இலண்டனில் இனவெறிக்கு எதிரான போராட்டம் இலண்டனில் இனவெறிக்கு எதிரான போராட்டம்  

கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிரானது, இனவெறி

இனம், நிறம் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, அனைத்து மனிதர்களும், பிறந்தது முதல் இயற்கை மரணம் வரை மதிக்கப்படவேண்டியவர்கள் என்பது, திருஅவையின் படிப்பினை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இனவெறி என்பது, கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிரானது என்பதையும், இன, நிற பாகுபாடின்றி அனைத்து மக்களும் இறைவனின் மக்களே என்ற அடிப்படையிலேயே திருஅவை செயல்பட்டு வருவதாகவும், இங்கிலாந்தின் Southwark உயர் மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து கத்தோலிக்க பள்ளிகளுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

Southwark பேராயர் ஜான் வில்சன் அவர்களுடன், இரு துணை ஆயர்களும் இணைந்து கத்தோலிக்கப் பள்ளிகளுக்கென வெளியிட்டுள்ள மடலில், மே மாதம் 25ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் Minneapolisல் இடம்பெற்ற George Floyd என்பவரின் மரணம் குறித்து எழுந்த போராட்டங்களில், இளையோரின் நீதிக்கான தாகத்தைக் காண முடிந்தது என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இனவெறி குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ள, Floyd அவர்களின் மரணத்தையொட்டி இளையோர் வெளிப்படுத்திய நீதிக்கான ஏக்கத்தை தாங்களும் பகிர்ந்துகொள்ளும் விதமாகவே, இந்த கடிதத்தை கத்தோலிக்க கல்வி நிலையங்களுக்கு அனுப்புவதாகக் கூறும் ஆயர்கள், இனம், நிறம் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, அனைத்து மனிதர்களும், பிறந்தது முதல் இயற்கை மரணம் வரை மதிக்கப்படவேண்டியவர்கள் என்ற திருஅவையின் படிப்பினைய மீண்டும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

இனவெறி நடவடிக்கைகள் குறித்தோ, பாகுபாட்டு நிலைகள் குறித்தோ நாம் பாராமுகமாகச் செல்ல முடியாது எனவும், வன்முறைகள் வழியாக எதையும் சாதிக்க முடியாது எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதையும் தங்கள் கடிதத்தில் எடுத்துரைக்கும் ஆயர்கள்,  ஒருவரை ஒருவர் அன்பு கூருங்கள் என இயேசு கூறியபோது, அவர் எவ்வித விதிவிலக்கையும் வழங்கவில்லை என்பதையும் நினைவுகூர்வோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனவெறியை கத்தோலிக்க விசுவாசம் கண்டிப்பது மட்டுமல்ல, அதனை எதிர்த்துப் போராடி, அதன் விளைவுகளை அகற்ற முனைவதுடன், அதனால் விளைந்த காயங்களை குணப்படுத்தவும் பணியாற்றுகிறது, என உரைக்கும் ஆயர்களின் கடிதம், இதற்காக உழைத்துள்ள எண்ணற்ற  திருஅவைப் பணியாளர்களுள், அடிமையாக விற்கப்பட்டு புனித நிலையை அடைந்த சூடான் பெண்மணி, புனிதர் Josephine Bakhita பற்றியும் தங்கள் மடலில் குறிப்பிட்டுள்ளனர். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2020, 13:22