பாத்திமாவில் திருத்தந்தை புனித 6ம் பவுல் பாத்திமாவில் திருத்தந்தை புனித 6ம் பவுல் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-28

மரியாவைச் சந்திப்பவர்கள், கிறிஸ்துவைச் சந்திக்காமல் இருக்க முடியாது - திருத்தந்தை புனித 6ம் பவுல்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை புனித 6ம் பவுல்-10  மரியா பக்தி

திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், அன்னை மரியா மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர், மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலங்களுக்குப் பல முறை சென்று உரையாற்றினார். இவர், தன் தலைமைப்பணியில் அன்னை மரியா பற்றிய இறையியல் போதனையும், பக்தியும் அதிகம் வளரச் செய்தார். திருஅவையில் மரியியல் போதனைகள், புதிய கிறிஸ்தவ ஒன்றிப்புக் கண்ணோட்டத்தில் இடம்பெறச் செய்தார். கிறிஸ்தவ நிறைவாழ்வுக்கு, மரியா ஓர் உன்னத எடுத்துக்காட்டு என்று திருத்தந்தை அறிவித்தார். 1965ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி Mense Maio அதாவது, “மே மாதத்தில்” என்ற பொருளில் வெளியிட்ட திருமடலில், மரியாவைச் சந்திப்பவர்கள், கிறிஸ்துவைச் சந்திக்காமல் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

திருமடல்கள்

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், ஏழு திருமடல்களையும், பல திருத்தூது அறிவுரைகளையும்  வெளியிட்டுள்ளார். இவர், தனது தலைமைப் பணியின் இரண்டாவது ஆண்டில், 1964ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, இயேசுவின் தோற்றமாற்றம் விழாவன்று, Ecclesiam Suam அதாவது “உமது திருஅவை” என்ற தலைப்பில் தனது முதல் திருமடலை வெளியிட்டார். கத்தோலிக்கத் திருஅவையை, கிறிஸ்துவின் உடலோடு ஒப்பிட்டுப் பேசிய இம்மடல், முக்கியமானதொரு ஏடாகக் கருதப்படுகிறது. 1965ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி “நம்பிக்கையின் மறைபொருள்: திருநற்கருணை பற்றிய கோட்பாடு மற்றும், வழிபாடு” என்ற பொருளில் Mysterium Fidei என்ற திருமடலை வெளியிட்டார். 1966ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி, Christi Matri அதாவது “கிறிஸ்துவின் அன்னை” என்ற தலைப்பில் ஒரு திருமடலை வெளியிட்ட திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1967ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி, “மக்களின் முன்னேற்றம்” பற்றிக் கூறும் Populorum Progressio, ஜூன் 24ம் தேதி “அருள்பணியாளர்களின் கற்புடைமை” பற்றிக் கூறும் Sacerdotalis Caelibatus, மே 13ம் தேதி, “மாபெரும் அடையாளம்: புனித கன்னி மரியா மீது பக்தி” என்று பொருள்படும் Signum Magnum ஆகிய மூன்று திருமடல்களை வெளியிட்டார்.

மக்களின் முன்னேற்றம்

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் வெளியிட்ட “மக்களின் முன்னேற்றம்” என்ற திருமடலில், உலகின் பொருளாதாரம், சிலருக்கு மட்டுமன்றி, மனித சமுதாயம் முழுவதற்கும் சேவையாற்றுவதாக அமையவேண்டும் என்பதை வலியுறுத்தினார். நியாயமான கூலி, பணியில் பாதுகாப்பு, பணியிடங்களில் தரமான சூழல்கள், தொழிற்சங்கத்தில் உறுப்பினராதல், ஒன்றுமே இயலாதபோது வேலை நிறுத்தம் செய்வது, உலகின் வளங்கள் மற்றும், பொருள்களை எல்லாரும் பயன்படுத்தல் போன்றவற்றிக்கு உள்ள உரிமைகள் உட்பட, கத்தோலிக்க சமுதாயப் போதனையின் பல்வேறு பாரம்பரியக் கோட்பாடுகளை, இவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். உலகில் உண்மையாகவே அமைதி நிலவ வேண்டுமெனில், அதற்கு நீதி முக்கியம் என்பதையும், இம்மடலில் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளார். திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், தாயின் கருவறை முதல், இயல்பான மரணம் அடையும்வரை, வாழ்வு பாதுகாக்கப்படுவது பற்றிக் கூறும் Humanae Vitae எனப்படும், “மனித வாழ்வு” என்ற திருமடலில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். இவர் வெளியிட்ட ஏழு திருமடல்களில், இந்த திருமடல் மிகவும் புகழ்பெற்றது. இத்திருமடலில், திருமணம், மற்றும், தம்பதியர் உறவுகள் பற்றிய கத்தோலிக்கத் திருஅவையின் மரபுவழி கண்ணோட்டம் பற்றிப் பேசியுள்ள திருத்தந்தை, செயற்கை குடும்பக்கட்டுப்பாட்டுக்கு எதிரான திருஅவையின் கண்டனத்தையும் குறிப்பிட்டுள்ளார். திருமண உறவுகளில், இருவர் ஒன்றித்து வாழ்வது என்பதைவிட, அவை இன்னும் மேலான பண்பைக் கொண்டுள்ளது. தம்பதியர் அன்பான கடவுளோடு அன்புறவில் ஒன்றித்து, புதிய ஒரு மனிதரை உருவாக்குகின்றனர் என்று அம்மடலில் கூறியுள்ளார், திருத்தந்தை 6ம் பவுல்.

திருத்தந்தை 6ம் பவுல், சீர்திருத்தவாதி

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், திருஅவை இன்னும் அதிகமாக, மறைப்பணி திருஅவையாகச் செயலாற்றவும், உலகுக்குத் திறந்தமனதுடன் இருக்கவும், பிரிந்த கிறிஸ்தவ சபைகள் மற்றும், இறைப்பற்று அற்றவர்களுடன் உரையாடல் நடத்தவும் அழைப்பு விடுத்தது, அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்களில் மிக முக்கியமானதொன்றாகும். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் பற்றி ஒரு நேர்காணலில் பேசுகையில், இளம் அருள்பணியாளராக அவர் ஆற்றிய பணிகள்,   நமக்கெல்லாம் மாபெரும் ஒளியாக அமைந்துள்ளன என்று கூறினார். மேலும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் போன்று, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், திருஅவையின் சமுதாய நீதிப் போதனைகளை வழங்கும், ஒரு சாட்டையாக விளங்கினார். அந்தப் போதனைகள், திருஅவை கோட்பாடுகளுக்கு அடித்தளக் கற்களாக உள்ளன என்பதை வலியுறுத்தினார். திருஅவை அதிகம் ஒத்துழைப்புடன் இயங்கவேண்டும் என்பதற்காக, ஆயர்கள் மாமன்றங்களையும் வரையறுத்தார்.

திருத்தந்தை 6ம் பவுல், 'நற்செய்தி அறிவிப்பு திருத்தந்தை'

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் வெளியிட்ட, "நற்செய்தி அறிவித்தல்" பற்றிய Evangelii Nuntiandi எனப்படும் திருமடல், காலத்திற்கேற்ப எழுதப்பட்ட மாபெரும் மேய்ப்புப்பணி ஏடாகும். அந்த திருமடல், வரலாற்றில் மைல்கல் பதித்துள்ளது. திருஅவை தனக்கே தொடர்ந்து நற்செய்தி அறிவிக்கப்படவேண்டிய தேவையில் உள்ளது, இக்காலத்தில் மக்கள், போதனையாளர்களைவிட, சான்றுபகர்கின்றவர்களையே அதிகம் விரும்புகின்றனர், எனவே கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர்கள், தாங்கள் போதிப்பதை நடைமுறையில் வெளிப்படுத்த வேண்டும். நம்மிடமிருந்து எளிமையான வாழ்வு, செப உணர்வு, அனைவரிடமும் அன்பு, குறிப்பாக, ஏழைகள் மற்றும், புறக்கணிக்கப்பட்டோருடன் அன்புகாட்ட வேண்டுமென்று உலகம் எதிர்பார்க்கின்றது என்று திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கூறியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இதையே வலியுறுத்தி வருகிறார்.    

தூதரக உறவுகள்

1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி ஆய்வு மையம், அப்போல்லோ 11 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது, ஜூலை 20ம் தேதி நிலவில் இறங்கியது. இந்த வரலாற்று நிகழ்வுக்கு, வாழ்த்துச் செய்தி அனுப்பினார், திருத்தந்தை 6ம் பவுல். “மனிதர் நிலவில் நடந்தது, கடவுளின் கைவண்ண வேலையின் மகத்துவத்தை அங்கீகரிப்பதாக உள்ளது. மனிதருக்கு இத்தகைய வல்லமையைக் கொடுத்த கடவுளின் பெயருக்கு மகிமை உண்டாவதாக. இந்த வியத்தகு துவக்கத்திற்காக நாங்கள் பேரார்வமுடன் இறைவேண்டல் செய்கிறோம்” என்று திருத்தந்தை அனுப்பிய செய்தி, இன்றும், நிலவின் பரப்பில் உள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2020, 14:44