புனித திருத்தந்தை 6ம் பவுல் புனித திருத்தந்தை 6ம் பவுல் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-21

திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், 1963ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி இறைவனடி சேர்ந்தார். அவருக்குப்பின், கர்தினால் மொந்தினி அவர்கள், 1963ம் ஆண்டு, ஜூன் 21ம் தேதி, பகல் 11.22 மணிக்கு திருஅவையின் தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித திருத்தந்தை 6ம் பவுல்-3

1963ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், திருத்தந்தை 6ம் பவுல். இந்தத் தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன், பேராயர் ஜொவான்னி மொந்தினியாகிய இவர், மிலான் பேராயராக, 1955ம் ஆண்டில் பொறுப்பேற்றார். தான் பொறுப்பேற்ற சில மாதங்களுக்குள், தொழிற்சங்கங்கள், சமுதாயக் கழகங்கள் போன்றவற்றை நேரிடையாகச் சந்தித்து, பணியிடங்களின் சூழல்கள் மற்றும், தொழில் சார்ந்த விவகாரங்களில் ஆர்வம் காட்டினார். இவை தொடர்பாக, உரைகள் ஆற்றினார். நவீன சமுதாயத்தில் ஆலயங்களே பயனுள்ள கட்டடங்கள் மற்றும், ஆன்மீக முறையில் ஓய்வெடுப்பதற்கு மிகவும் அவசியமான இடங்கள் என நம்பி, திருவழிபாடு மற்றும், ஆழ்நிலைத் தியானங்கள் இடம்பெறுவதற்கென, நூற்றுக்கும் அதிகமான புதிய ஆலயங்களை எழுப்பினார். இவர் பொதுவில் ஆற்றிய உரைகள், மிலான் நகரில் மட்டுமல்ல, உரோம் நகரிலும், பிற இடங்களிலும் கவனமாக நோக்கப்பட்டன. இவர் பொது மக்களிடம், கத்தோலிக்கரை மட்டுமன்றி, பிரிவினைவாதிகள், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், முஸ்லிம்கள், கடவுள்மறுப்பு கொள்கையாளர்கள், அந்நியக் கடவுளை வணங்குபவர், தன்னிலும் மாறுபட்டவர் போன்ற எல்லாரையும் அன்புகூருங்கள் என்று கூறிவந்தார். இதனால் சிலர் இவரை, முற்போக்கு சிந்தனையாளர் எனக் கருதினர். 1957ம் ஆண்டில் ஆங்லிக்கன் கிறிஸ்தவர்கள் குழு ஒன்று மிலான் நகர் வந்தபோது, அவர்களுக்கு இவர் நல்வரவேற்பளித்தார்.

மிலான் பேராயர் மொந்தினி

பேராயர் ஜொவான்னி மொந்தினி அவர்கள், மிலான் பேராயராக, பணியாற்றியபோது மேய்ப்புப் பணிகளில் புதிய அணுகுமுறைகளைக் கையாண்டார். திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் திருவழிபாட்டில் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் மிலான் உயர்மறைமாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட தீவிரமாக இவர் முயற்சித்தார். எடுத்துக்காட்டாக, இவர் மிலான் நகரமெங்கும் வைக்குமாறு கூறிய விளம்பரத் தட்டிகளில், இவ்வாறு எழுதச் சொன்னார்.  “1957ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி முதல், 24ம் தேதி வரை, ஆயிரம் குரல்கள் ஒலிக்கும். இந்தக் காலக்கட்டத்தில், 500க்கும் அதிகமான அருள்பணியாளர்கள், பல ஆயர்கள், கர்தினால்கள், மற்றும் பொதுநிலையினர், ஆலயங்களில் மட்டுமல்ல, தொழிற்சாலைகள், பெரிய கூட்டங்கள் நடைபெறும் அரங்கங்கள், வீடுகள், வீட்டு முற்றங்கள், பள்ளிகள், அலுவலகங்கள், இராணுவக் குடியிருப்புகள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், பயணியர் விடுதிகள் போன்ற அனைத்திலும், ஏழாயிரம் மறையுரைகள் ஆற்றுவார்கள்” என்று எழுதி விளம்பரம் செய்தார். இதன் வழியாக, சமய உணர்வின்றி இருந்த மிலான் நகரில் விசுவாசத்தை மீண்டும் புகுத்துவதே பேராயர் மொந்தினி அவர்களின் நோக்கமாக இருந்தது. இவர், மக்களிடம், இறைவனை, எம் தந்தையே எனச் சொல்லத் தெரிந்து, அதன் பொருளை உணர்ந்தால் மட்டுமே, கிறிஸ்தவ விசுவாசத்தை நம்மால் புரிந்துகொள்ள இயலும் என்று சொன்னார்.

திருத்தூதர்களாக இருப்பது

ஒருமுறை பேராயர் மொந்தினி அவர்கள், திருத்தூதர்களாக இருப்பது என்பது, அன்புக்குரியவர்களாகச் செயல்படுவதாகும் என்று கூறினார். நாம் அனைவரையும், குறிப்பாக, தேவையில் இருப்போரை அன்புகூர்வோம். நம் காலத்தை, நம் தொழில்நுட்பத்தை, நம் கலையை, நம் விளையாட்டை, நம் உலகை அன்புகூர்வோம் என்று இவர் சொன்னார். இவர் பொதுநிலையினரின் தூதுரைப்பணிக்கு முக்கியத்துவம் அளித்தார். புனித திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், 1958ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு அடுத்த நவம்பர் மாதம் 17ம் தேதி தலைமைப் பணியை ஏற்றார். அதற்கு அடுத்த டிசம்பர் 15ம் தேதி திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், புதிய கர்தினால்களை அறிவித்தார். புதிய கர்தினால்கள் பட்டியலில் முதலில் இடம்பெற்றவர் பேராயர் மொந்தினி. இவரை கர்தினாலாக அறிவித்து வத்திக்கானில் பல துறைகளுக்கு தலைவராக்கினார் திருத்தந்தை 23ம் யோவான். கர்தினால் மொந்தினி அவர்கள், 1962ம் ஆண்டில் ஆப்ரிக்க கண்டத்தின், கானா, சூடான், கென்யா, காங்கோ, தற்போதைய ஜிம்பாப்வே நாடாகிய ரொடீசியா, தென்னாப்ரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளைப் பார்வையிட்டார். மேலும், 1960ம் ஆண்டில், பிரேசிலுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், சுற்றுப்பயணம் மேற்கொண்டார், கர்தினால் மொந்தினி.

கர்தினால் மொந்தினி

திருத்தந்தை 23ம் யோவான் அவர்களும், கர்தினால் மொந்தினி அவர்களும் நண்பர்கள் எனச் சொல்லப்படுகின்றது. திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், ஒரு புதிய பொதுச்சங்கத்தை, அதாவது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை அறிவித்தபோது, “இந்த வயதான சிறுவன், எத்தகைய குளவிக்கூட்டைக் கட்டுகிறார் என்று அறிந்திருக்கவில்லை” என்று நகைச்சுவையாகச் சொன்னாராம் கர்தினால் மொந்தினி. ஆனால், இவரை, திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், இந்தப் பொதுச்சங்கத் தயாரிப்பு மையக் குழுவிற்கு நியமனம் செய்தார். பொதுச்சங்கம் நடைபெற்ற நாள்களில் வத்திக்கானிலேயே தங்குமாறு அவரை, திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் கேட்டுக்கொண்டார். திரிதெந்தின் பொதுச்சங்கம் ஆரம்பிக்கப்பட்ட 400ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை, 1962ம் ஆண்டிலே முடித்துவிட நினைத்தார், திருத்தந்தை 23ம் யோவான். அவர் அச்சமயத்தில் புற்றுநோயால் தாக்கப்பட்டிருந்ததும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அது நிறைவேறவில்லை.

திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி புற்றுநோயால் இறைவனடி சேர்ந்தார். அவருக்குப்பின், கர்தினால் மொந்தினி அவர்கள் 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி, பகல் 11.22 மணிக்கு திருஅவையின் தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், திருத்தூதர் பவுலடிகளார் மீது வைத்திருந்த நன்மதிப்பால், 6ம் பவுல் என்ற பெயருடன் 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி அவரின் மரணம் வரை, ஏறத்தாழ 15 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்தினார். இவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2020, 13:52