இயேசு, சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். - லூக்கா 5,4 இயேசு, சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். - லூக்கா 5,4 

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – பெருமளவு மீன்பிடிப்பு 2

வாழ்வில் நாம் சந்திக்கும் உறவுகள், சிந்திக்கும் உண்மைகள் ஆகியவற்றில், ஆழங்களைக் காண்பதற்கு அஞ்சி, நம் வாழ்க்கைப் படகை, ஆழமற்ற பகுதிகளில், மேலோட்டமாக ஓட்டிச் செல்வதற்கு இவ்வுலகம் சொல்லித்தருகிறது.

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான்

லூக்கா நற்செய்தி – பெருமளவு மீன்பிடிப்பு புதுமை 2

மகன் தந்தையிடம் புதிர் ஒன்றைத் தொடுத்தான். "அப்பா, ஒரு குளத்தின் கரையில் மூன்று தவளைகள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று, குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. இப்போது, எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேட்டான். "இது என்ன பெரிய புதிர்... மீதி இரண்டு தவளைகள் இருக்கும்" என்று பெருமையாகச் சொன்னார் தந்தை.

"அப்பா, கேள்வியைச் சரியாகப் புரிந்துகொண்டு பதில் சொல்லுங்கள். மூன்று தவளைகளில் ஒன்று, குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. இப்போது சொல்லுங்கள், எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று மகன், கேள்வியை மீண்டும் கேட்டான்.

அப்பா எதையோப் புரிந்துகொண்டவர்போல், "ஓ, புரிகிறது. கரையில் ஒன்றும் மீதி இருக்காது. ஒரு தவளை குதித்ததும், மற்ற தவளைகளும் குளத்திற்குள் குதித்துவிடும்" என்று சொன்னார். அவரது அறிவுத்திறனை அவரே மெச்சிக்கொண்டு, புன்னகை பூத்தார்.

மகன் தலையில் அடித்துக்கொண்டு, சலிப்புடன் விளக்கினான்: "அப்பா, மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள். மூன்று தவளைகளும் கரையில்தான் இருக்கும். அவற்றில் ஒன்று குளத்திற்குள் குதிக்க, தீர்மானம் செய்ததே ஒழிய, இன்னும் குதிக்கவில்லை" என்று விளக்கம் கொடுத்தான். தந்தையின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது. இலேசாகக் கொஞ்சம் அசடும் வழிந்தது.

தீர்மானங்கள் எடுப்பதற்கும், தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்கும் உள்ள இடைவெளியைக் குறித்துக்காட்டும் கதை இது.

லூக்கா நற்செய்தி 5ம் பிரிவில் பெருமளவு மீன்பிடிப்பு நடைபெறும் புதுமையில், இயேசு, சீமோனிடம் ‘ஆழத்திற்குச் செல்லும்படி’ விடுக்கும் ஓர் அழைப்பு, இந்தக் கதையை நினைத்துப் பார்ப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. கெனசரேத்து ஏரிக்கரைக்கு வந்த இயேசுவை, மக்கள் கூட்டம் நெருக்கிக் கொண்டிருந்ததால், அவர், கரையோரமாய் நின்றுகொண்டிருந்த சீமோனின் படகில் ஏறி அமர்ந்து, மக்களுக்குப் போதித்தார் என்பதை சென்ற வார விவிலியத்தேடலில் சிந்தித்தோம்.

சீமோனின் படகை தன் பிரச்சார மேடையாகப் பயன்படுத்திவிட்டு, இயேசு மீண்டும் தன் வழியே சென்றுவிடவில்லை. இன்னும், சொல்லப்போனால், சீமோனின் வாழ்வை தன் பக்கம் முழுமையாகத் திருப்புவதற்குத்தான், இயேசு, கெனசரேத்து ஏரிக்கரைக்கு வந்தார் என்ற கோணத்தில், சென்ற வாரம் நாம் சிந்தித்தோம். சீமோனையும், அவருடன் இருந்த மீன்பிடித் தொழிலாளர்கள் சிலரையும் தன் பக்கம் ஈர்க்க, இயேசு விடுத்த ஓர் அழைப்பு, ஒரு புதுமையாக உருவெடுத்தது. இயேசு விடுத்த அந்த அழைப்பை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:

லூக்கா 5:4-5

இயேசு பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.

“ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று இயேசு தந்த ஆலோசனையில், நம் சிந்தனைகளை ஆழப்படுத்துவோம்.

“A ship in harbour is safe, but that’s not what ships are built for” அதாவது, "துறைமுகத்தில் நிற்கும் கப்பல் பாதுகாப்பாக இருக்கும், ஆனால், துறைமுகத்தில் நிற்பதற்காக கப்பல்கள் கட்டப்படுவதில்லை" என்ற கூற்றை நாம் அறிவோம்.

சுகமாக, தண்ணீரில் மிதப்பதற்கு அல்ல, மாறாக, தண்ணீரைக் கிழித்துக்கொண்டு பயணங்கள் செய்வதற்கே, கப்பல்கள் கட்டப்படுகின்றன. பலவேளைகளில், அப்பயணங்களில், அலைகளும், புயல்களும் கப்பலைச் சூழ்ந்துவரும். அலைகளுக்கும், புயல்களுக்கும் அஞ்சி, கப்பல், கரையோரத்திலோ, துறைமுகத்திலோ நின்றுவிட்டால், அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாது.

கரையோரத்தில் இருக்கும் நீரில் ஆழம் இருக்காது; துறைமுகத்தில் இருக்கும் நீரில் சலனம் ஏதும் இருக்காது. ஆழமற்ற, சலனமற்ற நீரில் மிதக்கும் கப்பலுக்கோ, படகுக்கோ ஆபத்து ஏதும் இருக்காது. ஆனால், அந்தக் கப்பலால், படகால், பயனும் இருக்காது. துறைமுகத்தில் நின்று சுகம் காணும் கப்பல், துருபிடித்துப் போகும்.

நமது வாழ்வை, ஒரு படகாக, கப்பலாக உருவகித்துப் பார்ப்போம். வாழ்வில் நாம் சந்திக்கும் உறவுகள், சிந்திக்கும் உண்மைகள் ஆகியவற்றில், ஆழங்களைக் காண்பதற்கு அஞ்சி, நம் வாழ்க்கைப் படகை, ஆழமற்ற பகுதிகளில், மேலோட்டமாக ஓட்டிச் செல்வதற்கு இவ்வுலகம் சொல்லித்தருகிறது.

பணியிடங்களில் நாம் உருவாக்கும் உறவுகள், பெரும்பாலும் மேலோட்டமான அறிமுகங்களில் ஆரம்பமாகி, மேலோட்டமாகவே செல்கிறது. விரைவில், அந்த உறவில் சலிப்பு உண்டாகி, பிரிந்துவிட வேண்டியுள்ளது. இதைத்தான், இன்றைய உலகில் 'Hi-Bye' உறவுகள் என்று கூறுகிறோம்.

குடும்ப உறவுகளிலும், நேருக்குநேர் அமர்ந்து, முகமுகமாகப் பார்த்து, பேசி, உறவுகளை ஆழப்படுத்திக் கொள்வதற்குப் பதில், நம்மிடம் உள்ள கைப்பேசிகள், கணனிகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் நாம் அதிக ஈடுபாட்டைக் காட்டுகிறோம்.

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், இல்லங்களில் அடைபட்டிருக்கும் சூழல் உருவான வேளையில், ஒரு சில இல்லங்களில், குடும்பத்தினர் கூடிவந்து, பேசி, சிரித்து, உணவு உண்டதையும், உறவுகளில் புதிய ஆழத்தைக் கண்டதையும், ஓர் அழகிய அனுபவமாக, சமூக வலைத்தளங்களில், அவ்வப்போது கூறிவருகின்றனர்.

உறவுகளில் ஆழம் காண அஞ்சுவதுபோலவே, நம் சிந்திக்கும் பழக்கங்களிலும் ஆழங்களைச் சந்திக்க தயங்குகிறோம். நமக்குள் உருவாகும் சிந்தனைகளில், ஆழத்திற்குச் செல்லும் பொறுமையின்றி, எதையும் மேலோட்டமாக சிந்திக்க தூண்டப்படுகிறோம். நாம் வாழும் அவசர உலகில், எந்த ஒரு விடயத்தையும், ஆற, அமர, சிந்தித்து, செயல்பட, நமக்கு நேரமும் இருப்பதில்லை, பொறுமையும் இருப்பதில்லை. இவ்வாறு, துரிதமாக, மேலோட்டமாக செல்லும் நம் வாழ்க்கைப் படகை, "ஆழத்திற்கு தள்ளிக்கொண்டு போக" இயேசு அழைக்கிறார்.

இயேசு விடுத்த இந்த அழைப்பில் மற்றுமோர் அழகிய அம்சம் உள்ளது. அவர், சீமோனின் படகிலிருந்து போதித்தபின், படகைவிட்டு இறங்கி, கரையில் நின்றுகொண்டு, சீமோனிடம், "ஆழத்திற்குச் செல்லுங்கள்" என்று கட்டளையிடவில்லை. மாறாக, "ஆழத்திற்கு வாருங்கள்" என்று கூறுகிறார். அதாவது, சீமோனும், மற்றவர்களும் ஆழத்திற்குச் செல்லும் வேளையில், இயேசு தன்னையும் அவர்களோடு இணைத்துக் கொள்கிறார்.

ஆழத்திற்குச் செல்வது, எளிதான காரியம் அல்ல... ஆழத்திற்குச் செல்வதற்கு, ஏகப்பட்டத் தயக்கங்கள் நமக்குள் எழலாம். எதையும், ஆழமாக அறிந்து, புரிந்து செயல்படுவதற்கும், ஆழமான, அர்ப்பண உணர்வுடன், உறவுகளை வளர்ப்பதற்கும், தனிப்பட்டத் துணிச்சல் தேவை. அத்தகைய ஆழத்திற்குச் செல்லுமாறு அழைக்கும் ஆண்டவன் நம்மோடு வரும்போது, நம்மால் துணிந்து செல்லமுடியும்.

தன்னை நம்பி, தனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு, படகை ஆழத்திற்குக் கொண்டு சென்ற சீமோனின் எளிமையான உள்ளம் இயேசுவைக் கவர்ந்திருக்கவேண்டும். தங்கள் சொல்லுக்குக் கட்டுப்படும் எளியோரை, சுயநலனுக்காக, சொந்த இலாபங்களுக்காகப் பயன்படுத்தும் தலைவர்களை நாம் அறிவோம்.

இயேசுவின் எண்ணங்கள், நம் சுயநலத் தலைவர்களைவிட வேறுபட்டவை. சீமோனை இன்னும் தன் வயப்படுத்த, அவர் வழியாக, இன்னும் பலரைத் தன் வயப்படுத்த நினைத்தார் இயேசு. சீமோனை, மனிதரைப் பிடிப்பவராக மாற்ற விழைந்த இயேசு, அதற்கு முன், புது வழியில் மீன்பிடிக்கும் முறையைச் சொல்லித்தர விழைந்தார். பகல் வேளையில், ஏரியில் வலைகளை வீசச் சொன்னார்.

இயேசு விடுத்த இந்தக் கட்டளை, சீமோனுக்கும், படகில் இருந்த ஏனையோருக்கும் ஒரு புதிராக ஒலித்திருக்கும். இதைக் கேட்டு, சீமோனும், உடன் இருந்தோரும், அதிர்ச்சியும், கொஞ்சம் எரிச்சலும் அடைந்திருக்கலாம். மீன்பிடிக்கும் தொழிலில் பல ஆண்டுகள் ஊறித் தேர்ந்த அவர்களது திறமையையும், அனுபவத்தையும் கேலி செய்வதுபோல் இருந்தது, இயேசுவின் கட்டளை.

சீமோன் நினைத்திருந்தால், இயேசுவிடம் அவர் இவ்விதம் சொல்லியிருக்கலாம்: "ஐயா, பிறந்ததுமுதல், மீன்பிடித்து வாழ்பவர்கள் நாங்கள். இந்த கெனசரேத்து ஏரியில் எங்களுக்கு தெரியாதது அதிகம் இல்லை. உங்களுக்கு இந்தத் தொழிலைப்பற்றி எவ்வளவு தெரியும் என்பதும் எங்களுக்குத் தெரியாது. ஆனால், பகல்நேரத்தில் எங்களை மீன்பிடிக்கச் சொல்வது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் பகல் நேரத்தில் நாங்கள் வலை வீசினால், பார்ப்பவர்கள், எங்களைப் பைத்தியக்காரர்கள் என்று சொல்வார்கள். உங்கள் ஆலோசனைக்கு நன்றி. நீங்கள் விரும்பினால், இந்த ஏரியைச் ஒருமுறை இந்தப் படகில் சுற்றிவிட்டு, கரைக்குத் திரும்புவோம்" என்று, சீமோன், தன் நிலைப்பாட்டை, நல்லவிதமாகக் கூறியிருக்கலாம்;

மாறாக, கள்ளம் கபடமற்ற சீமோன், தன் இயலாமையையும், இயேசுவின் மீது தனக்கு உருவாகியிருந்த நம்பிக்கையையும் இவ்விதம் சொல்கிறார்: “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” (லூக்கா 5:5) என்பது, சீமோனின் மறுமொழியாக இருந்தது. இக்கூற்றில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் ஒரு சில உள்ளன. அவற்றையும், இந்தக் கூற்றைத் தொடர்ந்து, பகல் நேரத்தில் கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்த புதுமையையும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2020, 11:02