தேடுதல்

Vatican News
புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் அணிந்திருந்த மும்மகுடம் புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் அணிந்திருந்த மும்மகுடம் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-23

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1965ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் முடிந்தவுடன், அதன் தீர்மானங்கள், திருஅவை வாழ்வின் எல்லா நிலைகளிலும் செயல்படுத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியாய் இருந்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித திருத்தந்தை 6ம் பவுல்-5

புதிய திருத்தந்தையரின் பணியேற்பு நிகழ்வில் அவர்கள் தலையில் சூட்டப்படும் மும்மகுடம், திருத்தந்தையரின் தலைமைத்துவத்தின் அடையாளமாக வைக்கப்படுகின்றது. இம்மகுடம், திருத்தந்தையின் ஏடுகள், மற்றும், கட்டடங்களில், அவரின் தனிப்பட்ட அடையாளமாகவும் கருதப்படுகின்றது. விலையுயர்ந்த மாணிக்கக் கற்களால், மூன்று அடுக்குகளாக உருவாக்கப்படும் இம்மகுடத்தை, எட்டாம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து, இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலம்வரை திருத்தந்தையர் பயன்படுத்தினர். இது, 1143ம் ஆண்டிலிருந்து 1963ம் ஆண்டுவரை, புதிய திருத்தந்தையரின் பணியேற்பு நிகழ்வில், வெகு ஆடரம்பரமாக வைக்கப்பட்டது. 1572ம் ஆண்டைச் சேர்ந்த மும்மகுடமே, திருஅவையில் தற்போது காக்கப்பட்டுவரும் பழமையான மும்மகுடமாகும். இத்தகைய, ஆடம்பரமான மற்றும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மகுடத்தை இறுதியாக அணிந்தவர், புனித திருத்தந்தை 6ம் பவுல். இவர், திருஅவையின் தலைமைப் பணியை ஏற்ற நிகழ்வில் முடிசூட்டப்பட்ட மும்மகுடம், திருத்தந்தையாகப் பதவியேற்குமுன், இவர் வழிநடத்திய மிலான் நகரம் அன்பளிப்பாக வழங்கியதாகும். அந்த மகுடம் அணிகலன்கள் மற்றும், விலைமதிப்பற்ற இரத்தின கற்களாலும் அலங்கரிக்கப்படாமல், கூம்பு வடிவில் வித்தியாசமாக இருந்தது. ஆயினும் இது மற்ற மகுடங்களைவிட கனமானதாக அமைந்திருந்தது.

மும்மகுடத்தை கழற்றி வைத்தவர்

1964ம் ஆண்டில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் மூன்றாவது அமர்வு முடியும் கட்டத்தில், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில், தனது அரியணையிலிருந்து இறங்கி, பலிபீடம் சென்று, தனது மும்மகுடத்தை கழற்றி வைத்தார். மனித மகிமையைத் துறப்பது மற்றும், பொதுச்சங்கத்தின் உணர்வைப் புதுப்பிக்கும் அதிகாரத்தில், இவ்வாறு செய்வதாக அவர் அறிவித்தார். இந்த மகுடம் விற்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் பணம் பிறரன்புக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கர், இந்த மகுடத்தை விலைக்கு வாங்கினர். அது தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டு வாஷிங்டன் நகர், தேசிய அமலமரி பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நினைவு அரங்கில், இந்த மும்மகுடமும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் அணிந்திருந்த கழுத்துப்பட்டையும் வைக்கப்பட்டுள்ளன. திருத்தந்தை 6ம் பவுல் அவர்களுக்குப்பின் தலைமைப் பணியேற்ற திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள், புதிய திருத்தந்தை பணியேற்கும் நிகழ்வை, முடிசூட்டுதல் என்ற பெயரிலிருந்து, "பணியேற்பு நிகழ்வு" என்று பெயர் மாற்றம் செய்தார். விலைமதிப்பில்லா கற்களால் உருவாக்கப்பட்ட அந்த மும்மகுடத்தை, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களுக்குப்பின், இதுவரை எந்த திருத்தந்தையும் அணியவில்லை.

"பணியேற்பு நிகழ்வு"

1996ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் வெளியிட்ட Universi Dominici gregis என்ற திருத்தூது அறிவுரை மடலில், "முடிசூட்டுதல்" என்பதற்குப் பதிலாக, "பணியேற்பு நிகழ்வு" என்ற சொல்லைக் குறிப்பிட்டார். மேலும், தனது பாப்பிறை இலச்சினையிலும், இந்த மும்மகுடம் இடம்பெறுவதை அகற்றினார், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால். புனித பேதுரு பெருங்கோவிலில் நுழையும்போது தரையில் மொசைக் கலைவண்ணத்தில் இந்த இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளதை எவரும் காணத் தவறுவதில்லை. இப்போதைய திருத்தந்தையர், இந்த மும்மகுடத்தை தலையில் வைக்காவிடினும், புனித பேதுரு பெருங்கோவிலிலுள்ள, புகழ்பெற்ற புனித பேதுரு திருவுருவத்தின் தலையில், ஒவ்வோர் ஆண்டும் புனித பேதுருவின் அரியணை விழாவான பிப்ரவரி 22ம் தேதிக்கு முந்திய நாளிலிருந்து, ஜூன் மாதம் 29ம் தேதி சிறப்பிக்கப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் விழா வரை வைக்கப்பட்டிருக்கும். இது, 2006ம் ஆண்டில் வைக்கப்படவில்லை. மீண்டும் 2007ம் ஆண்டில் வைக்கப்பட்டது.

சுவிஸ் கார்ட்ஸ் அமைப்பு

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1968ம் ஆண்டில், திருத்தந்தையர் தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும், motu proprio என்ற அறிக்கையை Pontificalis Domus என்ற தலைப்பில் வெளியிட்டு, உரோம் உயர்குடியினருக்கு வழங்கப்படும் ஆடம்பர நிகழ்வுகளில் பலவற்றை இரத்து செய்தார். பாப்பிறை தங்கும் மாளிகையில் நடைமுறையில் இருந்த பல பழக்கங்களை சீரமைத்தார். பாப்பிறையின் உச்சகட்ட பாதுகாவல் பணியிலிருந்த அமைப்புகளை இரத்து செய்தார். பாப்பிறையின் மெய்காப்பாளர்களான சுவிஸ் கார்ட்ஸ் அமைப்பு ஒன்றே, வத்திக்கானில் ஒரே இராணுவ அமைப்பு என்று அறிவித்தார்.  இவ்வாறு, பாப்பிறைப் பணியில் எளிமையைப் புகுத்தி வரலாறு படைத்தவர், புனித திருத்தந்தை 6ம் பவுல்.

2ம் வத்திக்கான் பொதுச்சங்கம்

புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் இறைபதம் சேர்ந்ததையடுத்து, அவர் அழைப்பு விடுத்து நடத்திய 2ம் வத்திக்கான் பொதுச்சங்கமும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆயினும், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், அப்பொதுச் சங்கத்தை தொடர்ந்து நடத்தி முடிக்கத் தீர்மானித்தார். அதன்படி அதனை மீண்டும் நடத்தி, 1965ம் ஆண்டு நிறைவு பெறச் செய்தார். அப்பொதுச் சங்கத்தில் பயன்படுத்தப்படும் மொழிகள் எப்போதும் நட்பை வெளிப்படுத்துவதாய் இருக்க வேண்டும். பிரிந்த கிறிஸ்தவ சபையினரையும், மற்ற மதத்தினரையும் கோபப்படுத்தும் அறிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று, இவர் வலியுறுத்தி வந்தார். மிலான் பேராயராகப் பணியாற்றத் தொடங்கியவேளையில் கொண்டுவந்த வளர்ச்சித் திட்டங்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் மற்ற மூன்று அமர்வுகளையும் வழிநடத்த இவருக்கு உதவின. மரபுகள் முற்றிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உரியவை என்ற நிலை இருக்கும்போது தவிர, மற்ற நேரங்களில், உரோமன் கத்தோலிக்கத் திருஅவை, 20ம் நூற்றாண்டில், கடந்தகால மரபுகளுக்கு பிரமாணிக்கமுள்ள சான்றாக இருக்க வேண்டும் என்பதில், இவர் மிகுந்த அக்கறையுடன் இருந்தார். 1965ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் முடிந்தவுடன், அதன் தீர்மானங்கள், திருஅவை வாழ்வின் எல்லா நிலைகளிலும் செயல்படுத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியாய் இருந்தார் திருத்தந்தை 6ம் பவுல்.   

20 May 2020, 14:12