ஆப்ரிக்க, ஐரோப்பிய ஆயர்களின் இணை அறிக்கை

ஆப்ரிக்க மற்றும், ஐரோப்பியத் தலைவர்கள் மேற்கொள்ளவிருக்கும் உச்சி மாநாடு, மக்களை மையப்படுத்தியதாகவும், இவ்விரு கண்டங்களின் பொறுப்புள்ள பங்கேற்பு கொண்டதாகவும் அமையவேண்டும் – ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில், ஆப்ரிக்க ஒன்றியத் தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் மேற்கொள்ளவிருக்கும் உச்சி மாநாடு, மக்களை மையப்படுத்தியதாகவும், இவ்விரு கண்டங்களின் பொறுப்புள்ள பங்கேற்பு கொண்டதாகவும் அமையவேண்டும் என்று, ஆப்ரிக்க, ஐரோப்பிய ஆயர் பேரவைகளைச் சேர்ந்த ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பான SECAM அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பான COMECE அமைப்பும், இணைந்து, இணையதளம் வழியே நடத்திய ஒரு கருத்தரங்கின் முடிவில், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

"நீதி தழைத்தோங்குவதாக; நிறையமைதி என்றென்றும் நிலவுவதாக" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில், நோய், வறுமை, பட்டினி ஆகிய கொடுமைகளால் பாதிக்கப்பட்டோரைக் குறித்த எண்ணங்கள் முதன்மை பெற்றுள்ளன.

கோவிட் 19 கொள்ளைநோயால், ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விரு கண்டங்களின் மறுமலர்ச்சிக்காக, கூட்டுறவு முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, ஆயர்கள், தங்கள் அறிக்கையில், இவ்விரு கண்டங்களின் தலைவர்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றமே கத்தோலிக்கத் திருஅவையின் நிலைப்பாடு என்பதை இவ்வறிக்கையில் வெளியிட்டுள்ள ஆயர்கள், தலைவர்கள் சிந்திக்கும் முன்னேற்றத் திட்டங்கள், வறியோர் துவங்கி, ஒவ்வொரு மனிதரையும் அடையவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

நலவாழ்வு பராமரிப்பு, கல்வி, சுத்தமான குடிநீர், தேவையான உணவு ஆகிய எண்ணங்கள், இந்த உச்சிமாநாட்டில் முதலிடம் பெறவேண்டும் என்றும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, மற்றும் ஆப்ரிக்க கண்டத்திலிருந்து சூறையாடப்பட்டு, ஐரோப்பிய வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் நிதிகளை வெளிக்கொணர்தல் ஆகிய முயற்சிகளை ஆப்ரிக்க, மற்றும் ஐரோப்பிய கண்டங்களின் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறியுள்ளது.

இவ்விரு கண்டங்களும் இயற்கை வளங்கள் மிகுந்தவை என்பதை தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டும் ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Laudato si’ என்ற திருமடலில் கூறியுள்ள பரிந்துரைகளை மனதில் வைத்து, சுற்றுச்சூழலோடும் இயற்கையோடும் இயைந்து செல்லும் முன்னேற்றத் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2020, 13:56