இந்தியாவில் கோவிட்-19 விதிமுறைகளின்படி  கத்தோலிக்கர் இந்தியாவில் கோவிட்-19 விதிமுறைகளின்படி கத்தோலிக்கர் 

ஆலயங்களில் விசுவாசிகளுக்குத் திருப்பலிகள் நிறைவேற்ற அவசரம்.....

உலகில், கோவிட்-19 கிருமி தொற்றியுள்ளவர்கள் பட்டியலில், இந்தியா, ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில், இக்கிருமியால், ஒவ்வொரு நாளும், ஏறத்தாழ, பத்தாயிரம் பேர் தாக்கப்பட்டு வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுக்கிருமி தொடர்ந்து பரவி வருவதால், ஆலயங்கள் மற்றும், பொதுவான இடங்களில் திருப்பலிகளை நிறைவேற்றுவதற்கு துரிதம் தேவையில்லை என்று, இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், ஏனைய ஆயர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூன் 08, இத்திங்களன்று, இந்திய நடுவண் அரசு, கோவிட்-19 விதிமுறைகளைத் தளர்த்தி, வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கு அனுமதியளித்துள்ளதை முன்னிட்டு, இந்தியாவின் அனைத்து கத்தோலிக்க ஆயர்களுக்கும் மடல் அனுப்பியுள்ள, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அரசு மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்தியளிக்கும்வரை, ஆலயங்களைத் திறக்கவேண்டாமென பரிந்துரைத்துள்ளார்.

விசுவாசிகளுக்கு, மேய்ப்புப்பணியில் அக்கறை காட்டப்படவேண்டும் என்பது, சரியான நிலைப்பாடு எனினும், தொற்றுக்கிருமியின் ஆபத்துக்களிலிருந்து விசுவாசிகளைப் பாதுகாக்கவேண்டியதும், ஆயர்களாகிய நமது கடமை என்பதையும், கர்தினால் ஆசுவால்டு அவர்கள் நினைவுபடுத்தியுள்ளார்.

உலகில், கோவிட்-19 கிருமி தொற்றியுள்ளவர்கள் பட்டியலில், இந்தியா, ஐந்தாவது இடத்தைக் கொண்டிருக்கும்வேளை, பல்வேறு குழுக்களின் வற்புறுத்தலுக்கு இடம்கொடுக்காமல், கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலிகளை நிறைவேற்றுவதற்கு அவசரம் காட்டவேண்டாமென்று, மும்பை பேராயரான, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்திய ஆயர்கள் அனைவரையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில், கோவிட்-19 கிருமியால், ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் தாக்கப்பட்டு வருகின்றனர், ஜூன் 8ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 2 இலட்சத்து 56 ஆயிரம் பேர் இக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும், கடந்த 5 நாள்களில் மட்டும் ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் புதுடெல்லி, மும்பை, குஜராத் போன்ற நகரங்களில் கொரோனா கிருமித்தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, செய்திகள் கூறுகின்றன. (CBCI/UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2020, 13:20