தேடுதல்

Vatican News
மலேசியாவில் கோவிட்-19 சமுதாய விலகல் மலேசியாவில் கோவிட்-19 சமுதாய விலகல்   (AFP or licensors)

கொள்ளைநோய் காலத்தில் புலம்பெயர்ந்தோருக்கு உதவி

மலேசியாவில், ஒவ்வொரு நாளும் வேலைசெய்து ஊதியம்பெற்றுவந்த பலர், குறிப்பாக புலம்பெயர்ந்தோர், வேலைகளை இழந்துள்ளனர் மற்றும், பெரிய அளவில் மனிதாபிமான நெருக்கடியையும் எதிர்கொள்கின்றனர்

மேரி தெரேசா:  வத்திக்கான் செய்திகள்

மலேசியாவில் கோவிட்-19 சமுதாய விலகல் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுவரும்வேளை, அந்நாட்டிலுள்ள புலம்பெயர்ந்தோருக்கு, பல ஆலயங்கள் உதவி வருகின்றன என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

மலேசியாவில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி நடைமுறைக்குவந்த கோவிட்-19 சமுதாய விலகல் விதிமுறைகள், வருகிற ஜூன் 9ம் தேதிவரை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையால், ஒவ்வொரு நாளும் வேலைசெய்து ஊதியம்பெற்றுவந்த பலர், குறிப்பாக புலம்பெயர்ந்தோர், வேலைகளை இழந்துள்ளனர் மற்றும், பெரிய அளவில் மனிதாபிமான நெருக்கடியையும் எதிர்கொள்கின்றனர் என்றுரைத்த இயேசு சபை அருள்பணி Alvin Ng அவர்கள், தங்களது புலம்பெயர்ந்தோர் மேய்ப்புப்பணி மையம், இந்த மக்களுக்கு உணவு வழங்கிவருவதோடு, மற்ற அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றது என்று கூறினார்.     

மலேசியாவின் அண்டை நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியிருப்பதால், அந்நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பமுடியாத சூழ்நிலையில் உள்ளனர் என்றும், பணப்பற்றாக்குறை மற்றும் இவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சாலைகள் அடைக்கப்பட்டிருப்பதால், நகரங்களுக்குச் சென்று உணவுப்பொருள்களை வாங்க முடியாமல் இவர்கள் உள்ளனர் என்றும், அருள்பணி Alvin Ng அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

புலம்பெயர்ந்த இந்த மக்களுக்கு, மலேசியாவின் Kuching உயர்மறைமாவட்ட பேராயர்  Simon Peter Poh Hoon Seng அவர்கள் உடனடியாக வழங்கியுள்ள ஆதரவு மிக முக்கியமானது என்றும், இவர், அந்நாட்டின் நலவாழ்வுத்துறை மற்றும், மாநில காவல்துறையிடம் விண்ணப்பித்து, புலம்பெயர்ந்தோருக்கு உணவு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார் என்றும், அருள்பணி Alvin Ng அவர்கள் கூறினார். (Fides)

30 May 2020, 15:07