உங்கள் அச்சம் நம்பிக்கையை வெல்வதற்கு விடாமல், உங்கள் நம்பிக்கை அச்சத்தை வெல்வதற்கு விடுங்கள் உங்கள் அச்சம் நம்பிக்கையை வெல்வதற்கு விடாமல், உங்கள் நம்பிக்கை அச்சத்தை வெல்வதற்கு விடுங்கள் 

பொதுக்காலம் 12ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

சிட்டுக்குருவிகள் தரையில் விழாதவாறு பராமரிக்கும் இறைவன், தன் சீடர்களையும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை, அவர்களை வழிநடத்தவேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 12ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

"கவிதை பயம் எனக்கு, கவி பயம் எனக்கு, காடு பயம் எனக்கு, நாடு பயம் எனக்கு, அழுக்கு பயம், குளிக்க பயம்... எல்லாமே பயமயம்" என்று, தமிழ் திரைப்படம் ஒன்றில், மனநலமருத்துவரிடம் தன் பிரச்சனையைக் கூறுவார், அந்தக் கதையின் நாயகன். வாழ்க்கையில் பார்க்குமிடத்திலெல்லாம் பயங்களை மட்டுமே சந்திக்கும் மனிதர் அவர். அந்தக் கதை நாயகனை வதைத்த ‘எல்லாமே பயமயம்’ என்ற பிரச்சனை, கடந்த சில மாதங்களாக நம்மையும் சுற்றிவரும் பிரச்சனைதானே?

கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியைக் குறித்து நாம் இதுவரை கேட்ட அனைத்தும் நமக்குள் பயத்தை உருவாக்கியுள்ளன. கண்டுபிடிப்புகள் என்ற பெயரில், அரசுகளும், பல்வேறு உலக நிறுவனங்களும், வெளியிட்டு வரும் வெவ்வேறு கருத்துக்கள், நம் நிம்மதியைக் குலைத்துவருகின்றன. கூடுதலாக, நம் சமூக வலைத்தளங்கள் வழியே உலவும் வதந்திகள், நம் பயங்களை வளர்த்துவருகின்றன.

2020ம் ஆண்டு புலர்ந்ததிலிருந்து, உலக மக்களின் எண்ணங்களை அதிகம் ஆட்கொண்ட ஓர் உணர்வு, பயம். கொரோனா, கோவிட் 19, கொள்ளைநோய் என்ற சொற்களை மீண்டும், மீண்டும் கேட்டுவந்துள்ள நாம், இன்றும், அந்தக் கொடூரத்திலிருந்து விடுபட வழியில்லாமல் தவித்துவருகிறோம்.

இத்தருணத்தில், இந்த ஞாயிறு வழிபாட்டில், நமக்கு வழங்கப்பட்டுள்ள இறைவாக்கு, நம் அச்சங்களை நீக்குவதற்குப் பதில், அவற்றை கூட்டுவது போன்று ஒலிக்கிறது. "'சுற்றிலும் ஒரே திகில்' என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்" (எரேமியா 20:10) என்று இறைவாக்கினர் எரேமியா, இன்றைய முதல் வாசகத்தைத் துவக்குகிறார். "உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்" (மத்தேயு 10:26) என்று, இன்றைய நற்செய்தியில், இயேசு, அறிவுரை வழங்குகிறார். திகில், கொலை, அச்சம் என்று கூறும் இந்த வாசங்களைக் கேட்கும்போது, இவையே நம் வாழ்வின் அங்கங்களாகிவிட்டனவோ என்ற கலக்கம் உண்டாகிறது.

கண்ணுக்குத்தெரியாத ஒரு கிருமியால் உருவான கொள்ளைநோய் கொலைகள் போதாதென்று, பலரது கண்ணுக்கு முன், பட்டப்பகலில், நடுத்தெருவில், ஒரு மனிதரின் கழுத்தில் மற்றொரு மனிதர் தன் முழந்தாளைக்கொண்டு அழுத்தி, அவரைக் கொலைசெய்தது, இன்னும் நம் மனத்திரைகளைவிட்டு அகல மறுக்கிறது.

சட்டம், ஒழுங்கு இவற்றின் சார்பாக செயலாற்றவேண்டிய காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், இந்தக் கொலையை, எவ்வித தயக்கமுமின்றி, பலரது கண்முன்னே செய்தது, பல போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அப்போராட்டங்களில் வன்முறை வெடித்தது. உயிர் பலிகள், சூறையாடுதல், தீவைத்தல் என்ற தீமைகள் தொடர்ந்தன.

ஆப்ரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் அவர்கள் கொலையுண்டதைக் குறித்து, தன் ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கொடுமைக்கு எதிராக, வன்முறை வழிகளைப் பின்பற்றுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும், வன்முறை, நம்மை நாமே அழிப்பதற்கு மட்டும் வழிவகுக்கும் என்றும் கூறினார்.

வன்முறைகள் வெடிக்கும்போது, அவற்றை, தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்ளும் குழுக்கள், அரசுதரப்பிலும், எதிர் தரப்பிலும் உள்ளன. வன்முறையை தங்கள் வாழ்வின் அடித்தளமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாதக் குழுக்கள், இந்த கொள்ளைநோய் காலத்திலும், தங்கள் தாக்குதல்களை ஆங்காங்கே மேற்கொண்டனர் என்பதை செய்திகள் கூறுகின்றன.

வன்முறைகளை மேற்கொள்ளும் அடிப்படைவாதக் குழுவினர், தங்கள் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் அரசு அதிகாரிகளையோ, அரசியல்வாதிகளையோ நேரடியாகத் தாக்குவதற்குப் பதில், அப்பாவிப் பொதுமக்களைத் தாக்குவது, கடந்த 50 ஆண்டுகளாகப் பெருகியுள்ளது. மக்கள் கூடும் கடைவீதிகள், பயணிக்கும் பேருந்துகள், இரயில் பேட்டிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் என்று... அனைத்து தலங்களிலும், வெறித்தனமான வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு, பல நேரங்களில், வழிபாட்டுத் தலங்களும் இலக்காகியுள்ளன. அவை, கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நிகழ்ந்ததாகவும் ஒரு சில குழுக்கள் அறிக்கை விடுத்துள்ளன. மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழம்போது, நம் உள்ளங்களில், வேதனையான கேள்விகள் எழுகின்றன. சென்ற ஆண்டு, உயிர்ப்புப் பெருவிழாவன்று, இலங்கையில், ஆலயங்களில் நிகழ்ந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள், ஓராண்டு சென்றபின்னரும், கூடுதலான கேள்விகளை எழுப்பி வருகின்றனவே தவிர, விடைகளை வழங்கவில்லை.

மதநம்பிக்கை காரணமாக, நாம் வன்முறைகளுக்கு உள்ளாகும்போது, என்ன செய்யவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லித்தருகிறார். நாம் இன்று வாசிக்கும் நற்செய்தி பகுதி, மத்தேயு நற்செய்தி 10ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் துவக்கத்தில், இயேசு, தன் திருத்தூதர்கள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து (மத். 10:1-4), அவர்களை, பணியாற்ற அனுப்புகிறார். அவ்வேளையில், இயேசு அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், இப்பிரிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பணியாற்றச் செல்லும் சீடர்கள், எவ்வகை உலகைச் சந்திக்கவுள்ளனர் என்பதை, இயேசு, ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறுகின்றார். "இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன்" (மத். 10:16) என்ற கலப்படமற்ற உண்மையைக் கூறும் இயேசு, தன் சீடர்களைச் சூழும் ஓநாய்களில் சில, அவர்களது சொந்தக் குடும்பத்தினராகவே இருப்பர் (காண்க. மத். 10:21-22) என்றும் எச்சரிக்கிறார். அவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் வெறுப்பும், துன்பமும் அவர்களைத் துரத்தும் (மத். 10:23) என்பதையும் வெளிப்படையாகக் கூறும் இயேசு, அவற்றைக் கண்டு தன் சீடர்கள் அஞ்சவேண்டாம் என்று சொல்கிறார். இதுவே, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளாக அமைகின்றன.

திருத்தூதர்களாக இயேசு தேர்ந்தெடுத்தவர்கள் யாரும் வீரப்பரம்பரையில் பிறந்தவர்கள் அல்ல; போர் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. எனவே, அவர்கள் ஆயுதங்களை ஏந்தி தங்கள் பயணத்தைத் துவக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், பொன், வெள்ளி, செப்புக் காசுகளை எடுத்துச் செல்லவேண்டாம்; மிதியடிகளோ, கைத்தடியோ வேண்டாம் (மத். 10: 9-10) என்பதை, இயேசு, தன் சீடர்களுக்கு முதல் அறிவுரையாக வழங்கியுள்ளார்.

சீடர்கள் சந்திக்கப்போகும் வன்முறைகளுக்கு எதிராக, இயேசு அவர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு கேடயம், இறைவன் மீது அவர்கள் கொள்ளவேண்டிய நம்பிக்கை ஒன்றே.

'காசுக்கு இரண்டு' என்ற கணக்கில் விற்கப்படும் சிட்டுக்குருவிகள் தரையில் விழாதவாறு பராமரிக்கும் இறைவன், அவர்களையும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை, தன் சீடர்களை வழிநடத்தவேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார் (மத். 10:29). புகழ்மிக்க இச்சொற்கள், தியானம் செய்வதற்கு உகந்த சொற்களாகத் தெரிகின்றன. ஆனால், நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதற்கு இயலாத சவாலாக ஒலிக்கிறது.

நம்ப முடியாததாகத் தோன்றும் இந்தச் சவால், 20 நூற்றாண்டுகளாக, கோடான கோடி உன்னத உள்ளங்களை உறுதிப்படுத்தியுள்ளது. "ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" (மத். 10:28) என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய சொற்கள், கோடான கோடி கிறிஸ்தவர்களை, மரணம் வரை துணிவுகொள்ளச் செய்துள்ளது.

2017ம் ஆண்டு, மே 26ம் தேதி, எகிப்து நாட்டில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் திருத்தலமான புனித சாமுவேல் மடத்திற்கு திருப்பயணிகள் பேருந்தில் சென்றனர். அவர்களை வழிமறித்து நிறுத்திய இஸ்லாமியத் தீவிரவாதிகள், அப்பயணிகளை பேருந்திலிருந்து இறக்கி, கிறிஸ்துவை மறுதலிக்குமாறு ஒவ்வொருவரிடமும் கூறினர். அவர்கள் மறுக்கவே, அவர்கள் ஒவ்வொருவரையும் தலையில் சுட்டுக் கொன்றனர். 28 கிறிஸ்தவர்கள் அன்று கொல்லப்பட்டனர்.

2015ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சேர்ந்த 21 இளையோரை, இஸ்லாமிய அரசு எனப்படும் ISIS தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள், லிபியா கடற்கரையில், கழுத்தை அறுத்துக் கொன்றனர். அவ்விளையோர் அனைவரும், இயேசுவின் பெயரை உச்சரித்தபடியே உயிர் துறந்தனர்.

2008ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி முடிய, இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தில், கந்தமால் பகுதியில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக, இந்து அடிப்படைவாதிகள் மேற்கொண்ட வன்முறையில், 45 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர்.

1996ம் ஆண்டு, மார்ச் 27ம் தேதி, அல்ஜீரியா நாட்டில், சிஸ்டெர்சியன் (அல்லது, 'Trappist') துறவு சபையைச் சேர்ந்த ஏழுபேரை, இஸ்லாமியத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். மே 31ம் தேதி, அத்துறவிகளின் துண்டிக்கப்பட்ட தலைகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டன.

1945ம் ஆண்டு, பிப்ரவரி 7ம் தேதி, போஸ்னியா-ஹேர்செகொவினா நாட்டின், ஷிரோக்கி ப்ரியேக் (Široki Brijeg) என்ற ஊரில், பிரான்சிஸ்கன் துறவு மடத்தில், கம்யூனிச படையினர் நுழைந்தனர். "கடவுள் இறந்துவிட்டார்..." என்று கத்தியபடி, அவர்கள், அத்துறவிகள் அணிந்திருந்த சிலுவைகளைப் பறித்து, கீழே எறிந்தனர். துறவிகளோ, சிலுவைகளை மீண்டும் எடுத்து, அவற்றை, தங்கள் மார்போடு இறுகப் பற்றிக்கொண்டனர். அந்த 30 துறவிகளும், மடத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

நாம் இப்போது நினைவுகூர்ந்த இந்த மறைசாட்சிய மரணங்கள் அனைத்தும், 20, மற்றும் 21ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தவை. கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர் என்பது, வரலாற்று உண்மை. 20ம் நூற்றாண்டில் தங்கள் மத நம்பிக்கைக்காக உயிரிழந்தவர்களில், கிறிஸ்தவர்களே மிக அதிகம் என்ற விவரம், உலகறிந்த செய்தி. இத்தனை நூற்றாண்டுகளாய், வன்முறைகளையும் மரணத்தையும், மன உறுதியுடன் எதிர்கொண்ட, இன்றும் எதிர்கொண்டு வரும், நம் சகோதரர்கள், மற்றும், சகோதரிகள் காட்டிய துணிவுக்குமுன், தலை வணங்கி, நன்றி கூறுகிறோம்.

இந்தப் படுகொலைகள் அனைத்திலும் ஓர் உண்மை தெளிவாக ஒளிர்கின்றது. அதுதான், இறந்தவர் அனைவரும் காட்டிய உறுதி. தங்கள் உடலைக் கொல்பவர்களைக் குறித்து எந்த அச்சமும் இன்றி, தங்கள் உயிரைக் கையளித்ததால், தங்கள் ஆன்மாவை அவர்கள் முடிவில்லா வாழ்வில் இணைத்துக்கொண்டனர் என்பதை நாம் நம்புகிறோம்.

இவர்களில் பலரை அருளாளர்களாக, புனிதர்களாக அறிவிக்கும் வழிமுறைகள், ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. துணிவுடன் மரணத்தைச் சந்தித்த இவர்கள், தங்கள் ஆன்மாவை மட்டுமல்ல, தங்களைக் கொலை செய்தோரின் ஆன்மாக்களையும் காப்பாற்றியுள்ளனர் என்பதை, பின்வரும் நிகழ்வு வெளிச்சமிட்டு காட்டுகிறது.

கடவுள் இறந்துவிட்டார் என்று கத்தியபடியே, ஷிரோக்கி ப்ரியேக் பிரான்சிஸ்கன் துறவு மடத்தில் நுழைந்த கம்யூனிசப் படையினரில் ஓருவர், மனம் மாறி, மீண்டும் கத்தோலிக்க மதத்தைத் தழுவினார். தன் மனமாற்றத்திற்கு, அத்துறவிகளின் உன்னத மரணமே காரணம் என்று அவர் கூறியுள்ளார்: "நான் சிறு குழந்தையாக இருந்தபோது, கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை என் அம்மா, என் உள்ளத்தில் ஆழமாகப் பதித்தார். அம்மா சொல்லித்தந்த பாடத்தை அழித்து, ஸ்டாலின், லெனின், டிட்டோ ஆகியத் தலைவர்கள், கடவுள் இல்லை என்று சொல்லித்தந்தனர். ஆனால், அன்று, அத்துறவிகள் இறக்கும்போது, அவர்கள் முகங்களில் தெரிந்த அமைதி, அவர்களைக் கொல்லும் எங்களுக்காக அவர்கள் எழுப்பிய செபம், இவற்றைக் கண்டேன். அப்போது, அம்மா எனக்குச் சொல்லித்தந்த உண்மை, மீண்டும் என் உள்ளத்தில் ஆழமாய் பதிந்தது. ஆம். கடவுள் வாழ்கிறார்" என்று அவர் சாட்சியம் கூறியுள்ளார்.

அத்துறவிகளைச் சுட்டுக் கொன்றவர்களில் ஒருவரான இவர், மீண்டும் கத்தோலிக்க மறையைத் தழுவினார். அவரது மகன் ஓர் அருள்பணியாளராகவும், மகள் ஓர் அருள் சகோதரியாகவும் இன்று பணியாற்றி வருகின்றனர். தங்கள் உடலைக் கொல்பவர்களைக் குறித்து பயம் ஏதுமின்றி, தங்கள் உயிரைக் கையளித்த பிரான்சிஸ்கன் துறவிகள், தங்கள் ஆன்மாவைப் புனிதமாகக் காத்துக்கொண்டனர். அதுமட்டுமல்ல, தங்களைக் கொலை செய்தவர்களில் ஒருவரின் ஆன்மாவையும் அவர்களது மரணம் காப்பாற்றியது.

கிறிஸ்துவின் சாட்சிகளாக இறக்கும் வாய்ப்பு நம் அனைவருக்கும் கிடைக்குமா என்பது நிச்சயமில்லை. ஆனால், கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழும் அழைப்பு, நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நம்மில் பலர் வாழும் கிறிஸ்தவ வாழ்வு, 'இறைவன் இறந்துவிட்டார்' என்பதை, சொல்லாமல் சொல்லும் வாழ்வாக மாறி வருகிறது.

உலகத்தோடு சேர்ந்து, கூட்டத்தோடு சேர்ந்து, நம் தனிப்பட்டக் கொள்கைகளை துறந்து வாழ்வதை, இன்று 'பேஷன்' என்று சொல்லிக்கொள்கிறோம். நன்னெறி, நற்செய்தி இவற்றின் விழுமியங்களைப் பின்பற்றினால், 'பழமைவாதி' என்று முத்திரை குத்தப்படுவோமோ என்று பயந்து, கூட்டத்தோடு சேர்ந்துவிடுகிறோம். கிறிஸ்துவையும், நற்செய்தி கூறும் விழுமியங்களையும் பின்பற்றவோ, தேவைப்பட்டால், அனைவரும் அறியும்படி உயர்த்திப்பிடிக்கவோ நாம் அழைக்கப்படும்போது, முன்வருகிறோமா, அல்லது, பின்வாங்குகிறோமா என்பதை, இன்று ஆய்வுசெய்து பார்க்கலாம்.

இன்றைய நற்செய்தியின் இறுதியில், இயேசு, இதைப்பற்றிய ஓர் எச்சரிக்கையை இவ்வாறு வழங்கியுள்ளார்:

மத்தேயு 10 32-33

மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.

கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ்வதற்கும், தேவைப்பட்டால், கிறிஸ்துவின் சாட்சிகளாக, நம் உயிரை வழங்குவதற்கும், இறைவன், நம் ஒவ்வொருவருக்கும் துணிவை வழங்குவாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2020, 11:35