இந்தியாவில்  கிறிஸ்தவர்கள் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் 

இந்தியாவில் கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல்

இந்தியாவில் கோவிட்-19 கொள்ளைநோய் தொடர்ந்து பரவி வருவதால், பெந்தக்கோஸ்து பெருவிழாவன்று நாம் உருக்கமாக தூய ஆவியாரிடம் செபிக்க வேண்டும். இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு இந்தக் கருத்துக்காக அனைவரும் மன்றாடவேண்டும்

மேரி தெரேசா:  வத்திக்கான் செய்திகள்

கொரோனா கொள்ளைநோயிலிருந்தும், ஏனைய உடல், ஆன்மீகம் மற்றும், இவ்வுலகம் சார்ந்த தீமைகளிலிருந்தும் இந்தியா குணமடையும்படியாக, மே 31, பெந்தக்கோஸ்து பெருவிழாவன்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் வழிபாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது, இந்திய கத்தோலிக்கத் திருஅவை.

இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்களும், உதவித் தலைவர். சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறையின் ஆயர் Joshua Mar Ignatius அவர்களும் இணைந்து, கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் வழிபாடு பற்றி,  இந்தியாவிலுள்ள பல்வேறு ஆயர்கள் மற்றும், கிறிஸ்தவ சபைகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். 

இந்தியாவில் கோவிட்-19 கொள்ளைநோய் தொடர்ந்து பரவி வருவதால், பெந்தக்கோஸ்து பெருவிழாவன்று நாம் உருக்கமாக தூய ஆவியாரிடம் செபிக்க வேண்டும் என்றும், இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு இந்தக் கருத்துக்காக அனைவரும் மன்றாடவேண்டும் என்றும், கர்தினால் ஆசுவால்டு அவர்கள், அனைத்து ஆயர்களுக்கும் அனுப்பியுள்ள மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்த்தடாக்ஸ் சபை, மார்த்தோமா சபை, தென்னிந்திய திருச்சபை, மீட்புப் படை (Salvation Army), சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை சபை ஆகியவை இணைந்து செப வழிபாடு நடத்த தீர்மானித்திருப்பதாக, ஆயர் Joshu அவர்கள் அறிவித்துள்ளார். இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு, அனைத்து ஆலயங்கள் மற்றும், கிறிஸ்தவ நிறுவனங்களில் ஆலய மணிகள் முதலில் ஒலிக்கும், அதற்குப்பின் வழிபாடு ஆரம்பமாகும் என்றும், ஆயர் Joshu அவர்கள் அறிவித்தார்.

கொரோனா தொற்றுக்கிருமி பரவலால், இந்தியாவில் சமுதாய விலகல் கடைப்பிடிக்கப்பட்டுவரும்வேளை, இச்செப நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் வேளையில், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற இந்தியர்கள், இந்நிகழ்வில் பங்குபெற்று, தூய ஆவியாரிடம் சிறப்பான முறையில் செபிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். (AsiaNews)

தென்னாப்ரிக்காவில் இறைவேண்டல்

மேலும், தென்னாப்ரிக்காவிலும், கோவிட்-19 கொள்ளைநோய் ஒழியும்படியாக, மே 31, இஞ்ஞாயிறன்று, நாடெங்கும், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் இறைவனை மன்றாடுமாறு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையும், கிறிஸ்தவ சபைகள் அமைப்பும் அழைப்பு விடுத்துள்ளன. 

இஞ்ஞாயிறன்று நாட்டினர் அனைவரும், நேரம் ஒதுக்கி, இக்கருத்துக்காகச் செபிக்குமாறு கூறியுள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் அயலவரிடம், இந்த இறைவேண்டல் குறித்து நினைவுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். (Zenit)  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2020, 14:01