இயேசு அவரை நோக்கி "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு" என்றார். - மாற்கு 7, 34 இயேசு அவரை நோக்கி "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு" என்றார். - மாற்கு 7, 34 

விவிலியத்தேடல்: காது கேளாதவரும், திக்கிப்பேசுபவரும்... 2

'திறக்கப்படு' என்ற கட்டளை வழியே, நல்லவற்றைப் பார், நல்லவற்றைப் பேசு, நல்லவற்றைக் கேள் என்று ஆணித்தரமாக கூறும் இயேசு, அத்துடன், தீமைகளால் துன்புறுவோரை பார்க்கவும், அவர்களுக்கு செவிமடுக்கவும், அவர்களைப்பற்றிப் பேசவும், நம் உள்ளங்களைத் திறக்கவேண்டும் என்று அழைக்கிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: காது கேளாதவரும், திக்கிப்பேசுபவரும்... 2

1981ம் ஆண்டு, மே மாதம் 13ம் தேதி, பாத்திமா அன்னை மரியாவின் திருநாளன்று, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டார். அந்த ஆண்டு, மே 13ம் தேதி, இந்த ஆண்டைப்போலவே, புதன்கிழமையாக இருந்ததால், திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்க வந்த வேளையில், வளாகத்தில் இருந்த Mehmet Ali Ağca என்ற இளையவர், அவரை நோக்கி 4 முறை சுட்டார்.

அந்த கொலை முயற்சியிலிருந்து அன்னை மரியா தன்னைக் காத்ததாகக் கூறிய திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அந்நிகழ்வின் நினைவாக, அவர் மீது பாய்ந்த குண்டுகளில் ஒன்றை, பாத்திமா திருத்தலத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த குண்டு, தற்போது, அத்திருத்தலத்தில், அன்னைக்குச் சூடப்பட்டுள்ள மகுடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

1920ம் ஆண்டு, மே மாதம் 18ம் தேதி பிறந்த Karol Józef Wojtyła என்ற குழந்தை, பின்னர், 2ம் ஜான் பால் என்ற பெயருடன், திருஅவையின் தலைவராக 27 ஆண்டுகள் பணியாற்றி, 2005ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். அவரது, பிறப்பின் நூற்றாண்டையும், அவரது மரணத்தின் 15ம் ஆண்டையும் சிறப்பிக்கும் இவ்வேளையில், அவரது வாழ்வில், 1981ம் ஆண்டு, மே மாதம் 13ம் தேதி நிகழ்ந்த இந்நிகழ்வையும் எண்ணிப் பார்க்கிறோம்.

புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் சுடப்பட்ட வேளையில், தான் வலம் வந்த வாகனத்திலேயே அவர் சரிந்து விழுந்தபோது, அவரை, அன்னை மரியா தாங்கி நின்றது போன்ற உருவங்கள், வலைத்தளங்களில் வெளியாகி, பல கோடி மக்களால் பார்க்கப்பட்டது.

நோயினால் சரிந்துவிழும் மனுக்குலத்தை அன்னை மரியா தாங்கி நிற்கிறார் என்ற நம்பிக்கைக்கு, உலகெங்கிலும் உள்ள அன்னை மரியாவின் திருத்தலங்களே சான்று. ஒவ்வோர் ஆண்டும் மே 13ம் தேதி, பாத்திமா அன்னை மரியா திருத்தலத்தில், இலட்சக்கணக்கில் பக்தர்கள் கூடிவருவர். இவ்வாண்டு, தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், உலகமே முடங்கிக்கிடக்கும் சூழலில், முதல்முறையாக, பாத்திமா திருத்தலத்தில், பக்தர்களின் பங்கேற்பின்றி, இவ்விழாவின் திருப்பலிகளும், மரியன்னை பக்தி முயற்சிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணுக்குத் தெரியாத ஒரு தொற்றுக்கிருமியின் தாக்கம், உலகெங்கிலும், அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களையும் மூடிவைத்துவிட்டது. லூர்து நகர், பாத்திமா நகர், வேளாங்கண்ணி போன்ற அன்னை மரியாவின் திருத்தலங்கள் அனைத்திலும், பக்தர்களின் வருகை தடைசெய்யப்பட்டுள்ளது. ஆண்டவன் வாழும் ஆலயங்களை மூடிவைத்திருக்கும் இந்தத் தொற்றுக்கிருமியைக் குறித்து பல கேள்விகள் நம்மிடையே வலம்வருகின்றன.

துன்பம், நோய், ஆகியவற்றைக் குறித்த கேள்விகள், மனித சமுதாயத்தை எப்போதும் தாக்கிவந்துள்ளன. இக்கேள்விகளுக்கு, விவிலியத்தின் ஒரு சில பகுதிகள் தெளிவைத் தருகின்றன. அவற்றில் ஒன்று, இறைவாக்கினர் எசயாவின் நூலில் பதிவாகியுள்ளது. இப்பகுதியில், வெறும் வேதனை மட்டும் வெளிப்படவில்லை; மாறாக, அந்த ஆழமான வேதனையிலும், இறைவனிடம் கொண்ட நம்பிக்கை, இறைவாக்கினருடைய வார்த்தைகளில் வெளிச்சமாகிறது.

எசாயா 35: 3-6

தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் வந்து உங்களை விடுவிப்பார்.” அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்.

காது கேளாதோரின் செவிகள் கேட்கும்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர் என்று இறைவாக்கினர் எசாயா கூறியுள்ள நம்பிக்கை வரிகளையொத்த கனவை, இயேசு, நாசரேத்தில், தொழுகைக்கூடத்தில், தான் ஆற்றப்போகும் பணியாக அறிமுகம் செய்துவைத்தார். (லூக்கா 4: 16-21)

கேட்கும் திறனற்றோர் கேட்பதும், பேச முடியாதவர்கள் பேசுவதும், தன் பணியின் முக்கிய அங்கங்கள் என்று கூறிய இயேசு, அவற்றை, தான் சென்ற இடங்களிலெல்லாம் நடைமுறைப்படுத்தினார் என்பதை அறிவோம். அந்தப் புதுமைகளில் ஒன்றை, நற்செய்தியாளர் மாற்கு தனிப்பட்ட முறையில் பதிவு செய்துள்ளதை, நாம் கடந்த வாரம் சிந்திக்க ஆரம்பித்தோம். இன்று தொடர்கிறோம்.

மாற்கு நற்செய்தி 7: 32

காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரை, சிலர், இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு, அவரை வேண்டிக்கொண்டனர் என்ற சொற்களுடன், நற்செய்தியாளர் மாற்கு, இப்புதுமையை அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிமுகக் கூற்றின் பொருளை சென்ற வாரம் சிந்தித்தோம். இதைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்ததை, இவ்வாறு வாசிக்கிறோம்.

மாற்கு நற்செய்தி 7: 33-37

இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு" என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!" என்று பேசிக்கொண்டார்கள்.

குறையுள்ள அம்மனிதரைக் குணமாக்க இயேசு பின்பற்றிய வழிகள், நமக்கு, சில வாழ்க்கைப்பாடங்களைச் சொல்லித்தருகின்றன. இயேசு விரும்பியிருந்தால், அம்மனிதரை, மக்கள் நடுவில் நிறுத்தி, ஒரே ஒரு சொல்லால், அவரைக் குணமாக்கியிருக்கலாம். அவ்விதம் இயேசு, மக்கள் நடுவே அம்மனிதரை, ஒரு காட்சிப் பொருளாக வைத்து, இப்புதுமையைச் செய்திருந்தால், அவரது பேரும், புகழும் இன்னும் தீவிரமாகப் பரவியிருக்கும். ஆனால், குணம்பெற்ற அம்மனிதரோ சங்கடத்தில் ஆழ்ந்திருக்கலாம்.

அம்மனிதர், ஏற்கனவே, பல நேரங்களில், மக்கள் நடுவே, காட்சிப்பொருளாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கலாம். அவரது நிலையைக் கண்டு பரிதாபப்பட்டவர்களை அவர் ஒவ்வொரு நாளும் சந்தித்திருப்பார். பாவம் செய்து, கடவுளின் தண்டனையைப் பெறுபவருக்கு என்ன நிகழும் என்பதைக் கூற, மதத் தலைவர்கள், அவரை, ஓர் எடுத்துக்காட்டாக, ஒரு காட்சிப் பொருளாக, மக்களுக்குக் காட்டியிருக்கக்கூடும். அத்தகைய ஒரு சூழலில் வாழ்ந்த அம்மனிதரை, மீண்டும் ஒரு முறை, காட்சிப்பொருளாகப் பயன்படுத்தி, தனக்குள்ள சக்தியை மக்கள் முன் விளம்பரப்படுத்த இயேசு விரும்பவில்லை. மாறாக, அவரை, தனியே அழைத்துச் சென்றார்.

நம் நற்செயல்களை மற்றவர்கள் காணவேண்டும் என்ற ஆவலுடன், மற்றவர்களை, குறிப்பாக, தம் குறைகளைத் தீர்க்க, நம்மை, தேடிவருவோரை, விளம்பரப்பொருள்களாகப் பயன்படுத்துவது சரியா, தவறா என்பதைச் சிந்திக்க இயேசு நமக்கு சவால் விடுக்கிறார். கோவிட் 19 நெருக்கடியால் துன்புறும் கோடான கோடி மக்களுக்கு உதவிகள் செய்வோர், உலகெங்கும் உள்ளனர். இவர்களில் ஒரு சிலர், தாங்கள் உதவிகள் செய்வதை, படங்களாக, காணொளிகளாகப் பதிவுசெய்து, ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில், வெளியிட்டு வருகின்றனர்.

உதவிகள் பெறுவோரின் முகங்களை மறைத்து, இந்த படங்களையோ, காணொளிகளையோ வெளியிடும் உக்திகள் இன்று ஊடகங்களில் உள்ளன என்பதை அறிவோம். அந்த வழிகளைப் பின்பற்றி, உதவிகள் பெறுவோரின் தன்மானத்தைப் பாதுகாக்கலாமே! இன்றையச் சூழலில் இயேசு உதவிகள் செய்திருந்தால், அதை அவர் இப்படித்தான் செய்திருப்பார். தன் புதுமைகள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் இயேசு கவனமாக இருந்தார் என்பதை நற்செய்தியின் பல நிகழ்வுகளில் நாம் காண்கிறோம். அதே எண்ணத்தை, இந்தப் புதுமையின் இறுதி வரிகளில் காண்கிறோம்.

தன் குறைபாடுகளால் மனம் நொந்து, நம்பிக்கையிழந்து, மக்களை விட்டு விலகி வாழ்ந்த அம்மனிதரை, தனியே அழைத்துச் சென்றதன் வழியே, இயேசு, அம்மனிதருக்குத் தந்த முக்கியத்துவம் வெளிப்படுகிறது. தாய்க்குரிய பரிவோடு, இயேசு, அம்மனிதரின் செவிகளையும், நாவையும் தொட்டு குணமாக்குகிறார். அத்துடன், அவர் பயன்படுத்திய "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு" என்ற சொல்லும், செயலும், இன்று நாம் பின்பற்றும் திருமுழுக்குச் சடங்கில் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவருக்கு திருமுழுக்கு வழங்கப்படும் வேளையில், அந்த அருளடையாளத்தை வழங்குபவர், திருமுழுக்கு பெறுபவரின் செவிகளிலும், நாவிலும் சிலுவை அடையாளம் வரைந்து, பின்வரும் ஆசி மொழிகளைக் கூறுகிறார்:

"செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் ஆண்டவர் இயேசு செய்தருளினார். நீ விரைவில் அவரது வார்த்தையை, தந்தையாகிய இறைவனின் புகழும், மகிமையும் விளங்க, காதால் கேட்கவும், அந்த நம்பிக்கையை, நாவால் அறிக்கையிடவும் அவரே அருள் செய்வாராக"

திருமுழுக்கு பெற்றபோது, இறை வார்த்தையைக் கேட்கவும், அதை பறைசாற்றவும், நாம் பெற்ற இந்த ஆசீரை மறந்துவிடச் செய்யுமளவு, இவ்வுலக சப்தங்கள், நம்மை நிறைத்துவிட்டன. இந்தப் புதுமையைச் சிந்திக்கும் இவ்வேளையில், இயேசு நம் செவிகளையும், நாவையும், கண்களையும் தொட்டு, 'திறக்கப்படு' என்ற வார்த்தைகளைச் சொல்லவேண்டும் என வேண்டிக்கொள்வோம்.

தீமைகளைப் பார்க்காதே, கேட்காதே, சொல்லாதே என்று மூன்று குரங்குகள் வழியாக மகாத்மா காந்தி சொன்னார். இயேசுவின் 'திறக்கப்படு' என்ற கட்டளை, நல்லவற்றைப் பார், நல்லவற்றைப் பேசு, நல்லவற்றைக் கேள் என்று ஆணித்தரமாக சொல்கிறது. அத்துடன், தீமைகளால் துன்புறுவோரை பார்க்கவும், அவர்களுக்கு செவிமடுக்கவும், அவர்களைப்பற்றிப் பேசவும், நம் உள்ளங்களைத் திறக்கவேண்டும் என்று இயேசு அழைக்கிறார்.

வறுமை, நோய் ஆகிய சிறைகளில் நாம் சிக்கியிருக்கும்போதும், இச்சிறைகளில் சிக்கி இருப்பவர்களைச் சந்திக்கும்போதும், இறைவாக்கினர் எசாயாவின் நம்பிக்கைத் தரும் சொற்களை உண்மையாக்குவோம். இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தால்,  பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.... இவ்வுலகில், நோய்களையும், அநீதிகளையும் எதிர்க்கும் துணிவை நாம் பெறுவோம். இத்தகைய நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள, இறைமகனும், பாத்திமா அன்னை மரியாவும் நமக்குத் துணை புரிவார்களாக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 May 2020, 14:20