சாத்தான்குளத்தில் காவல் துறை  கண்காணிப்பின்கீழ் உயிரிழந்த தந்தை, மகனின் அடக்கச் சடங்கு சாத்தான்குளத்தில் காவல் துறை கண்காணிப்பின்கீழ் உயிரிழந்த தந்தை, மகனின் அடக்கச் சடங்கு 

காவல்துறை கண்காணிப்பின்கீழ் உயிரிழப்பிற்கு திருஅவை கண்டனம்

கர்தினால் கிரேசியஸ் : காவல்துறையால் இருவர் கொல்லப்பட்டது குறித்த நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, இதில் குற்றமிழைத்தோர் தண்டிக்கப்படுவதன் வழியாகவே, நீதியின் மீது மக்களின் நம்பிக்கையைப் பலப்படுத்தமுடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
தமிழ்நாட்டின் சாத்தான்குளத்தில் காவல்துறை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த இருவர் உயிரிழந்தது குறித்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், இந்திய ஆயர்கள்.
காவல்துறையின் இக்கொடுமைகள் குறித்து இந்தியக் கத்தோலிக்க திருஅவை தன் வன்மையானக் கண்டனத்தை வெளியிடுவதாக உரைத்த கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், மக்களைக் காப்பாற்றவேண்டிய காவல்துறையே இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளது ஏற்றுகொள்ளமுடியாத ஒரு செயல் என தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவல்துறையால் இருவர் கொல்லப்பட்டது குறித்த நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, இதில் குற்றமிழைத்தோர் தண்டிக்கப்படுவதன் வழியாகவே, நீதியின் மீது மக்களின் நம்பிக்கையை பலப்படுத்தமுடியும் எனவும் தன் அறிக்கையில் கூறியுள்ளார் கர்தினால் கிரேசியஸ்.
கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடியை முன்னிட்டு, கடைகள் சீக்கிரமாக மூடப்படவேண்டும் என்ற விதியை மீறி, குறிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி கடை திறக்கப்பட்டிருந்ததால், ஜெயராஜ் என்பவரை முதலில் கைதுசெய்த காவல்துறை, அது குறித்து விசாரிக்க வந்த அவரின் மகன் இம்மானுவேல் என்பவரையும் கைதுசெய்து கொடுமைப்படுத்தியதைத் தொடர்ந்து, மூன்றாம் நாள், மகனும், நான்காம் நாள், தந்தையும் உயிரிழந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீது காவல்துறை நடத்திய இந்த கொடூரத் தாக்குதல்களுக்குப்பின், அக்கைதிகளிடம் எதுவும் விசாரிக்காமலேயே அவர்களை சிறைக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அவர்களை, மருத்துவமனைக்கு அனுப்பாமல், சிறைக்கு அனுப்பும் வகையில், முறையான பரிசோதனைகள் இன்றி சான்றிதழ் கொடுத்த அரசு மருத்துவர், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இவர்களை சிறைக்குள் ஏற்றுக்கொண்ட சிறை அதிகாரிகள் என, பலரின் உண்மை முகத்தை இந்த வழக்கு வெளி உலகுக்கு காண்பிக்கிறது என்கிறார், வழக்கறிஞரும், இயேசு சபை அருள்பணியாளருமான சகாய பிலோமின் ராஜ்.
இந்த வழக்கு குறித்த விசாரணையை, மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க, தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் ஜூன் 28ம் தேதி ஞாயிறன்று அறிவித்துள்ளார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. (UCAN)
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 June 2020, 13:34