தேடுதல்

நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். - தி.பணிகள் 2,3 நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். - தி.பணிகள் 2,3 

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா : ஞாயிறு சிந்தனை

மனித குடும்பத்தை கூறுபோடும் பிளவுகளையும், பிரிவுகளையும், மீண்டும் உருவாக்காமல், ஒரே குடும்பத்தை கவனமாகக் கட்டியெழுப்பும் மனதை, தூய ஆவியார், நமக்குத் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா : ஞாயிறு சிந்தனை

இஞ்ஞாயிறன்று, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழாவுக்கு வழங்கப்படும் மற்றொரு பெயர் பெந்தக்கோஸ்து. ‘பெந்தக்கோஸ்து’ என்ற சொல்லுக்கு, ஐம்பதாம் நாள் என்று பொருள். வழிபாட்டு ஆண்டில், உயிர்ப்புப் பெருவிழாவுக்கும், பெந்தக்கோஸ்து நாளுக்கும் இடைப்பட்ட 50 நாள்களில் பல்வேறு விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு, சென்ற வாரம், விண்ணேற்றப் பெருவிழா, இந்த ஞாயிறு, தூய அவியாரின் வருகைப் பெருவிழா என்று... வரிசையாக, பல விழாக்கள், வழிபாட்டு ஆண்டின் இந்தக் காலக்கட்டத்தை நிறைக்கின்றன. அதேபோல், தூய ஆவியாரின் வருகைப்பெருவிழாவையடுத்து, மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா என்று விழாக்கள் தொடர்கின்றன.

இவ்வாண்டோ, தவக்காலம் துவங்கி, புனித வாரம், உயிர்ப்புப்பெருவிழா, அதைத்தொடர்ந்த அனைத்து ஞாயிறுகளிலும் நமது திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களை, இல்லங்களில் இருந்தவண்ணம் கொண்டாடினோம். வழிபாட்டு விழாக்கள் மட்டுமின்றி, நமது இல்ல விழாக்களையும் இதே நிலையில் கொண்டாடி வருகின்றோம்.

வழிபாட்டு விழாக்களையோ, வாழ்வின் விழாக்களையோ, கொண்டாடினோம், அல்லது, கொண்டாடுகிறோம், என்று சொல்லும்போது, எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதைக் காட்டிலும், எதைக் கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது. கொண்டாட்டங்களுக்கு உலகம் வகுத்துள்ள இலக்கணம், அளவுகோல் ஆகியவை, கொண்டாட்டங்கள் எப்படி அமையவேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆணிவேரான உண்மைகள். கொண்டாட்டங்களுக்கென உலகம் வகுத்துள்ள இலக்கணத்தின்படி, இந்த மறையுண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க, அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், அப்படி நடந்ததாகத் தெரியவில்லை! மாறாக, இந்நிகழ்வுகள், முதன்முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன.

எப்போது, எப்படி நடந்ததென்றே தெரியாமல் நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை, உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம், விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் வருகை, அன்னை மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய ஓர் அனுபவம். கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இம்மறையுண்மைகள் அனைத்துமே, உலகின் கவனத்தை ஈர்க்காமல் நடைபெற்றன.

இதையொத்த ஒரு சூழலை, கொரோனா கிருமியின் உலகளாவியப் பரவல் இவ்வாண்டு நமக்கு உருவாக்கியுள்ளது. இந்த மறையுண்மைகள் முதல்முறை நிகழ்ந்தபோது நிலவிய அமைதியானத் தருணங்களை கடந்த சில வாரங்களாக நாம் வாழ்ந்துவருகிறோம். இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போன வேளையில், இதுவரை நாம் தவறவிட்ட பல்வேறு உண்மைகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்குள் உருவாகியிருக்கக்கூடும். அவ்வுண்மைகளில் ஒன்றாக, விழாக்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றைப்பற்றிய ஒரு வேறுபட்ட புரிதலும் உருவாகியிருக்க வாய்ப்புக்கள் உண்டு.

‘கொண்டாட்டம்’ என்ற சொல்லுக்கு புது இலக்கணம் தரும் வகையில், இவ்விழாக்களை கொண்டாடிய இயேசுவும், அவரது அன்னையும், சீடர்களும், நமக்குப் பாடங்களைச் சொல்லித் தருகின்றனர். கொண்டாட்டம் என்பது, பிறரது கவனத்தை ஈர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிராமல், நாம் கொண்டாடும் விழாவின் மையக்கருத்து, எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருக்கவேண்டும். அவ்விதம் அமையும் கொண்டாட்டங்கள், ஒருநாள் கேளிக்கைகளாக இல்லாமல், வாழ்நாளெல்லாம் நமக்குள் மாற்றங்களை உருவாக்கும். இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள், முதல்முறை கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல், ஆழமான அர்த்தங்களை விதைத்ததால், இருபது நூற்றாண்டுகள் சென்றபின்னரும், இவ்விழாக்களில் வாழ்வுக்குத் தேவையான புதுப்புது அர்த்தங்களை நம்மால் காணமுடிகிறது.

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா வழங்கும் பல்வேறு அர்த்தங்களில் ஒன்று - அவர் வானிலிருந்து இறங்கிவந்து சிறிதுகாலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடும் இறைவன் அல்ல, மாறாக, அவர் நமக்குள் எப்போதும் உறைந்திருக்கும் இறைவன் என்ற உண்மை. அருளின் சுனையாக நமக்குள் என்றும் உறையும் இறை ஆவியாரை உணராமல், நாம், நம் தாகத்தைத் தணிக்க, கானல் நீரை தேடிக்கொண்டிருக்கிறோம்.

கடலில் பயணம் செய்துகொண்டிருந்த கப்பலொன்று திடீரென தரைதட்டி நின்றது. ஒரு வாரமாக முயன்றும், கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டுசெல்ல முடியவில்லை. கப்பலில் ஓரளவு உணவு இருந்ததால், அவர்களால் சமாளிக்க முடிந்தது. ஆயினும், அவர்களிடமிருந்த குடிநீர் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அவர்கள் தாகத்தால் துடித்தனர்.

அப்போது அவ்வழியே வந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்களிடம், "எங்களுக்குக் குடிநீர் தேவை" என்ற அவசரச்செய்தியை அனுப்பினார், கப்பல் தலைவர். "நீங்கள் இருக்கும் இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்துப் பருகுங்கள்" என்ற பதில் செய்தி வந்தது. கடல் நீரைக் குடிக்கச் சொல்வதற்கு இவர்கள் யார் என்று, கப்பல் தலைவர், கடும்கோபத்துடன் கீழ்த்தளத்திற்குச் சென்றார். அவர் சென்றபின், அருகில் நின்ற கப்பல் பணியாளர்களில் ஒருவர், தங்கள் கப்பல் நின்ற இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்தார். அந்த நீரை அவர் சுவைத்தபோது, அது சுத்தமான குடி நீராக இருந்ததை உணர்ந்தார். அந்தக் கப்பல் தரைதட்டி நின்ற இடம், பெரும் நதியொன்று கடலில் கலக்கும் இடம்.

குடிநீர் சூழ்ந்திருந்த நீர்பரப்பில் நின்றுகொண்டே தாகத்தால் துடித்த கப்பல் பயணிகளைப் போலத்தான் நாமும்... வாழ்வுப் பயணத்தில் நம்மைச் சூழ்ந்துள்ள எத்தனையோ நன்மைகளை உணராமல், நமக்குள் புதைந்திருக்கும் கருவூலங்களை தெரிந்துகொள்ளாமல், தாகம் கொண்டு தவிக்கிறோம். நம்முள் ஊற்றெடுக்கும் நன்மைகளைப் புரிந்துகொள்ளாமல், தொடுவானங்களை, தூரத்துக் கானல்நீரை, விலகி ஓடும் நிழல்களை நாம் துரத்துவதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணாக்குகிறோம். பல நேரங்களில், இந்தப் பொய்யான மாயைகளைப் பெறுவதற்கு நம்மிடம் உண்மையாய் இருக்கும் குடும்பம், தொழில், நண்பர்கள் என்ற கொடைகளை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.

நமக்குள் இருக்கும் நல்லவற்றை தெளிவுபடுத்தும் ஒளியாகவும், நல்லவற்றை உருவாக்கும் ஊற்றாகவும் நம்முள் எப்போதும் உறைந்திருப்பவர், தூய ஆவியார். இவரது வருகைப் பெருவிழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில், இவர் என்றும் நம்முள் உறையும் இறைவன் என்பதை, முழுமையாக நம்பும் வரத்தை, வேண்டுவோம்.

இன்று நாம் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ஆம்... தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவை நாம் திருஅவை பிறந்தநாள் என்றும் அழைக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறக்கும்போது, அக்குழந்தையைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருக்கும். திருஅவை என்ற குழந்தை பிறந்தபோதும் பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. திருஅவை என்ற குழந்தை பிறந்த விதம், பிறந்ததும் அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் இவற்றை நாம் சிந்திப்பது பயனளிக்கும்.

திருஅவை என்ற குழந்தை பிறந்தது ஒரு குழுவில், ஒரு குடும்பத்தில். தூய ஆவியாரின் வருகை என்ற அனுபவம், தனியொரு மனிதருக்கு, காட்டிலோ, மலையுச்சியிலோ ஏற்பட்ட ஓர் அனுபவம் அல்ல. ஓர் இல்லத்தின் மேலறையில், அன்னை மரியாவுடன் செபத்தில் இணைந்திருந்த சீடர்கள் நடுவில் (காண்க. தி.பணிகள் 1:14), தூய ஆவியார் இறங்கி வந்தபோது, திருஅவை பிறந்தது.

பொதுவாக, ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் ஒருவருக்கு இறை அனுபவம் கிடைக்கும் என்று ஏறத்தாழ எல்லா மதங்களும் சொல்கின்றன. கிறிஸ்தவ மதத்திலும், இத்தகைய தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றிய உண்மைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், இந்த அனுபவத்துடன் நாம் நின்றுவிடுவதில்லை. குழுவாய், குடும்பமாய் நாம் செபத்தில் இணைந்து வரும்போதும், ஆழ்ந்த இறை அனுபவம் உருவாகிறது என்பதை, அந்த மேலறையில், தூய ஆவியார் வந்திறங்கிய நிகழ்வு நமக்குச் சொல்லித்தருகிறது.

அர்த்தமுள்ள வகையில் மனிதர்கள் இணைந்து வருவதைத் தடுக்கும் வழிகள் இன்று உலகில் பெருகி வருகின்றன. நாம் வாழும் இன்றைய உலகம் நம் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, அந்தத் தனிமையில் நாம் நிறைவைக் காணமுடியும் என்ற மாயையை உருவாக்கி வருகிறது. வியத்தகு முறையில் வளர்ந்துள்ள தொடர்புசாதனக் கருவிகள், நம்மை உண்மையிலேயே இணைக்கின்றனவா? அல்லது, இக்கருவிகளின் தோழமையில், நாம் மனித உறவுகளை, தொடர்புகளை இழந்து வருகிறோமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

கருவிகள் இல்லாமல் தொடர்புகளே இல்லை என்று கூறும் அளவு, கருவிகளின் ஆக்கிரமிப்பு வளர்ந்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், தூய ஆவியாரின் பெருவிழா, திருஅவை என்ற குழந்தை பிறந்த நாள், நமக்குச் சொல்லித்தரும் பாடம் இதுதான்: திருஅவை என்பது, ஒவ்வொருவரும் தனித்து உணரும் கற்பனை அனுபவம் அல்ல; குழுவாக, குடும்பமாக, இணைவதில் உருவாகும் ஓர் அனுபவமே, திருஅவை.

கடந்த சில வாரங்களாக இறைமக்கள் என்ற குடும்பமாக நாம் கூடிவர இயலாத நிலை நீடிக்கிறது. இந்த முழு அடைப்பு நீங்கி, நாம் மீண்டும் இறை மக்களாக இணைந்து வரும் வேளையில், நாம் தனி தீவுகள் அல்ல, மாறாக, ஒருவரையொருவர் சார்ந்து வாழும் குடும்பம் என்ற உண்மையை தூய ஆவியார் நம் அனைவருக்கும் உணர்த்தவேண்டும் என்று மன்றாடுவோம்.

கொரோனா தொற்றுக்கிருமி நமக்கு பல்வேறு எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியிருந்தாலும், அது உணர்த்தியுள்ள ஒரு முக்கியமான பாடம் உண்டு. அதாவது, மனிதர்களாகிய நாம், எத்தனையோ பிரிவுகளை நமக்குள் உருவாக்கியிருந்தாலும், அந்தப் பிரிவுகளைக் காக்கும் வெறியுடன், சுவர்களையும் ஆயுதங்களையும் உருவாக்கியிருந்தாலும், அப்பிரிவுகளையும், தடைகளையும் தாண்டி, நாம் அனைவரும், அடிப்படையில் சக்தியற்ற மனிதர்கள்தாம் என்ற உண்மையை கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி நமக்கு உணர்த்தி வருகின்றது.

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வை திருத்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில், உடல் என்ற அழகிய உருவகத்தைப் பயன்படுத்தி நமக்கு உணர வைத்துள்ளார். 

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 12: 4,7,12-13

அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்.

இந்தத் தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், ஒருவகையில் அறிவொளியும், உள்ளத் தூய்மையும் பெற்றுள்ள நாம், இனிவரும் நாள்களில், நம் வாழ்வைத் தொடரும் வேளையில், மனித குடும்பத்தை கூறுபோடும் பிளவுகளையும் பிரிவுகளையும் மீண்டும் உருவாக்காமல், ஒரே குடும்பத்தை கவனமாகக் கட்டியெழுப்பும் மனதை, அந்த தூய ஆவியார், நம் ஒவ்வொருவருக்கும் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2020, 11:23