கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் 

தற்போதைய சூழலில் ஆரவாரமின்றி செயல்படும் மௌன வீரர்களுக்கு செபம்

நோயாளிகள் குணமடையவும், நாடு மீண்டெழவும் ஒவ்வொருவரும் செபிக்க வேண்டிய கடமையை வலியுறுத்திய மும்பை கர்தினால் கிரேசியஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நமது குரல், செபம், பாடல்கள், மற்றும், கோவில் மணிகளின் வழியாக நம்பிக்கையின் ஒளியை பரவ விடுவோம், என அழைப்பு விடுத்துள்ளார், இந்திய ஆயர் பேரவையின் தலைவர்,  கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

பெந்தக்கோஸ்து பெருவிழாவை  முன்னிட்டு, இந்திய கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து செப வழிபாடு ஒன்றை ஏற்பாடு செய்து, இந்தியா எதிர்கொள்ளும் தொற்றுநோய் நெருக்கடிக்கு எதிராக இறைவனை நோக்கி இணைந்து செபித்த, மும்பைப் பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நோயாளிகள் குணமடையவும், நாடு மீண்டு எழவும் ஒவ்வொருவரும் செபிக்கவேண்டிய கடமையை வலியுறுத்தினார்.

'நம்பிக்கையின் செபம்' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில், தற்போதைய சூழலில் ஆரவாரமின்றி செயல்படும் மௌன வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், நலப்பணியாளர்கள் ஆகியோருக்காக செபித்தது முக்கிய இடம் வகித்தது.

காவல்துறையினர் உட்பட, இக்காலத்தில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுவரும் அனைவருக்கும் நன்றியையும் செபத்தையும் வெளியிட்ட கிறிஸ்தவ சபைகள், இத்தொற்றுநோய் காலத்தில் முன்னணியில் நின்று பணியாற்றுவோர் அனைவருக்கும் இறைவனின் பாதுகாப்புத் தேவைப்படுகின்றது என்பதை நினைவில் கொண்டதாக இச்செபவழிபாடு  இடம்பெற்றது என அறிவித்தனர்.

'விண்ணிலுள்ள எம் தந்தாய்' என்ற செபத்தை அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இணைந்து உரத்த குரலில் செபித்ததுடன், கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்திய தாய் மண்ணின் முழு அங்கத்தினர்கள் என்பதன் அடையாளமாக, தேசிய பண்ணைப் பாடி இச்செபக்கூட்டத்தை நிறைவு செய்தனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2020, 13:45