பெரு நாட்டில் கொரோனா தொற்று நோய் கணக்கெடுப்பு பெரு நாட்டில் கொரோனா தொற்று நோய் கணக்கெடுப்பு  

பெரு நாட்டில் 10,000த்திற்கும் அதிகமான வறியோருக்கு உணவு

Fundación Teletón அறக்கட்டளை, பெரு நாட்டு ஆயர் பேரவையுடன் இணைந்து, "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" (மத். 14:16) என்ற விருதுவாக்குடன் உணவு வழங்கும் ஒரு முயற்சியை, இந்த கொள்ளை நோய் காலத்தில் துவங்கியுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெரு நாட்டில் வாழும் வறியோருக்கு, குறிப்பாக, அங்குள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வை உருவாக்கித்தருவதற்காக பணியாற்றிவரும் Fundación Teletón என்ற அறக்கட்டளை அமைப்பு, கோவிட் 19 கொள்ளை நோய் காலத்தில் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

San Juan de Dios என்ற மருத்துவமனையை, குழந்தைகளுக்காக நடத்திவரும் Fundación Teletón அறக்கட்டளை, பெரு நாட்டு ஆயர் பேரவையுடன் இணைந்து, "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" (மத். 14:16) என்ற விருதுவாக்குடன் உணவு வழங்கும் ஒரு முயற்சியை, இந்த கொள்ளை நோய் காலத்தில் துவங்கியுள்ளது.

"பட்டினியற்ற பெரு நாடு" என்ற மையக்கருத்துடன் நடத்தப்பட்டுவரும் இந்த முயற்சியின் வழியே, ஒவ்வொருநாளும், 100 பங்குகளில் வாழும் 10,000த்திற்கும் அதிகமான வறியோருக்கு உணவு பொட்டலங்களை இவ்வறக்கட்டளை வழங்கி வருகிறது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

பெரு நாட்டில், 2,33,000த்திற்கும் அதிகமானோர் கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்நாட்டில் இதுவரை இந்நோயினால் இறந்தோரின் எண்ணிக்கை 6,860 என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2020, 15:29