திருத்தந்தை புனித 6ம் பவுல், முதுபெரும்தந்தை அத்தனாகோரஸ் திருத்தந்தை புனித 6ம் பவுல், முதுபெரும்தந்தை அத்தனாகோரஸ்  

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-26

இனிமேல் போரே வேண்டாம், ஒருபோதும் போர் வேண்டாம். அனைத்து மக்கள் மற்றும், முழு மனித சமுதாயத்தின் இறுதிநிலையை வழிநடத்துவது அமைதியே - ஐ.நா. நிறுவனத்தில், திருத்தந்தை புனித 6ம் பவுல்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை புனித 6ம் பவுல்-8

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் முதல் அமர்வின் முடிவில், கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா மொந்தினி அவர்கள், பொதுச்சங்கத் தந்தையர்க்கு ஆற்றிய உரையில், “கிறிஸ்துவின் திருஅவையே, நீ உன்னைப் பற்றி என்ன சொல்கிறாய்?” என்ற கேள்வியை எழுப்பினார். பின்னாளில் 6ம் பவுல் என்ற பெயருடன் திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற திருத்தந்தை அவர்கள், இந்த தனது அடிப்படை கேள்விக்கு அவரே பதிலளிக்க முயற்சித்தார். அதுதான் அவர் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்கள். திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், ஆறு கண்டங்களுக்கும் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட முதல் திருத்தந்தையாவார். அவர் தனது முதல் திருத்தூதுப் பயணமாக, 1964ம் ஆண்டு சனவரி மாதத்தில், புனித பூமிக்குச் சென்றார். அச்சமயத்தில் கான்ஸ்தாந்திநோபிள் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை அத்தனாகோரஸ் (Athenagoras) அவர்களை எருசலேமில் சந்தித்தார். மேற்கத்திய திருஅவையின் உலகளாவியத் தலைவரும், அதாவது உரோம் கத்தோலிக்கத் திருத்தந்தையும், கிழக்கத்திய திருஅவையின் ஆன்மீகத் தலைவரும் அதாவது புதிய உரோம் என அழைக்கப்படும் கான்ஸ்தாந்திநோபிள் பேராயரும், 1438ம் ஆண்டில் பிளாரன்ஸ் நகர் பொதுச்சங்கத்தில் நேருக்கு நேர் சந்தித்தபின்னர், 1964ம் ஆண்டு சனவரி 5ம் தேதி, எருசலேமின் ஒலிவ மலையில், அவர்கள் முதன்முறையாகச் சந்தித்தனர். 1054ம் ஆண்டில் கிறிஸ்தவத்தில் இடம்பெற்ற மாபெரும் பிரிவினையில், இவ்விரு திருஅவைகளும் ஒன்றையொன்று புறம்பாக்கிய நிகழ்வு, இந்த சந்திப்பில் இரத்து செய்யப்பட்டது. இவ்விரு தலைவர்களும் இச்சந்திப்பின் இறுதியில் இணைந்து உலகினருக்கு வெளியிட்ட அறிக்கையில், உலகில் அனைத்து நாடுகளிலும் அமைதி மற்றும், நீதியை ஊக்கப்படுத்த, அனைத்து வழிகளிலும் முயற்சிக்குமாறு, ஆண்டவராகிய இயேசுவின் பெயரால், அரசுகளின் தலைவர்களுக்கும், உலகின் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக கூறினர்.

திருத்தூதுப் பயண திருத்தந்தை

“திருத்தூதுப் பயண திருத்தந்தை” என்ற புனைப்பெயரைப் பெற்றுள்ள திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1964ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முதல், 5ம் தேதி வரை, மும்பையில் நடைபெற்ற 38வது உலகளாவிய திருநற்கருணை மாநாட்டில் கலந்துகொண்டார். இந்தப் பயணம், ஆசியக் கண்டத்திற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட முதல் திருத்தந்தை என்ற புகழையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. 1965ம் ஆண்டு, அக்டோபர் 4ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாடு சென்று, நியுயார்க் நகரில் ஐ.நா. தலைமை நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு பொது அமர்வில், உலக அமைதிக்காக உருக்கமான உரை ஒன்று ஆற்றினார். அச்சமயத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு, வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்தது. எனவே திருத்தந்தை அமைதிக்காக கெஞ்சி கேட்டுக்கொண்டார். இவர், நியுயார்க் நகரிலுள்ள Yankee விளையாட்டு அரங்கத்தில் திருப்பலியும் நிறைவேற்றினார். இப்பயணமும், ஒரு திருத்தந்தை அமெரிக்க ஐக்கிய நாடு சென்ற முதல் திருத்தூது பயணமாக அமைந்தது. போலந்தில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியதன் ஆயிரமாம் ஆண்டு நிறைவைமுன்னிட்டு, அந்நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு, 1966ம் ஆண்டில் இருமுறை போலந்து அரசுக்கு விண்ணப்பித்தார். ஆனால் இருமுறையும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. போர்த்துக்கல் நாட்டு பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சிகொடுத்த ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 1967ம் ஆண்டில், பாத்திமா திருத்தலம் சென்று செபித்தார் திருத்தந்தை 6ம் பவுல். அதே ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை, துருக்கி நாட்டில், இஸ்தான்புல் மற்றும், எபேசு நகரங்களில் திருத்தூதுப் பயணங்களை அவர் மேற்கொண்டார். இப்பயணம் கிறிஸ்தவ ஒன்றிப்பு முக்கியத்துவம் வாயந்தது. இரண்டாவது முறையாக, இஸ்தான்புல் நகரில், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை Athenagoras அவர்களை, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் சந்தித்தார,.

நீண்ட திருத்தூதுப் பயணம்

1968ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முதல், 25ம் தேதி வரை, தென் அமெரிக்க நாடான, கொலம்பியாவில், பொகோட்டா நகரில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1969ம் ஆண்டு ஜூன் மாதத்தில், சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவா சென்று, ILO எனப்படும் உலக தொழில் நிறுவனத்திலும், WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்திலும் உரையாற்றினார். அதற்கு அடுத்த மாதத்தில், கிழக்கு ஆப்ரிக்காவிலுள்ள உகாண்டா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். ஆப்ரிக்காவுக்குச் சென்ற முதல் திருத்தந்தை என்ற பெயரையும் இவர் பெற்றார். 1970ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை, பத்து நாள்கள், ஈரான் நாட்டு தெஹ்ரான், பாகிஸ்தானின் டாக்கா, பிலிப்பீன்சின் மனிலா, தற்போதைய சமோவாவான மேற்கு சமோவா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ஹாங்காங், கடைசியாக இலங்கை ஆகிய நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். 1970ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி, திருத்தந்தை, மனிலா பன்னாட்டு விமான நிலையத்தில், விமானத்திலிருந்து இறங்கி, அப்போதைய அரசுத்தலைவர் பெர்டினான்ட் மார்க்கோஸ் அவர்களுடன், நடந்துவந்தபோது, பொலிவியா நாட்டு, 35 வயது நிரம்பிய ஓவியரான, Benjamín Mendoza y Amor Flores என்பவர், அருள்பணியாளரின் நீண்ட உடையில், கையில் சிலுவையை ஏந்திக்கொண்டு திருத்தந்தையின் கழுத்தியால் கத்தியால் குத்தி 2 முறை குத்தி கொலை செய்ய முயற்சி செய்தார். ஆனால் மெய்காப்பாளர்களால், பெரிய அளவில் காயங்கள் ஏதுமின்றி திருத்தந்தை காப்பாற்றப்பட்டார். மென்டோசா வைத்திருந்த கத்தியின் இருபுறமும், "குண்டுகள், மூடநம்பிக்கைகள், கொடிகள், அரசுகள், குப்பைகள், இராணுவங்கள், மற்றும், கழிவு" என்று எழுதப்பட்டிருந்தது. நீதி விசாரணையில் மென்டோசா அவர்கள், நான் இந்த உலகை மூடநம்பிக்கைகளிலிருந்து காப்பாற்றுவேன் என்று சொல்லியுள்ளார்.

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இந்த நீண்ட பயணத்தில், உலகின் பல்வேறு மக்களை திருத்தந்தை சந்தித்தார். இந்தப் பயணத்திற்குப்பின் திருத்தந்தை வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை. இவர், மேற்கொண்ட ஒன்பது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்கள் அனைத்திலும், உலக அமைதிக்கும், சமுதாய நீதிக்கும் அழைப்பு விடுத்தார். உலகில் பசியும், எழுத்தறிவின்மையும் அகற்றப்பட, எல்லாரும் கடவுளில் மனித உடன்பிறந்த உணர்வில் வாழ, உலகளாவிய ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுத்தார். இனிமேல் போரே வேண்டாம், ஒருபோதும் போர் வேண்டாம். அனைத்து மக்கள் மற்றும், முழு மனித சமுதாயத்தின் இறுதிநிலையை வழிநடத்துவது அமைதியே என்று, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், ஐ.நா. நிறுவனத்தில் உரக்கப் பேசினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2020, 16:08