அன்னை மரியா, விடியற்கால விண்மீன் அன்னை மரியா, விடியற்கால விண்மீன் 

நேர்காணல்: அன்னை மரியா, விடியற்கால விண்மீன்

கன்னி மரியாவை நாம் “விடியற்கால விண்மீனே" என்று அன்போடு அழைத்து வேண்டுகின்றோம். இது முதன் முதலாக, இத்தாலி நாட்டின் பதுவை நகரத்தில் வெளியிடப்பட்ட லொரேத்தோ மரியா மன்றாட்டு மாலையில் அன்னை மரியாவை “Stella matutina" என்று அழைத்து வேண்டுகையில் பயன்படுத்தப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருஅவையில் மே மாதம், அன்னை மரியாவின் வணக்க மாதமாகச் சிறப்பிக்கப்படுகிறது.  இம்மாதத்தில் அன்னை மரியா, பல்வேறு முறைகளில் போற்றிப் புகழப்படுகிறார். கொரோனா தொற்றுக்கிருமி பரவலால் உலகம் நெருக்கடிகளைச் சந்தித்துவரும், இவ்வாண்டு மே மாதத்தில், கத்தோலிக்கர், செபமாலை செபித்து, உலக மக்களின் துன்பங்கள் அகல செபித்தனர். வத்திக்கான் வானொலி நேயர்களும், இதே கருத்துக்காக அன்னை மரியாவிடம் சிறப்பாகச் செபித்தனர். நம் நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் அன்னை மரியாவின் சில பண்புகள் பற்றி மரியின் ஊழியர் சபையின் அருள்பணி ஆ.அமல்ராஜ் அவர்கள் வழங்கி உதவினார். இதன் தொடர்ச்சியாக, அன்னை மரியா, விடியற்கால விண்மீன் என்ற தலைப்பில், இன்று தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்கிறார், அருள்பணி ஆ.அமல்ராஜ் ம.ஊ.ச.

நேர்காணல்: அன்னை மரியா, விடியற்கால விண்மீன்

அருள்பணி. ஆ.அமல்ராஜ், ம.ஊ.ச

அன்னை மரியா: விடியற்காலத்தின் நட்சத்திரம்!

1. லொரேத்தோ மரியன்னை மன்றாட்டு மாலையில் திருச்சபையானது கன்னி மரியாளை விடியற்காலத்தின் நட்சத்திரமே! என்று அழைத்து வேண்டுகின்றது. மேலும், அன்னை மரியாளைப் பயணிகளின் துணை, பயணிகளின வழிகாட்டி என்று கருதி அன்னை மரியாளை வழித்துணை மாதாவாகப் போற்றி வணங்கும் மரியன்னை பக்தியானது உலகெங்கிலும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதன் வெளிப்பாடாக,    Stella Maris, Our Lady: Star of the Sea  மற்றும், Our Lady of Pilgrims,  வழித்துணை மாதா போன்ற பெயர்கள் தாங்கிய பல ஆலயங்களும், திருத்தலங்களும், கல்விக்கூடங்களும், கலங்கரை விளக்கங்களும் குறிப்பாக, கடற்கரை உள்ள இடங்களில் அமைக்கப்பட்டு, செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி, இதற்கான விழாவும் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம்.

கன்னி மரியாள் - விடியற்காலத்தின் நட்சத்திரம் என்பதன் பொருள் மற்றும் அதற்கான விளக்கம்

கன்னி மரியாளை நாம் “விடியற்காலத்தின் நட்சத்திரமே" என்று அன்போடு அழைத்து வேண்டுகின்றோம். இது முதன் முதலாக, இத்தாலி நாட்டின் பதுவை நகரத்தில் வெளியிடப்பட்ட லொரேத்தோ மரியன்னை மன்றாட்டு மாலையில் அன்னை மரியாளை “Stella matutina" என்று அழைத்து வேண்டுகையில் பயன்படுத்தப்பட்டது (Fourteenth century; Capitolare B63). இதேபோல, 12-வது நூற்றாண்டைச் சேர்ந்த மரியன்னை மன்றாட்டு மாலையினுடைய பாரீஸ் கைப்பிரதியில் . “Stella marina” மற்றும் “Lux matutina” அதாவது “கடல் நட்சத்திரமே", “விடியற்கால ஒளியே" அல்லது “விடியற்காலத்தின் நட்சத்திரமே" போன்ற வேண்டுதல் செபங்களைப் பார்க்கின்றோம். (Paris, Nat. Lat. 5267).

 விடியற்கால நட்சத்திரமானது புலரவிருக்கின்ற புது நாளினுடைய வரவின், விடியலின் அல்லது சூரிய உதயத்தினுடைய அறிவிப்பின் மற்றும் உலகிற்கு வரவிருக்கின்ற புத்தொளியினுடைய அடையாளமாகும். விவிலிய வார்த்தைகளில் கூறவேண்டுமானால், இது “நீதியின் கதிரவனுடைய” (மலாக்கி.4,2) மற்றும் “இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதர” (லூக்.1,78) வரவிருக்கும் மரியின் மகனாகிய இயேசு கிறிஸ்துவின் வரவை அறிவிக்கின்றது.

இதையே, புனிதராகிய கர்தினால் நியூமன், “விடியற்காலத்தின் நட்சத்திரமான அன்னை மரியாள் படைத்தவரும் மீட்பருமான கடவுளின் பிரதிபலிப்பே. அவள் அவருடைய மகிமையைப் போற்றுகின்றாள். அவள் இருளிலிருந்து தோன்றும்பொழுது நம் மீட்பின் நாள், மிக அருகில் இருக்கின்றது என்பதை அறிகின்றோம்” என்று கூறுகின்றார்.

அன்னை மரியாள்: விடியற்காலத்தின் நட்சத்திரமே! என்பதற்கு நேரடியாக எந்தவித விவிலிய ஆதாரமும் இல்லையென்றாலும், திருச்சபையினுடைய தந்தையர்கள் மற்றும் திருச்சபையினுடைய பராம்பரியம் இதற்குக் கொடுத்த விளக்கங்கள் பல உள்ளன.

முதலாவதாக, 8-வது நூற்றாண்டில் பிரானஸ் நாட்டின் கொர்பியே நகரத்து புனித பாஸ்காசியுஸ் ரத்பெர்துஸ் (785-865), கிறிஸ்துவை நோக்கிய நம்முடைய பயணத்தில் வாழக்கைக் கடலில் வீசகின்ற புயல் மற்றும் நம்மைத் தாக்கும் அலைகளினால் கவிழ்ந்துவிடாமலிருக்க விடியற்காலத்தின் நட்சத்திரமாகிய மரியாளை நாம் பின்பற்ற வேண்டும் என்கின்றார்.

இரண்டாவதாக, நாம் ஏன மரியாளை விடியற்காலத்தின் நட்சத்திரமே என்று அழைக்க வேண்டும் என்று, 11-வது நூற்றாண்டில் பிரான்சின் கிளேவோ நகரத்தின் புனித பெர்நார்து (1090-1153) இவ்வாறு விளக்குகின்றார்:

•             ஒரு நட்சத்திரமானது எவ்வாறு தன்னை எரித்துக்கொள்ளாமல் ஒளியைக் கொடுக்கின்றதோ, அNதுபோல அன்னை மரியாளும் தன்னில் எந்த பாவக்கறையும் படாமலே இறைமகனாம் இயேசுவைப் பெற்றெடுத்ததால் அவளை விடியற்காலத்தின் நட்சத்திரமே என்று அழைக்கலாம்.

•             மேலும், எவ்வாறு ஒரு நட்சத்திரத்தினுடைய ஒளியானது எப்பொழுதும் மங்காமலும் குறைவுபடாமலும் உள்ளதோ, அதேபோல அன்னை மரியாளும் இறைமகன் இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பிற்குப் பின்பும் தன்னுடைய கன்னித்தன்மையின் முழுமை குன்றாமல் இருந்ததால், அவளை விடியற்காலத்தின் நட்சத்திரமே என்று அழைக்கலாம்.

மூன்றாவதாக, 12வது நூற்றாண்டில் வாழ்ந்த புனித பதுவை அந்தோனியார் (1195-1231), விடியற்காலத்தின் நட்சத்திரமாகிய எங்கள் அன்னையே! பொங்கி எழும் கடலால் நாங்கள் அலைக்கழிக்கப்படும்போது எங்கள்மேல் ஒளிர்ந்திட உம்மை வேண்டுகின்றோம். கடலின் கரைசேர எங்களை வழிநடத்துங்கள், துன்பச் சிறையிலிருந்து வெளிவர எம்மையே நாங்கள் தகுதியுள்ளவர்களாக்கி முடிவில்லாத மகிழ்ச்சியை நோக்கி உம்முடைய பார்வையில் நாங்கள் என்றும் நடந்திட எங்களைப் பாதுகாத்தருளும்” என்று அவளிடம் செபிக்கின்றார்.

இவ்வாறு, விடியற்காலத்தின் நட்சத்திரமாகிய அன்னை மரியாளிடம் செபித்து அவளுடைய துணையையும் பாதுகாவலையும் வேண்டுகின்ற வழக்கமானது திருச்சபையில் பலகாலங்களாக இருந்துவந்துள்ளதை நாம் அறியலாம்.

2. அன்னை மரியாள் விடியற்காலத்தின் நட்சத்திரம் என்பதற்கு நேரடியாக விவலியத்தில் எந்தவிதமான ஆதாரமும் இல்லையென்றால், இவ்வாழ்த்தொழி எப்படித் தோன்றிற்று?

பலங்காலத்தில் North Star என்று அழைக்கப்படும் வடக்கு நட்சத்திரமானது நெடுந்தொலைவு பயணம் மேற்கொள்வோர்க்கும், கடல்வழிப் பயணம் செய்வோருக்கும் வழிகாட்டியாக இருந்து மிகவும் உதவியது. இது வட துருவத்தில் இருந்ததால் ((North Pole)  இதை உரோமர்கள் துருவ நட்சத்திரம் அதாவது, polaris என்று அழைத்தனர். இதை ஆங்கிலத்தில் lodestar, polestar என்றும், Alpha Ursae Minoris, navigatoria மற்றும் HR424 என்றும் அழைக்கப்படுகினறது. The Middle Age என்று அழைக்கப்படும் வரலாற்றின் மத்திய காலங்களில் இது “கடல் நட்சத்திரம்” என்று பொருள்படும் வகையில் இலத்தீன் மொழியில் “Stella Maris” என்று அழைக்கப்பட்டது.

 “Stella Maris” என்னும் இச்சொல்லானது எவ்வாறு கன்னி மரியாளுடன் தொடர்புபடுத்தப்பட்டது?

“விடியற் காலத்தின் நட்சத்திரமே” என்று பொருள்படும் “Stella Maris” என்னும் பெயர் எவ்வாறு மரியாளைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டது என்பதையறிய அச்சொல்லாடல் உருவாவதற்குப்பின் உள்ள வரலாற்றை மொழியியில் ஆய்வாளர்களுடைய விளக்கத்தின் (Etymological explanation) அடிப்படையில் நாம் புரிந்துகொள்ளலாம்.

உலகில் உள்ள எல்லாக் கலாச்சாரங்களிலுமே ஒருவருடைய பெயர் என்பது மிக முக்கியமானதொன்றாகும். அதுதான் அவருடைய அடையாளம். எனவே அந்தப் பெயர் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டுமென்று எண்ணி தெய்வங்களினுடைய, புனிதருடைய சாதனையாளர்களுடைய, சமூக மற்றும் சமயத் தலைவர்களுடைய மற்றும் மூதாதையர்களுடைய பெயர்களை வைப்பது வழக்கம், ஏனெனில் அக்குழந்தை எதிர்காலத்தில் அந்தப் பெயருக்கேற்ப வாழ வேண்டும், நல்ல பிள்ளையாக வளரவேண்டும் என்பது அவர்களுடைய ஆசை மற்றும் விருப்பம்.

எடுத்துக்காட்டாக, யூத கலாச்சாரத்தில் பெயர் சூட்டுதல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் அவர்களைப் பொருத்தவரை ஒரு குழந்தையினுடைய பெயர்தான் அக்குழந்தையினுடைய குணங்களையும், எதிர்காலத்தில் அக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்கப்போகின்றது என்பதையும் தீர்மானிக்கக் கூடியதாக இருந்தது. மேலும், யூதர்களைப் பொருத்தவரையில், ஒருவருடைய பெயரானது அவருடைய ஆன்மாவைக் குறிக்கின்றது. எனவேதான், விவிலியத்தில் பல இடங்களில் ஒருவருக்குப் பெயர் வைக்கும் பொழுதே அவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதும் சொல்லப்படுவதை நாம் பார்க்கின்றோம்.

எடுத்துக்காட்டாக, Elijah   அதாவது எலியா என்றால் “ஆண்டவரே என் கடவுள்” என்று அர்த்தம். இது, பால் தெய்வ வழிபாட்டிற்கு எதிராக, இஸ்ராயேலே மக்களிடம் உறுதியோடு இறைவாக்குரைத்த எலியாவுக்கு மிகவும் பொருத்தமானதொன்றாகும். அதேபோல,     Yeshua  அதாவது இயேசு என்னும் பெயருக்கு “கடவுள் மீட்கிறார்” என்று அர்த்தம். இது யோர்தான் வழியாக கானான் தேசம் நோக்கி மக்களை வழிநடத்திச் சென்ற யோசுவா இறைவாக்கினருக்கும் நாம் நம்முடைய மீட்பராக ஏற்றுக்கொண்ட இயேசுவுக்கும் மிகவும் பொருத்தமானதொரு பெயராகும். 

கிறித்தவர்களாகிய நாம் கன்னி மரியாளைத் திருச்சபையின் தொடக்கம் முதலே மகிமைப்படுத்திப் புகழ்ந்து வருகின்றோம். அம்மா மரியே என்று நம் ஆபத்துக் காலங்களில் அவளை நோக்கி அன்போடு அழைக்கிறோம். அந்த மரி என்னும் பெயருக்கான அர்த்தம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அந்தப் பெயருக்கான அர்த்தம் நமக்குத் தெரிகின்றபோது, நாம் ஏன் அவளை “Stella Maris” அதாவது “விடியற் காலத்தின் நட்சத்திரமே” என்று அழைக்கின்றோம் என்பது புரியும்.

மொழியியல் விளக்கம்

எகிப்திய மற்றும் எபிரேய-அரமாயிக் மொழியில் உள்ள பண்டைய ஏடுகளில் அவர்கள் எழுதும்பொழுது உயிரெழுத்துக்களைத் தவிர்ப்பது வழக்கம். எனவே, பிறகாலங்களில் அவ்வேடுகளை மொழியாக்கம் செய்த அறிஞர்கள் அவ்வார்த்தைகள் எதைக் குறிக்கின்றன என்பது குறித்து விவாதித்து பெரும்பான்மையான அறிஞர்களால் ஏற்றுக்கொள்பட்டதொரு அர்த்தத்தைக் கொடுத்தனர். பல நேரங்களில் ஒரு வார்த்தை அல்லது ஒருவருடைய பெயரின் பொருள் பற்றிய தெளிவற்ற தன்மையும் நிலவியது. அவைகளில் மரியாளுடைய பெயரும் ஒன்றாகும்.

மரியாள் என்று நாம் இன்று அழைக்கும் பெயரானது, மிரியம் என்னும் எகிப்திய மொழிச் சொல்லாகும். எகிப்திய மொழியில் மிரியம் என்பதற்குப் “கசப்பான”, “அழகான” மற்றும் “அன்பான” என்று பல அர்த்தங்கள் உள்ளன.

இதனடிப்டையில், எபிரேய மொழியில் மிரியம் என்பது எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்தால் அங்கு “மரியம்” என்று உள்ளது. இதன் பொருள் “கிளர்ச்சி” மற்றும் “கசப்பான கடல்” என்பதாகும். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று, ஒருவருடைய பெயரானது அவருடைய ஆன்மாவைக் குறிப்பதால், மேற்குறிப்பிட்ட அர்த்தங்கள் மரியாள் என்னும் அந்த இளம்பென்னுக்கு கொஞ்சமும் பொருந்தாததொன்றாகும்.

இதனடிப்படையில், பிற்காலத்தில் விவிலியத்தில் வரும் பெயர்கள் அடங்கியதொரு அகராதியை எழுதிய செசரேயா நகரத்து யுசேபியூஸ் என்பவர் “மிரியம்” என்னும் பெயருக்கு “கடல் துளி” என்று குறிப்பிட்டார். அவருக்குப் பிறகு, 4வது நூற்றாண்டில் அவ்வகராதியை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்த புனித ஜெரோம் “கடல் துளி” என்பதை “Stilla Maris” என்று மொழிபெயர்த்தார். பின்னாளில், இக்கைப்பிரதியை வாசித்தவர்கள் “Stilla Maris”  என்பதற்குப் பதிலாக “Stella Maris”  என்று வாசிக்க, அதுவே பிற்காலத்தில் மிரியம் என்பதற்கான அர்த்தமாக அமைய, அவளுடைய பக்தர்களும் அவளைப் பாசத்தோடு “விடியற்காலத்தின் நட்சத்திரமே” என்று அழைத்து வேண்டத் தொடங்கினர்.

3. இவ்வாழ்த்தொலியின் ஆன்மீக முக்தியத்துவம் மற்றும் வாழ்வியல் நெறி

21-வது நூற்றாண்டில் GPS-ன் துணைகொண்டு பயணம் செய்யும் நமக்கு வடக்கு நட்சத்திரத்தின் பயன் மற்றும் முக்கியத்துவம் பற்றி அவ்வளவாகத் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை. ஆனால், இதுதான் பண்டைய காலங்களில் நெடுந்தொலைவு பயணம் செய்பவர்களுக்கும் பாலைவன மற்றும் கடல் பயணம் செய்பவர்களுக்கும் அவர்களுடைய பயணத்தின் திசையைக் காட்டும் கருவியாகச் செயல்பட்டது. ஏனென்றால், திடீரெனத் தோன்றி மறையும் மற்ற நட்சத்திரங்களைப் போலல்லாமல் இது இரவு முழுவதும் ஒரே இடத்தில் நிரந்தரமாக இருக்கும், இதைப் பார்த்துக்கொண்டே வழிப்போக்கர்களும் பயணிகளும் மாலுமிகளும் தங்களது இலக்கு நோக்கித் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். இதைப்போன்றுதான் அன்னை மரியாளும், நம் வாழ்க்கைப் பயணத்தில் நமக்குத் துணையாக இருக்கும் அணைவரும் நம்மைவிட்டு நீங்கினாலும் விலகிச் சென்றாலும், நமது தாயாக அன்னை மரியாள் நம்முடன் நடந்து நமக்கு வாழ்க்கைக்கான வழியைக் காட்டுகின்றாள்.

தூய்மை, ஒளிமயம் மற்றும் அழகு இவைகள் நட்சத்திரங்களுடைய இயல்புகளாகும். இதைப்போலவே அன்னை மரியாளும் தூய்மையானவள், இவ்வுலகின் ஒளியாகிய இயேசுவையே தன்னுடைய கருப்பையில் தாங்கியவள் மற்றும் அழகின் உருவானவள்.

இத்தகைய பல பண்புகள் அவளிடம் இருந்தாலும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக நம் வாழ்க்கைப் பயணத்தில் நமக்கான வழிகாட்டி அன்னை மரியாள் என்பது மிக மிகச் சரியானதொரு ஒப்புமையாகும். வெயில், வெப்பம், மழை, குளிர், புயல், காற்று மற்றும் பல ஆபத்துக்களால் நிறைந்த கொந்தளிப்பானதொரு கடல் பயணம் போலவே, நமது மனித வாழ்வும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களால் அலைக்கழிக்கப்படும்போது அன்னை மரியாள் நமக்குத் துணையாக இருந்து பாதுகாப்புடன் நாம் வாழ்வில் நம்முடைய இலக்கை அடைய நமக்கு உதவுகின்றாள்.

பைசான்டைன் கிழக்கத்தியத் திருச்சபையில் கிறித்தவர்கள் அன்னை மரியாளை hodegitria  அதாவது “பயணத்தின் திசையை அறிந்தவள்” அல்லது “வழிகாட்டி” என்று அழைக்கிறார்கள். நாம் அனைவரும் நம் வாழ்வின் வழியும் ஒளியும் உண்மையுமான கிறிஸ்துவை மற்றும் நாம் அனைவரும் சென்றடைய ஆசைப்படும் வானக வீட்டை அடைய நமக்கு வழிகாட்டியாக இருந்து நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் நமக்குத் துணையாக இருப்பவள் அன்னை மரியாள்தான் என்பது அவர்களுடைய நம்பிக்கை மட்டுமல்ல அனைத்துக் கிறித்தவர்களுடைய நம்பிக்கையும் அதுவே ஆகும்.

உரோமையர்கள் எவ்வாறு துருவ நட்சத்திரமானது விண்ணகத்தின் வடக்கு துருவத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டதாக நம்பினார்களோ, அதேபோன்றுதான் புனிதர்களின் குழுமத்தில் அவர்களுக்கெல்லாம் தலையானவளாக இருந்து விண்ணக அரசியாக சொர்க்கத்தை அலங்கரிக்கின்றாள்.

“கதிரவனின் சுடர் ஒன்று, நிலவின் சுடர் இன்னொன்று. விண்மீன்கள் சுடர் மற்றொன்று; விண்மீனுக்கு விண்மீன் சுடர் வேறுபடுகிறது” (1 கொரி 15,41) என்கின்றார் புனித பவுல் அடிகளார். துருவநட்சத்திரத்தைவிடப் பிரகாசமான நட்சத்திரங்கள் பல இருந்தாலும், அது அமைந்திருக்கும் இடம்தான் அதற்கான முக்கியத்துவத்திற்கான காரணமாகும். அதைப்போலவே, கிறித்தவர்களுக்கும் திருச்சபையில் பல புனிதர்கள் இருந்தாலும் இறைவனுடைய வார்த்தைக்குக் கிழ்ப்படிந்ததால், அவருக்கு மிக அருகில் இருந்து கிறிஸ்துவினுடைய தாய் என்னும் நிலையை அடைந்ததுதான் கிறித்தவர்கள் மத்தியில் அவள் முக்கியத்துவம் பெறக் காரணமாகும். எனவே, கடலில் பயணம் செய்பவர்கள் எவ்வாறு கடல் நட்சத்திரத்தைப் பின்பற்றிப் பாதுகாப்பாக தங்கள் இலக்கைச் சென்றடைகின்றார்களோ, அதேபோல நாமும் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு பிரச்சனைகளினால் நெருக்கப்படும்போதும் அலைக்கழிக்கப்படும்போதும் வாழ்வில் எல்லாம் முடிந்துவிட்டது என்ற விரக்தியில் இருக்கும்போதும், நம் தாயாகிய கன்னி மரியாள் நிச்சயமாக நம்முடைய வாழ்வில் நமக்குத் துணையாக இருந்து, நம் வாழ்வின் இலக்கை அடைய உதவுவாள் என்கின்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு, “அம்மா மரியே, விடியற் காலத்தின் நட்சத்திரமே! எமக்காக வேண்டிக்கொள்ளும்” என்று ஒவ்வொரு நாளும் செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2020, 14:20