அருள்சகோதரர் Armin Luistro அருள்சகோதரர் Armin Luistro  

பிலிப்பீன்ஸ் அருள்சகோதரருக்கு மனித உரிமைகள் விருது

பிலிப்பீன்ஸ் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏறத்தாழ 6 கோடிச் சிறார், சத்துணவு பெறுவதற்கு முக்கிய காரணமாகச் செயல்பட்டவர் - அருள்சகோதரர் Luistro

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டு அருள்சகோதரர் ஒருவருக்கு, Amnesty international எனப்படும் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பின் பிலிப்பீன்ஸ் கிளை, விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கிறிஸ்தவப் பள்ளிகளின் அருள்சகோதரர் சபையைச் (De La Salle) சார்ந்த அருள்சகோதரர் Armin Luistro அவர்கள், ஏழை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் Benigno Aquino அவர்களின் பணிக்காலத்தில், கல்வித்துறைக்குச் செயலராகவும், தற்போது De La Salle பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் பணியாற்றிவரும் அருள்சகோதரர் Luistro அவர்கள், ஏழை மக்கள், கல்வி பெறுவதற்குக் கொண்டிருக்கும் உரிமைக்காக உழைத்து வருகிறார்.

பிலிப்பீன்ஸ் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏறத்தாழ 6 கோடிச் சிறார், சத்துணவு பெறுவதற்கு முக்கிய காரணமாகச் செயல்பட்ட அருள்சகோதரர் Luistro அவர்கள்,  பதப்படுத்தப்பட்ட மற்றும், மரபணு முறைப்படி மாற்றப்பட்ட உணவு வகைகள் தடைசெய்யப்படவும் உதவியுள்ளார்.

அருள்சகோதரர் Luistro அவர்கள், 2011ம் ஆண்டில், பிலிப்பீன்ஸ் நாட்டு பாடத்திட்டத்தில் காய்கறித் தோட்டம் அமைப்பதைப் புகுத்தியதன் பயனாக, மாணவர்கள், பழங்கள் மற்றும், காய்கறிகளை உற்பத்தி செய்தனர் என்றும், மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களின் அறுவடைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல இவர் அனுமதித்தார் என்றும் யூக்கா செய்தி கூறுகின்றது. 

பிலிப்பீன்ஸ் நாட்டுப் பள்ளிகளில், ஆங்கிலவழிக் கல்வியா, அந்நாட்டு Tagalo மொழி கல்வியா என்று மக்கள் கேட்டபோது, சகோதரர் Luistro அவர்கள், மாணவர்கள் முதலில் தங்களின் மாநில மொழிகளில் கற்கவேண்டும், அதன்வழியாக, மாணவர்களின் கற்கும்திறன் எளிதாக அமையும் என்று கூறினார்.

பிலிப்பீன்ஸ் கல்வியை பன்னாட்டு தரத்திற்கு உயர்த்துவதற்கென, அடிப்படை கல்வியாண்டில் மேலும் இரு ஆண்டுகள் கூட்டி, பன்னிரண்டு ஆண்டுகளாக இவர் மாற்றினார் (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2020, 14:46