தேடுதல்

Vatican News
இயேசுவின் விண்ணேற்பு இயேசுவின் விண்ணேற்பு  

விண்ணேற்பின் மாபெரும் வெற்றி நம் இதயங்களை நிரப்பட்டும்

மியான்மார் கர்தினால் சார்லஸ் போ - நாம் வாழ்கின்ற இடங்களில் நற்செய்தியின் திருத்தூதர்களாக வாழ்வதே, கிறிஸ்து நமக்கு விடுக்கும் சவால்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

நம் வாழ்வு சவால் நிறைந்ததாக இருந்தாலும்கூட, அது கடவுளிடமிருந்து வந்த காதல் கடிதம் என்று, FABC எனும், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறினார்.

மே 24, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் இயேசுவின் விண்ணேற்பு பெருவிழா மற்றும், 54வது உலக சமூகத்தொடர்பு நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், இவ்விரு முக்கிய நாள்களைக் குறிக்கும் இஞ்ஞாயிறன்று விசுவாசிகள் பல்வேறு கூறுகளை நினைவில் இருத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

இயேசுவின் விண்ணேற்பு பற்றிய செய்தியில், விண்ணேற்படைந்த ஆண்டவர் இயேசுவால், மறைப்பணி நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று, மகிழ்வோடு கூற முடியும் என்றும், இறைமகன் இறைத்தந்தையிடம் திரும்பிச்சென்றதோடு, மனித சமுதாயத்தை கடவுளோடு ஒப்புரவாக்கும் சிறப்புமிக்க நிகழ்வு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார், கர்தினால் போ.    

இந்த பெருவிழா, இருளின் மீது ஒளியும், மரணத்தின் மீது வாழ்வும், மனச்சோர்வின் மீது நம்பிக்கையும், தீமையின் மீது நன்மைத்தனமும், சாத்தானின் மீது கடவுளும் அடைந்த வெற்றியைக் கொண்டாடுவதாகும் என்று கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், இந்த கம்பீரமான வெற்றி, இன்று நம் இதயங்களை நிரப்புவதாக என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றியின் உணர்வு, எக்காலத்தையும்விட இந்த கொள்ளைநோய் காலத்தில் நமக்கு அதிகம் தேவைப்படுகின்றது என்றும், கோவிட்-19 நெருக்கடிநிலை, பலரின் வாழ்வை முடக்கிப்போட்டுள்ளது என்றும், தனது செய்தியில் கூறியுள்ளார், கர்தினால் போ. 

கோவிட்-19 நெருக்கடிநிலை

கடந்த சில மாதங்களாக நம்பிக்கையின்மை என்ற புயல்நிறைந்த கடல்கள் வழியாக பயணம் மேற்கொண்டு வருகிறோம், இருளான இரவுகள் இன்னும் முடிவுறவில்லை எனவும், புனித சனிக்கிழமையின் ஆழ்ந்த மௌனம், இன்னும் இருப்பதாகத் தெரிகின்றது எனவும் கூறியுள்ள மியான்மார் கர்தினால், உண்மையான கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும், நம் கடவுள், நம் துன்பங்களைப் புரிந்துகொள்ளாத கடவுள் அல்ல என்பதில் நம்பிக்கை கொள்ளவேண்டும் என ஊக்கப்படுத்தியுள்ளார்.  

நம் கடவுள், நம் உடைந்த மனதையும், நம் கண்ணீரையும் புரிந்துகொள்கின்றார், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் கூறப்பட்டுள்ளதுபோன்று, “நம் கடவுள், தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால், சோதிக்கப்படுவோருக்கு உதவிசெய்ய அவர் வல்லவர் (எபி.2: 18)” என்று கர்தினாலின் செய்தி கூறுகிறது.

நீண்டகால சமுதாய ஊரடங்கு மற்றும், நம் அன்புக்குரிய ஆலயங்கள் மூடப்பட்டுள்ளதால், நம் நம்பிக்கை சவாலாக உள்ளது மற்றும், சவால்கள் மத்தியில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்றுரைத்த கர்தினால் போ அவர்கள், நாம் வாழ்கின்ற இடங்களில் நற்செய்தியின் திருத்தூதர்களாக வாழ்வதே கிறிஸ்து நமக்கு விடுக்கும் சவால் என்று கூறினார்.

நாம் ஒவ்வொருவரும், ஒருவர் ஒருவருக்கு நற்செய்தியாக வாழவேண்டும், ஒவ்வொரு குடும்பமும் ஒரு குட்டித்திருஅவை, நம் குடும்பங்களிலும் நண்பர்களிலும், ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்பதை சுவைத்துப் பார்க்கவேண்டும், ஆண்டவர் நம் பலவீனங்களையும் பலங்களையும் அறிந்திருக்கிறார், அவர் நமக்கு அருளைப் பொழிகிறார் என்று, கர்தினால் போ அவர்கள் கூறியுள்ளார்.  

உலகம் கொரோனா தொற்றுக்கிருமிக்கு எதிராகப் போராடிவரும் இவ்வேளையில், கிறிஸ்தவர்கள் நம்பிக்கையை இழக்கவேண்டாம் எனவும், கோவிட் நாள்கள் வழியாக நம்பிக்கைப் பயணத்தைத் தொடருவோம் எனவும், கோவிட் வரலாறாக மாறட்டும், மற்றும், வாழ்கின்ற கடவுள் நம் வாழ்வுக்குப் பொறுப்பாக இருப்பதால், அத்துன்பம் நம்மைவிட்டு மறையட்டும் எனவும், கர்தினால் போ அவர்களின் செய்தி கூறுகிறது. (Zenit)

23 May 2020, 13:40