்ந்துவந்த 2 கோடியே 50 இலட்சம் தொழிலாளர்கள், தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ள நிலையில், வேலை வாய்ப்புகளின்றி இவர்கள் துயருறும் அவலநிலையை குறிப்பிட்ட அருள்பணி D’Souza அவர்கள், இந்த தொற்றுநோயால், இந்தியாவில், மேலும் 35 கோடியே 40 இலட்சம் பேர் வறுமையில் வாடும் நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தையும் வெளியிட்டார்.
பல்வேறு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளின் பயனாக வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி இந்த அச்சத்தை வெளியிட்ட அருள்பணி D’Souza அவர்கள், சமத்துவமிக்க ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவையையும், அதற்கான வாய்ப்பையும் இந்த கொரோனா தொற்றுநோய் உருவாக்கித் தந்துள்ளது என்றார்.
நகர்களை கட்டியெழுப்பவும், அழகுபடுத்தவும் உதவிய, உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், சட்டிஸ்கார், ஜார்கண்ட், மற்றும், ஒடிசாவைச் சேர்ந்த 2 கோடியே 50 இலட்சம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால், அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் சேவையைச் சார்ந்திருந்த நகர்ப்புற மக்களும் சிரமங்களை அனுபவித்துவருவதாகக் கூறினார், இந்திய காரித்தாஸின் முன்னாள் இயக்குனர்.
இந்தியாவின் 70 விழுக்காடு மக்கள் கிராமங்களில் வாழும் நிலையில், தற்போது, நகர்களிலிருந்து வெளியேறியுள்ள தொழிலாளர்களும் சேர்ந்துள்ளதால், அனைவருக்கும் விவசாயத்துறையில் வேலைவாய்ப்புகளை வழங்கமுடியுமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார், அருள்பணி D’Souza.
இதற்கிடையே, கொரோனா தொற்றுநோய் காரணமாக எழுந்துள்ள உணவு பற்றாக்குறை, தடுப்பு மருந்துக்கள் வழங்கமுடியாமை, நல ஆதரவுப் பணிகளின்மை போன்ற பிரச்சனைகளால், தென்கிழக்கு ஆசியாவில் 60 கோடி குழந்தைகளின் வருங்காலம் பாதிக்கப்படும் அச்சம் நிலவுவதாக யுனிசெப் எனும் ஐ.நா.வின் குழந்தைகள் நல நிதி அமைப்பு, கவலையை வெளியிட்டுள்ளது. (AsiaNews)
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2020, 13:07