இந்தோனேசியா இந்தோனேசியா 

இந்தோனேசியா: கத்தோலிக்கர் அன்னை பூமிக்காக செபம்

திருத்தந்தையின் Laudato si’ திருமடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மே 16-24 வரை Laudato si’ வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில் இந்தோனேசிய கத்தோலிக்கர், நம் அன்னை பூமிக்காகச் சிறப்பாகச் செபித்து வருகின்றனர் என்று யூக்கா செய்தி கூறுகிறது.

இந்தோனேசிய ஆயர் பேரவைத் தலைவரான ஜகார்த்தா பேராயர், கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo அவர்கள், விண்ணேற்பு அன்னை மரியா பேராலயத்தில், மே 01, இவ்வெள்ளியன்று, விசுவாசிகளின் பங்கேற்பின்றி கூட்டுத்திருப்பலி நிறைவேற்றி, இந்த மாதத்தில் அன்னை பூமிக்காகச் செபிப்பதற்கு கத்தோலிக்கரை ஊக்குவித்தார்.

யூடியூப் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இத்திருப்பலிக்குமுன், செபமாலை செபித்த கர்தினால் இக்னேஷியஸ் அவர்கள், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது பற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், இறைவா உமக்கே புகழ் (Laudato si’) என்ற திருமடல் பற்றியும் சிறப்பாக குறிப்பிட்டார்.

மேலும் இச்செபம் பற்றி யூக்கா செய்தியிடம் விளக்கிய, ஜகார்த்தா உயர்மறைமாவட்ட சமூகத்தொடர்பு பணிக்குழுவின் தலைவர் அருள்பணி Matius Harry Sulistyo அவர்கள், இந்தோனேசியாவில், இம்மாதம் 16ம் தேதி, Laudato si’ வாரம் தொடங்கப்படும்வேளை, இச்செபமாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato si’ என்ற திருமடல் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தோம் என்று கூறினார்.

திருத்தந்தையின் Laudato si’ திருமடல், 2015ம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்டது. அதன் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு Laudato si’ வாரம் கடைப்பிடிக்கப்படும்வேளை, படைப்பைப் பாதுகாப்பதற்கு தாங்கள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்று அருள்பணி Sulistyo அவர்கள் கூறினார்.

“எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையவை” என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படும் இந்த வாரம், மே 24ம் தேதி நிறைவடையும்.

இந்தோனேசியாவில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கோவிட்-19 கிருமியால் 10,551, பேர்  தாக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 800 பேர் உயிரிழந்துள்ளனர் என்று யூக்கா செய்தி கூறுகின்றது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2020, 14:57