பாத்திமா அன்னை மரியா பாத்திமா அன்னை மரியா  

பிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு

பிலிப்பீன்ஸ் ஆயர்கள், மே 13, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட, பாத்திமா அன்னை மரியா திருநாளன்று, தங்கள் நாட்டை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்கிருமி தொடர்ந்து பரவிவரும்வேளை, அந்நாட்டை அக்கிருமியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும்படியாக, இயேசுவின் அன்னையாம், மரியாவின் திருஇதயத்திடம் அர்ப்பணித்து செபித்துள்ளனர், பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.

உலகின் பல நாடுகளின் ஆயர்கள், இந்த கொள்ளைநோயினின்று காப்பாற்றும்படியாக, தங்கள் நாடுகளை அன்னைமரியாவிடம் அர்ப்பணித்துள்ளதுபோன்று, பிலிப்பீன்ஸ் ஆயர்களும், மே 13, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட, பாத்திமா அன்னை மரியா திருநாளன்று, தங்கள் நாட்டை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்துள்ளனர்.

இந்த அர்ப்பணிப்பு நிகழ்வை வழிநடத்திய, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Romulo Valles அவர்கள், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவோர் மற்றும் ஏனைய பணியாளர்களுக்கு, அன்னை மரியா பாதுகாப்பும், வலிமையும் வழங்குமாறு செபித்தார்.  

பிலிப்பீன்சில், சர்வாதிகாரி Ferdinando Marcos அவர்கள் ஆட்சியிலிருக்கும்போது, அந்நாட்டில் உண்மையான சுதந்திரம் மற்றும் அமைதி நிலவ அன்னை மரியா உறுதி வழஙகுமாறு, 1985ம் ஆண்டில், ஆயர்கள், நாட்டை அன்னையின் அமல இதயத்திற்கு அர்ப்பணித்தனர். மார்க்கோஸ் ஆட்சி முடிவுற்றதற்கு நன்றியாக, 1987ம் ஆண்டில் மீண்டும் அன்னை மரியாவுக்கு நாட்டை அர்ப்பணித்து செபித்தனர், ஆயர்கள்.

பிலிப்பீன்சில் 12 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 806 பேர் இறந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. (CBCP)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2020, 16:47