புனித திருத்தந்தை 6ம் பவுல் புனித திருத்தந்தை 6ம் பவுல் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-24

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1922ம் ஆண்டு முதல், 1954ம் ஆண்டு வரை திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றியவர். எனவே, அவர் அங்கு சீர்திருத்தங்களைப் படிப்படியாகக் கொண்டு வந்தார். மே 29 வருகிற வெள்ளி, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் விழா. அவரிடம் திருஅவைக்காகச் செபிப்போம்

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித திருத்தந்தை 6ம் பவுல்-6

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையர், உரோம் ஆயர் என்ற முறையில், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், முதலில், தனது புதிய மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மிலானில் நவீன உலகோடு உரையாடல் தொடங்கினேன், அதேபோல் நீங்களும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் உள்ள அனைத்து மக்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் வழிகளைத் தேடுங்கள்” என்று கூறினார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நாள்கள் சென்று, 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை மீண்டும் தொடர்ந்து நடத்தவிருப்பதாக அறிவித்தார். 1963ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி அப்பொதுச்சங்கத்தை மீண்டும் கூட்டினார். திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், உலகுக்கு வழங்கிய வானொலி செய்தியில், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களின் ஆற்றல், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களின் ஞானம், அறிவு, மற்றும், திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் அன்பு என, தனக்கு முந்தைய திருத்தந்தையரின் தனித்துவங்களை எடுத்துரைத்தார். 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தொடர்ந்து நடத்தி நிறைவுறச் செய்வது, திருஅவை சட்டத்தை சீர்திருத்துவது, உலகில் சமுதாய அமைதி மற்றும், நீதியை மேம்படுத்துவது போன்றவற்றை தனது “பாப்பிறை தலைமைத்துவத்தின் இலக்குகளாக”, திருத்தந்தை அறிவித்தார். அவரின் செயல்பாடுகளில் கிறிஸ்தவத்தின் ஒற்றுமை, மையமாக விளங்கியது.

பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளுக்கு நன்றி

2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பங்குபெற்ற தந்தையர்கள், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் வெளியிட்ட, கிறிஸ்துவின் மறையுடல் என்று பொருள்படும் Mystici corporis Christi (29 ஜூன்,1943) திருமடலை மனதில் வைத்து, செயல்பட வேண்டும் என்று  திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதாவது, புதிய கோட்பாட்டு விளக்கத்தை உருவாக்காமல், அல்லது, அதை திரும்பச் சொல்லாமல், திருஅவை தன்னை எவ்வாறு நோக்குகிறது என்பதை எளிய சொற்களில் விளக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை 6ம் பவுல். அவர், அப்பொதுச் சங்கத்தில் கலந்துகொண்ட, பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளுக்கு நன்றி கூறினார். கத்தோலிக்கத் திருஅவை, பிரிவினைக்குக் காரணமாயிருந்ததால், அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டார். அந்தப் பொதுச்சங்கத்தில் கலந்துகொள்ள பயணம் மேற்கொள்வதற்கு, அரசுகள் அனுமதி அளிக்காததால், உலகின் கிழக்கிலிருந்து பல ஆயர்கள் கலந்துகொள்ளவில்லை என்பதையும் திருத்தந்தை அறிவித்தார். 1964ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி, அப்பொதுச் சங்கத்தின் மூன்றாம் கட்ட அமர்வைத் தொடங்கியவேளை, திருஅவை பற்றிய தொகுப்பு, அப்பொதுச்சங்கத்தின் விளைவாக வெளிவரக்கூடிய மிக முக்கிய ஏடு என்று, தான் நோக்குவதாக அறிவித்தார். அப்பொதுச்சங்கத் தந்தையர், பாப்பிறைத் தலைமைப்பணி பற்றிய விவாதங்களை மேற்கொண்டபோது, இவர், பாப்பிறையின் முதன்மைத்துவத்தை உறுதி செய்தார். சமய சுதந்திரம் பற்றி விரைவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் தீவிரப்படுத்தியபோது, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இது, கிறிஸ்தவ ஒன்றிப்போடு தொடர்புடைய தொகுப்புகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மரியா, திருஅவையின் அன்னை

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1964ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, அன்றைய பொதுச்சங்க அமர்வை நிறைவுசெய்தவேளை, “மரியா, திருஅவையின் அன்னை” என்பதை முறைப்படி அறிவித்தார். அப்பொதுச் சங்கத்தின் மூன்றாம் மற்றும், நான்காம் அமர்வுகளில், திருப்பீட தலைமையகத்தின் சில துறைகளில் சீர்திருத்தங்கள், திருஅவை சட்டத்தை திருத்தியமைத்தல், கலப்பு திருமணங்களை நெறிப்படுத்தல், குடும்பக் கட்டுப்பாடு போன்ற விவகாரங்கள் பற்றி அறிவித்தார். அப்பொதுச்சங்கத்தின் இறுதி அமர்வை, திருஅவை நசுக்கப்படும் நாடுகளிலிருந்து வந்திருந்த ஆயர்களுடன் கூட்டுத்திருப்பலியுடன் தொடங்கினார் அவர். இவரின் அங்கீகாரத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு தொகுப்புகள் மாற்றப்பட வேண்டியிருந்தன. இறுதியில் அனைத்து தொகுப்புகளும் அங்கீகரிக்கப்பட்டன. 1965ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, அன்னை மரியாவின் அமல பிறப்பு விழாவன்று, 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், தனக்கு முந்தைய திருத்தந்தையர் 12ம் பயஸ், திருத்தந்தை 23ம் ஜான் ஆகிய இருவரையும் புனிதர்களாக அறிவிக்கும் நடைமுறைகளைத் துவங்குவதாக அறிவித்தார்.

புனிதத்துவத்திற்கு உலகளாவிய அழைப்பு

திருத்தந்தை 6ம் பவுல் அவர்களைப் பொருத்தவரை, 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் மிக முக்கிய பண்பு மற்றும், அறுதியான இலக்கு, புனிதத்துவத்திற்கு உலகளாவிய அழைப்பு என்பதாகும். கிறிஸ்தவர்கள் எல்லாரும், தங்கள் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும், அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் முழுமைக்கும், பிறரன்பை நிறைவாய்   வாழவும் அழைக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1922ம் ஆண்டு முதல், 1954ம் ஆண்டு வரை திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றியவர். எனவே, அவர் அங்கு சீர்திருத்தங்களைப் படிப்படியாகக் கொண்டு வந்தார். மே 29 வருகிற வெள்ளி, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் விழா. அவரிடம் திருஅவைக்காகச் செபிப்போம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2020, 14:33