Rohingya புலம்பெயர்ந்தோர் Rohingya புலம்பெயர்ந்தோர்  

Rohingya புலம்பெயர்ந்தோர் மத்தியில் கோவிட்-19

பங்களாதேஷில், 11 இலட்சம் Rohingya புலம்பெயர்ந்தோர் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், 2017ம் ஆண்டில் மியான்மாரின் Rakhine மாநிலம் தாக்கப்பட்டபோது வெளியேறியவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பங்களாதேஷ் நாட்டில் Rohingya புலம்பெயர்ந்தோர் வாழ்கின்ற Cox Bazar முகாம்கள், நலவாழ்வு வசதிகளின்றியும், மக்கள் நெருக்கம் அதிகமாகவும் இருப்பதால், இம்மக்களுக்கு கோவிட்-19 கிருமி தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளது என்று, பங்களாதேஷ் தலத்திருஅவை கவலை தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் சமுதாயப்பணி அமைப்பான காரித்தாசின் தகவல்தொடர்பு அதிகாரி Immanuel Chayan Biswas அவர்கள், இந்த கொள்ளைநோய் காலத்தில், மியான்மார் நாட்டின் Rohingya புலம்பெயர்ந்தோரின் நிலைகுறித்து எடுத்துரைக்கையில் இவ்வாறு கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோய் தொற்றாமல் இருப்பதற்கு கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளில் சமூக விலகல் முக்கியமானது என்றும், மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற  புலம்பெயர்ந்தோர் முகாமில், இந்த விதிமுறையைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினம் என்றும், Biswas அவர்கள் கூறினார்.

Cox Bazar முகாம்களில், ஓர் அறையில் பத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர் எனவும், புலம்பெயர்ந்தோர் அனைவருக்கும் பொதுவான கழிப்பறைகளே உள்ளன எனவும் கூறிய Biswas அவர்கள், தண்ணீர் வசதிகள் மற்றும், உணவு பரிமாறப்படும் இடங்கள் போன்றவையும் மிகக் குறைவாகவே உள்ளன எனவும் தெரிவித்தார்.

இத்தகைய நிலைகளால், கோவிட்-19 கொள்ளைநோயால் Rohingya புலம்பெயர்ந்தோர், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றுரைத்த, பங்களாதேஷ் காரித்தாஸ் அலுவலகரான Biswas அவர்கள், அம்மக்கள் ஏற்கனவே, மியான்மாரில் தங்களின் சொந்த இடங்களைவிட்டு வெளியேறியவர்கள், வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டிருப்பவர்கள், பங்களாதேஷ் நாட்டை இயற்கைப் பேரிடர்கள் தாக்குகையில் அவற்றிற்குப் பலியாகுகின்றவர்கள் என, அம்மக்களின் நிலைமையை விளக்கினார்.

பங்களாதேஷில், 11 இலட்சம் Rohingya புலம்பெயர்ந்தோர் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், 2017ம் ஆண்டில் மியான்மாரின் Rakhine மாநிலம் தாக்கப்பட்டபோது வெளியேறியவர்கள். Rohingya புலம்பெயர்ந்தோரில் 46க்கும் அதிகமானோர் கோவிட்-19 கொள்ளைநோயால் தாக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2020, 13:39