திருத்தந்தையர் அணிந்த மும்மகுடத்தைக் கழற்றி வைத்த புனித திருத்தந்தை 6ம் பவுல் திருத்தந்தையர் அணிந்த மும்மகுடத்தைக் கழற்றி வைத்த புனித திருத்தந்தை 6ம் பவுல் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-22

புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் மும்மகுடம், வாஷிங்டன் தேசிய அமலமரி பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித திருத்தந்தை 6ம் பவுல்-4

இத்தாலியின் மிலான் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் ஜொவான்னி மொந்தினி அவர்கள், 1963ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், புனித பவுலடிகளார் மீது வைத்திருந்த நன்மதிப்பால், பவுல் என்ற பெயரை ஏற்றார்.  திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் கடினமான முதல் அமர்வு முடிந்திருந்த காலக்கட்டத்தில், இத்தலைமைப் பணியை ஏற்றார். ஏனெனில் புதிய திருத்தந்தை, அப்பொதுச் சங்கத்தை தொடர்ந்து நடத்த வேண்டியிருந்தது. புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இத்தாலியில் ஃபாசிச ஆட்சியின் தொடக்க காலத்தில், புயல் நிறைந்த சூழலில் பல்கலைக்கழக மாணவர்களுடன் நீண்டகாலமாகக் கொண்டிருந்த தொடர்பு, இவரது மெய்யியல் ஞானம், வாசித்து தியானிக்கும் திறன், நீண்டகாலம் ஆற்றிய தூதரகப் பணிகளில் கிடைத்த அனுபவம் போன்றவை, குழப்பம் நிறைந்த பிரச்சனைகளுக்கு, இவரால் எளிதில் தீர்வு காண உதவின. “பாப்பிறை தலைமைத்துவம் தனித்துவமிக்கது. இது அதிகளவில் தனிமையைக் கொணர்வது. நான் தனிமையாய் இருந்தேன். இப்போது அந்த தனிமை முழுமை பெறுகிறது மற்றும், அச்சமூட்டுகின்றது” என்று, இவர், தனது பாப்பிறைப் பணி பற்றி, தனது நாள்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார். திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், பாப்பிறையாக முடிசூட்டப்படும் நிகழ்வில் மாற்றங்களைக் கொணர்ந்தவர்.

பாப்பிறையாக முடிசூட்டும் நிகழ்வு

கான்கிளேவ் அவை, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்தவுடன், தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதற்கு இசைவு தெரிவித்தால், உடனடியாக அவர், பாப்பிறை தலைமைத்துவத்தின் அனைத்து உரிமைகளையும், அதிகாரத்தையும் பெறுகிறார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆயராக இல்லாமல் இருந்தால், உடனடியாக அவர் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்படுவார். மரபுப்படி, இந்த திருவழிபாட்டை, கர்தினால்கள் அவையின் தலைவர் நிறைவேற்றுவார். புதிய திருத்தந்தை ஏற்கனவே ஆயராக இருந்தால், அவர் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் நடுமாடத்தில் தோன்றி, வத்திக்கான் பேதுரு வளாகத்தில் காத்திருக்கும் எல்லாருக்கும் ஆசீர் வழங்குவார். ஆனால் இக்காலத்தில் கர்தினால்களே திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால், ஆயர் திருநிலைப்பாடு நடைபெறுவதில்லை. புதிய திருத்தந்தையின் ஆயர் பணி நிகழ்வு, அவரின் பேராலயமான உரோம் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் நடைபெறும். ஒரு காலத்தில் இந்த வழிபாட்டுமுறை, மும்மகுடம் சூட்டும் நிகழ்வோடு சேர்ந்திருக்கும். ஆனால் பிரான்ஸ் நாட்டின் அவிஞ்ஞோனில் திருத்தந்தையர் தங்கியிருந்த காலக்கட்டத்தில், உரோம் நகரில் திருத்தந்தையரின் பேராலயத்தில் முடிசூட்டப்பட இயலாமல் இருந்தனர். எனினும் திருத்தந்தை உரோம் திரும்பிய பிறகு, முடிசூட்டும் விழா தொடர்ந்து நடைபெற்றது. ஆயினும், திருத்தந்தை 11ம் கிரகரி அவர்கள், உரோம் நகருக்குத் திரும்பியபோது, இலாத்தரன் மாளிகை, மிக மோசமான நிலையில் பழுதுபார்க்க வேண்டியிருந்ததால், அந்தத் திருத்தந்தை, தன் உறைவிடத்தை வத்திக்கானுக்கு மாற்றினார். முடிசூட்டப்படும் நிகழ்வும், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்றது. இலாத்தரன் பெருங்கோவில் உரோம் மறைமாவட்ட பேராலயமாகவே இருந்தது. திருத்தந்தையர், உரோம் ஆயர்கள் என்ற முறையில், பாப்பிறை திருப்பொழிவு நிகழ்வும் அங்கேயே நடைபெற்றது. ஒரு திருத்தந்தை, "வத்திக்கானில் கைதியாக" வைக்கப்பட்டிருந்த காலக்கட்டத்தில் அத்திருப்பொழிவு நிகழ்வு அங்கு நடைபெறவில்லை.

முடிசூட்டும் திருப்பலி

புதிய திருத்தந்தையின் முடிசூட்டும் திருப்பலி, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளை அடுத்துவரும் முதல் ஞாயிறு அல்லது புனித நாளன்று நடைபெற்றது. திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றும் மிக ஆடம்பரமான திருப்பலியில், திருப்புகழ்மாலை செபம் சொல்கையில், புதிய திருத்தந்தை அரியணையில் அமர்ந்திருப்பார். அனைத்து கர்தினால்களும் ஒவ்வொருவராக திருத்தந்தையிடம் வந்து, அவரின் கரத்தை முத்தி செய்து, தங்களின் கீழ்ப்படிதலை அறிவிப்பார்கள். அவர்களுக்குப்பின், பேராயர்கள் மற்றும், ஆயர்கள் ஒவ்வொருவராக வந்து, அவரின் காலை முத்தி செய்வர். இதைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை, வெண்மை நிற மேற்கூரை போடப்பட்ட பெரிய அரியணையில் அமர வைக்கப்பட்டு, புனித பேதுரு பெருங்கோவில் வழியாகத் தூக்கி வரப்படுவார். பாப்பிறை, மும்மகுட தொப்பிக்குப் பதிலாக, விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயர் தொப்பியை அணிந்திருப்பார். இந்த பவனி மூன்றுமுறை நிறுத்தப்பட்டு, ஆளிவிதைகள் புதிய திருத்தந்தைக்குமுன்னர் எரிக்கப்படும். பின்னர் திருத்தந்தை திருப்பலி பீடம் சென்றவுடன் திருப்பலி ஆரம்பமாகும். பாவமன்னிப்பு செபம் முடிந்தவுடன் புதிய திருத்தந்தையின் தலையில் மும்மகுடம் சூட்டும் நிகழ்வு நடைபெறும்.     

மும்மகுடத்தை கழற்றியவர்

புதிய திருத்தந்தையருக்கு மும்மகுடம் சூட்டப்படும் நிகழ்வு, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்களுக்குப்பின் நடைபெறவில்லை. 1963ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி புதிதாக திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு, ஜூன் 30ம் தேதி மும்மகுடம் சூட்டப்படும் நிகழ்வு நடைபெற்றது. 11ம் நூற்றாண்டில் திருத்தந்தை 2ம் நிக்கொலாஸ்  (1059–1061) அவர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட முடிசூட்டப்படும் நிகழ்வு, 1963ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்றவேளையில், திருவழிபாட்டு நிகழ்வில், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இந்த மும்மகுடத்தைக் கழற்றி வைத்தார். கத்தோலிக்கத் திருஅவையில் 820 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த அந்த வழக்கத்தை, தான் கைவிடுவதாகவும் அவர் அறிவித்தார். அன்றிலிருந்து அவர் அந்த மும்மகுடத்தை அணியவே இல்லை. இம்மும்மகுடம் விற்கப்பட்டு அந்தப் பணம் ஏழைகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1975ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி வெளியிட்ட, Romano Pontifici Eligendo என்ற திருமடல் வழியாக, திருத்தந்தையரை புதிதாகத் தேர்ந்தெடுக்கும் முறைகள் பற்றி விவரித்தார். கர்தினால்கள் அவையின் எண்ணிக்கை அதிகபட்சம் 120 என்றும், எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்தேர்தலில் பங்கெடுக்க முடியாது என்றும் அத்திருமடலில் அறிவித்தார். ஆயினும், புதிய திருத்தந்தையர் தேர்ந்தெடுக்கப்பட்டபின் முடிசூட்டும் நிகழ்வு தொடரும் எனவும் அம்மடலில் அவர் குறிப்பிட்டிருந்தார் இருந்தபோதிலும், இவருக்குப்பின் தலைமைப் பணிக்கு வந்த திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள், தனக்கு எளிய முறையே வேண்டும் எனக்  கேட்டார். அவருக்குப்பின் வந்த, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ் யாருமே இந்த நிகழ்வை நடத்தவில்லை. இவ்வாறு புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், “திருத்தந்தை, பணியாளர்களுக்குப் பணியாள்” என்பதை செயல்படுத்தியவர். வத்திக்கானில் இருபதுக்கும் அதிகமான மும்மகுடங்கள் உள்ளன.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2020, 14:15