மனிதஉடன்பிறந்தநிலை குழு.   மனிதஉடன்பிறந்தநிலை குழு.  

மே 14- மனித சமுதாயத்திற்காக, நோன்பு, செபம்

இந்த கொள்ளைநோயைக் குணப்படுத்துவதற்கு அறிவியலாளர்களை இறைவன் தூண்டுமாறும், இந்தக் கடுமையான நோயின் எதிர்விளைவுகளிலிருந்து இந்த உலகு காப்பாற்றப்படுமாறும் செபிக்க அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தற்போது உலகில் பரவியுள்ள கொள்ளைநோயை ஒழிப்பதற்கு, மருத்துவ மற்றும், அறிவியல் ஆய்வுகளின் பங்கை மீண்டும் உறுதிசெய்யும் அதேநேரம், கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளும் நாம் எல்லாரும், அனைத்தையும் படைத்த கடவுளிடம் அடைக்கலம் தேடுவதை மறக்கக்கூடாது என்று, மனிதஉடன்பிறந்தநிலை குழு ஒன்று கேட்டுக்கொண்டுள்ளது.

படைத்தவராம் கடவுளில் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து விசுவாசிகள் மற்றும், உலகிலுள்ள அனைத்து சகோதரர், சகோதரிகளுக்குமென இந்த அழைப்பை விடுத்துள்ள இந்தக் குழு, கொரோனா தொற்றுக்கிருமி பரவல் அதிகரித்து வருவதால், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வு அச்சுறுத்தப்பட்டுள்ள மாபெரும் ஆபத்தை, இந்த உலகம் எதிர்கொள்கின்றது என்று கூறியுள்ளது.

கோவிட்-19 கொள்ளைநோய் முடிவுறுவதற்கு, உலகினர் அனைவரும் இரக்கச் செயல்கள் ஆற்றவும், நோன்பிருக்கவும், இறைவேண்டல் செய்யவும், எல்லாம்வல்ல இறைவனை நோக்கி மன்றாட்டுகளை எழுப்பவும் வேண்டுமென்று கூறியுள்ள அக்குழு, ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், அவர் எங்கிருந்தாலும், அனைவரும், உலகிலிருந்து இந்த கொள்ளை நோய் ஒழியுமாறு, தங்களின் மதப் படிப்பினைகளின்படி செபிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கொள்ளைநோயைக் குணப்படுத்துவதற்கு அறிவியலாளர்களை இறைவன் தூண்டுமாறும், இந்நோயினால் உருவாகியுள்ள பொருளாதாரம் மற்றும், வாழ்வியல் சார்ந்த, எதிர்விளைவுகளிலிருந்து இந்த உலகு காப்பாற்றப்படுமாறும் செபிக்கக் கேட்டுக்கொண்டுள்ள அக்குழு, அனைத்து மனித சமுதாயத்தின் நலனுக்காக, இவ்வாண்டு மே 14, வியாழனை, நோன்பு, செபம் மற்றும் இரக்கச் செயல்கள் ஆற்றும் நாளாகக் கடைப்பிடிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. 

இந்த உலகம் முழுவதும் பாதுகாக்கப்படுவதற்கென விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிற்கு, அனைத்து சமயத் தலைவர்கள் மற்றும், உலக மக்கள் அனைவரும் செவிசாய்க்குமாறு அழைப்பு விடுத்துள்ள, இந்த உயர்மட்டக் குழு, இதனால் இந்த உலகம் இந்த கொள்ளை நோயிலிருந்து விடுபட்டு, பாதுகாப்பு, நிலையான தன்மை, நல்ல உடல் நலம் மற்றும் வளமையில் வாழும் என்று குறிப்பிட்டுள்ளது.   

இந்த உலகம், மனித சமுதாயம் மற்றும், மனித உடன்பிறந்தநிலைக்கு, எப்போதையும்விட இப்போது சிறந்த இடமாக அமையும் என்ற நம்பிக்கையோடு, தனது அழைப்பை நிறைவு செய்துள்ளது, மனிதஉடன்பிறந்தநிலை உயர்மட்ட குழு.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2020, 14:49