இந்தியா கோவிட்-19 விழிப்புணர்வு இந்தியா கோவிட்-19 விழிப்புணர்வு 

தமிழகம், மியான்மார்: மே 14, வியாழன் நோன்பு, செபம்

துறவியர் அனைவரும், தங்களால் இயன்ற விதத்தில், பிறசமயத்தவருடன் இணைந்து திருத்தந்தையின் இந்த வேண்டுகோளை நிறைவேற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன் - பேராயர் அந்தோனி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து நாம் அனைவரும் விடுபடவும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் விரைவில் குணம் பெறவும், உலகினர் அனைவருடன் இணைந்து, மே 14ம் தேதியை, நோன்பு மற்றும், செப நாளாகக் கடைப்பிடிக்குமாறு, தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை, கத்தோலிக்கர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக ஆயர்களின் சார்பில், தமிழக ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து நாம் அனைவரும் விடுபடவும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் விரைவில் குணம் பெறவும், தொடர்ந்து செபித்தும், பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டும் வருகின்றோம், அதன் தொடர்ச்சியாக, மே 3ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, இதே கருத்துக்காக, உலகினர் எல்லாருடனும் நாமும் இணைந்து மே 14, வருகிற வியாழனன்று, நோன்பிருந்து, இறைவனிடம் வேண்டுதல்களை எழுப்புவோம், மற்றும், பிறரன்புச் செயல்களில் ஈடுபடுவோம் என்று, பேராயர் அந்தோனி அவர்கள் கூறியுள்ளார்.

மாநில பல்சமய உரையாடல் பணிக்குழுவின் வழிகாட்டுதல் மற்றும், அந்தந்த மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழுவின் முன்முயற்சிகளுடன் இதனைச் செயல்படுத்தும்படி அன்புடன் வேண்டுகிறேன் என்றும், பேராயரின் அறிக்கை கூறுகிறது.

துறவியர் அனைவரும், தங்களால் இயன்ற விதத்தில், பிறசமயத்தவருடன் இணைந்து திருத்தந்தையின் இந்த வேண்டுகோளை நிறைவேற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று, பேராயர் அந்தோனி அவர்கள், தன் அறிக்கையில் கூறியுள்ளார். (Ind.Sec)  

மியான்மார் ஆயர் பேரவை

மேலும், கோவிட்-19 கொள்ளைநோய் தாக்கத்திலிருந்து உலகினர் அனைவரும் விடுபட திருத்தந்தை அழைப்பு விடுத்திருக்கும் நோன்பு மற்றும் செப நாளில், மியான்மார் கத்தோலிக்கரும் இணையுமாறு, அந்நாட்டு ஆயர் பேரவை (CBCM), மே 07, இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மே 14, வருகிற வியாழனன்று, மியான்மாரின் 16 மறைமாவட்டங்களின் விசுவாசிகள், இச்செப நாளில் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 May 2020, 14:16