பதுவை நகர் புனித அந்தோனியார் திருத்தலம் பதுவை நகர் புனித அந்தோனியார் திருத்தலம் 

பதுவை நகர் புனித அந்தோனியார் திருத்தலத்தின் அறிக்கை

பதுவை நகர் புனித அந்தோனியார் திருநாளன்று, இப்புனிதரின் ஆசீரைக் குறிக்கும் வண்ணம், ஹெலிகாப்டர் வழியே, பதுவை நகரிலும், சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் மலர்கள் தெளிக்கப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 13, இச்சனிக்கிழமை, பதுவை நகர் புனித அந்தோனியார் திருநாள் சிறப்பிக்கப்படும் வேளையில், அது, ஏனைய ஆண்டுகளைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு திருநாளாக இருக்கும் என்று, பதுவை புனித அந்தோனியார் திருத்தலத்தின் பொறுப்பாளரான அருள்பணி Oliviero Svanera அவர்கள், ஜூன் 11, இவ்வியாழனன்று செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த பல நூற்றாண்டுகளாக, இத்திருநாளன்று, பதுவை நகரைச் சுற்றி புனித அந்தோனியாரின் திரு உருவம் எடுத்துச் செல்லப்படும் மிக ஆடம்பரமான பவனி, இவ்வாண்டு நடைபெறாது என்றும், அதற்குப் பதிலாக, இப்புனிதரின் ஆசீரைக் குறிக்கும் வண்ணம், ஹெலிகாப்டர் வழியே, நகரெங்கும் மலர்கள் தெளிக்கப்படும் என்றும் அருள்பணி Svanera அவர்களின் செய்தி கூறுகிறது.

பதுவை நகரையும், அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளையும், ஒரு சூறாவளியாகத் தாக்கியுள்ள கோவிட் 19 தொற்றுக்கிருமியின் கொடுமைகளிலிருந்து, இறைவன், மக்களைக் காக்குமாறு, புனித அந்தோனியாரின் பரிந்துரையை வேண்டி, இம்மலர்கள் தெளிக்கப்படும் என்று, அருள்பணி Svanera அவர்கள் கூறியுள்ளார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலரைக் கொண்டுள்ள Schiavonia மருத்துவமனை, மற்றும் இந்த நோயினால் மிக அதிக அளவு பாதிக்கப்பட்ட Merlara மற்றும் Vo 'Euganeo" பகுதிகளில், இப்புனிதரின் பரிந்துரை வழியே ஆசீர் பொழியப்படுமாறு தனிப்பட்ட முறையில் மலர்கள் தெளிக்கப்படும் என்றும், திருத்தலத்தின் பொறுப்பாளர் கூறியுள்ளார்.

இந்த கொள்ளைநோயின் தாக்கத்திலிருந்து நாம் அனைவரும் மறுபடியும் எழுந்து, மன உறுதியுடன் வாழவைத் தொடரவேண்டும் என்று, இச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ள அருள்பணி Svanera அவர்கள், குறிப்பாக, இளையோர், இவ்வுலகை மீண்டும் கட்டியெழுப்பும் பணியை, ஆர்வமுடன் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2020, 14:13