தேடுதல்

இயேசு, பார்வையற்றவரது கையைப் பிடித்து, ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். - மாற்கு 8:23 இயேசு, பார்வையற்றவரது கையைப் பிடித்து, ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். - மாற்கு 8:23 

விவிலியத்தேடல்: படிப்படியாக பார்வை பெற்ற புதுமை 2

பெத்சாய்தா நகரில் செய்யப்பட்ட வல்ல செயல்கள் அம்மக்களிடம் பெரும் மாற்றத்தை நிகழ்த்தவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிடும் இயேசு, மீண்டும் ஒருமுறை, அதே நகருக்குச் சென்று, வல்ல செயலொன்றை நிகழ்த்துகிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: படிப்படியாக பார்வை பெற்ற புதுமை 2

புகழ்பெற்ற துப்பறியும் அறிஞர், ஷெர்லாக் ஹோம்ஸ் (Sherlock Holmes) அவர்கள், தன் நண்பர் வாட்சன் என்பவருடன் சுற்றுலா சென்றார். அன்றிரவு, திறந்த வெளியில் கூடாரம் அமைத்து, அவர்கள் இருவரும் உள்ளே உறங்கச் சென்றனர். நள்ளிரவில் ஏதோ ஓர் உணர்வால் உந்தப்பட்டு, கண்விழித்த ஷெர்லாக் ஹோம்ஸ் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அருகில் தூங்கிக்கொண்டிருந்த வாட்சனை எழுப்பி, அவரிடம், "வாட்சன், மேலே பார். என்ன தெரிகிறது?" என்று கேட்டார். "பல நூறு விண்மீன்கள் தெரிகின்றன" என்று வாட்சன் சொல்லவே, ஷெர்லாக் அவரிடம், "சரி, அது உனக்கு என்ன சொல்கிறது?" என்று அழுத்திக் கேட்டார்.

உடனே, வாட்சன், "கண்ணுக்குத் தெரியும் இந்த விண்மீன்களைத் தாண்டி, இன்னும் பலகோடி விண்மீன்கள் உள்ளன என்று வானியல் சொல்கிறது. பளிச்சென மின்னும் விண்மீன்கள், நாளை, நமக்குத் தெளிவான வானிலை இருக்கும் என்று சொல்கின்றன. இவை அனைத்தையும் படைத்த இறைவன் எவ்வளவு வல்லவர் என்று இறையியல் சொல்கிறது" என்று மூச்சுவிடாமல் பேசிய வாட்சன், ஷெர்லாக் பக்கம் திரும்பி, "சரி, அது உனக்கு என்ன சொல்கிறது?" என்று கேட்டார். ஷெர்லாக், தலையில் அடித்துக்கொண்டு, "என் முட்டாள் நண்பனே, நாம் போட்டிருந்த கூடாரத்தை யாரோ திருடிவிட்டார்கள்" என்று கத்தினார்.

இது ஒரு நகைச்சுவைத் துணுக்கு. பல நேரங்களில், நகைச்சுவைத் துணுக்குகள், வெறும் சிரிப்பை மட்டுமல்ல. சிந்தனையையும் தூண்டும் என்பது நமக்குத் தெரியும். இந்த நகைச்சுவைத் துணுக்கில், எது மிகவும் தெளிவாக, எளிதாகத் தெரியவேண்டுமோ, அதைத்தவிர ஏனையவற்றை வாட்சன் கண்டார் என்பதை எண்ணி, சிரிக்கிறோம். பல கோடி மைல்களுக்கு அப்பால் இருந்த விண்மீன்களைக் காணமுடிந்த வாட்சனுக்கு, தலைக்கு மேல் போடப்பட்டிருந்த கூடாரம் காணாமற்போன உண்மையை, காணமுடியாமல் போயிற்றே என்று, அவர் மீது பரிதாபப்படுகிறோம். வாட்சனை எண்ணி பரிதாபப்படும் நம் எண்ணங்களை நம்மீது திருப்பினால், நாமும், பல்வேறு தருணங்களில், இத்தகைய நிலையில் இருந்திருக்கிறோம் என்பதை உணர்வோம்.

கண் பார்வை இல்லாமல், காது கேளாமல், வாய் பேசாமல் வாழ்ந்த ஹெலன் கெல்லெர் (Helen Keller) அவர்கள் கூறிய அழகான சொற்கள் நினைவுக்கு வருகின்றன: "காணும் திறன்பெற்ற பலருடன் நான் நடந்து செல்கிறேன். ஆனால், அவர்கள், கடலிலும், வானிலும் எதையும் காண்பதில்லை. வெறும் பார்க்கும் திறன்பெற்று திருப்தியடையும் இவர்களைவிட, பார்வையற்ற ஒளியில் நான் பாய்மரம் விரித்துச் செல்வது எவ்வளவோ மேல்."

அதேவண்ணம், ஹெலன் கெல்லெர் அவர்கள் கூறிய மற்றொரு கூற்றும் மிக ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது. "உலகில் மிக அழகானவற்றைக் கண்ணால் காண முடியாது, தொட்டும் உணர முடியாது. உள்ளத்தால் மட்டுமே உணரமுடியும்" என்பதே அவரது அழகியக் கூற்று.

இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? (மாற்கு 8:17-18) என்று வேதனையுடன் தன் சீடர்களிடம் இயேசு கேள்விகளை எழுப்பிய நிகழ்வை சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இயேசு எழுப்பிய இக்கேள்விகள், மாற்கு நற்செய்தியில், தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டுள்ள அடுத்த நிகழ்வுக்கு ஓர் அறிமுகம் போன்று பயன்படுகின்றன. கண்ணிருந்தும் காணமுடியாத தன் சீடர்களைப்பற்றி கவலையடைந்த இயேசு, பார்வையற்ற ஒருவரை குணமாக்குகிறார். மாற்கு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ள இப்புதுமையின் அறிமுக வரிகளை இவ்வாறு வாசிக்கிறோம்:

மாற்கு 8:22-23

அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார்.

இப்புதுமையின் நிகழ்களம் 'பெத்சாய்தா' என்ற குறிப்பு, முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது. 'பெத்சாய்தா' என்பது, 'பெத்' மற்றும் 'சாய்தா' என்ற இரு சொற்களின் இணைப்பில் உருவான சொல். 'பெத்' என்ற சொல்லின் பொருள், 'இல்லம்' அல்லது 'வீடு'. 'பெத்' என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு, நற்செய்தியில், பெத்லகேம், பெத்தானியா, பெத்பகு போன்ற சொற்கள் ஒரு சில ஊர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளன. 'பெத்லகேம்' என்றால், 'அப்பத்தின் வீடு' என்றும், 'பெத்தானியா' என்றால், 'துயரத்தின் வீடு' என்றும் 'பெத்பகு' என்றால், 'அத்திப் பழங்களின் வீடு' என்றும் பொருள். அதேவண்ணம், 'பெத்சாய்தா' என்ற சொல்லுக்கு, 'வேட்டையாடும் வீடு' அல்லது, 'மீன்பிடிக்கும் வீடு' என்ற பொருள் வழங்கப்படுகிறது. 'பெத்சாய்தா' என்ற ஊரில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்ததால், அந்நகருக்கு அப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என்பது, விவிலிய விரிவுரையாளர்களின் கணிப்பு.

'பெத்சாய்தா' என்ற ஊரின் பெயர், நான்கு நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. யோவான் நற்செய்தி முதல் பிரிவில், இயேசு தன் முதல் சீடர்களை அழைத்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சீடர்களில் ஒருசிலர், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த பெத்சாய்தா ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை, நற்செய்தியாளர் யோவான் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுள்ளார்:

யோவான் 1:43-44

மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, "என்னைப் பின்தொடர்ந்து வா" எனக் கூறினார். பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.

இயேசு தன் பன்னிரு திருத்தூதர்களை பல்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு, லூக்கா நற்செய்தி 9ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. தங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி திரும்பி வந்த திருத்தூதர்களை இயேசு பெத்சாய்தாவுக்கு அழைத்துச் சென்றதாக நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார்:

லூக்கா 9:10

திருத்தூதர்கள் திரும்பி வந்து, தாங்கள் செய்த யாவற்றையும் இயேசுவிடம் எடுத்துக் கூறினார்கள். அவர்களை மட்டும் கூட்டிக்கொண்டு அவர் தனித்திருப்பதற்காகப் பெத்சாய்தா என்னும் நகருக்குச் சென்றார்.

இயேசுவும் சீடர்களும் பெத்சாய்தா சென்றிருப்பதை அறிந்த மக்கள் அவர்களைத் தொடர்ந்து அங்கு சென்றதாகவும், அவர்களுக்கு இயேசு இறையரசை அறிவித்ததோடு, அவர்கள் நடுவே புதுமைகள் செய்ததையும் நற்செய்தியாளர் லூக்கா 9ம் பிரிவில் குறிப்பிடுகிறார். குறிப்பாக, 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்தப் புதுமை, பெத்சாய்தா நகருக்கருகே பாலைநிலத்தில் நடைபெற்றதாக லூக்கா கூறியுள்ளார்.

சீடர்கள் ஒருசிலரின் வாழ்விடமாகவும், புதுமைகள் நிகழ்ந்த இடமாகவும் பெத்சாய்தா நகரை நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதே நகரம், இயேசுவின் கண்டனத்தையும் பெற்றது என்பதை, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், லூக்காவும் குறிப்பிட்டுள்ளனர்:

மத்தேயு 11:20-22 (காண்க. லூக்கா 10:13-14)

இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார். "கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார்.

பெத்சாய்தா நகரில் செய்யப்பட்ட வல்ல செயல்கள் அம்மக்களிடம் பெரும் மாற்றத்தை நிகழ்த்தவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிடும் இயேசு, மீண்டும் ஒருமுறை, அதே நகருக்குச் சென்று, வல்ல செயலொன்றை நிகழ்த்துகிறார். அதனை நற்செய்தியாளர் மாற்கு மட்டுமே பதிவுசெய்துள்ளார்.

மாற்கு நற்செய்தி 7 மற்றும் 8ம் பிரிவுகளில் பதிவாகியுள்ள தனித்துவமானப் புதுமைகள் இரண்டையும் இணைத்து சிந்திக்கும்போது, ஒரு சில ஒப்புமைகளை நம்மால் காணமுடிகிறது. 7ம் பிரிவில் இடம்பெறும் புதுமையில், காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர் (மாற்கு 7:32) என்று கூறப்பட்டுள்ளது. அதேவண்ணம், 8ம் பிரிவில் இடம்பெறும் புதுமையிலும், அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர் (மாற்கு 8:22) என்று வாசிக்கிறோம். குறையுள்ள இவ்விருவரையும் இயேசுவிடம் அழைத்து வந்த நல்ல உள்ளங்களைப் பற்றி சிந்திக்கும்போது, அத்தகைய நற்பணிகளை இன்றளவும் தொடர்ந்து ஆற்றிவரும் நல்லோருக்காக, குறிப்பாக, நோயுற்றோர் பலரை திருத்தலங்களுக்கு அழைத்துச்செல்லும் நல்ல உள்ளங்களுக்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.

அடுத்து, இவ்விருவரையும் இயேசு கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்றதாக நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிடுகிறார். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று (மாற்கு 7:33). என்று முதல் புதுமையிலும், அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். (மாற்கு 8:33) என்று இரண்டாவது புதுமையிலும் கூறப்பட்டள்ளது.

மூன்றாவது ஒப்புமையாக நாம் காண்பது, இயேசு இவ்விருவரையும் குணமாக்கிய முறை. இவ்விரு புதுமைகளிலும் இயேசு தன் உமிழ்நீரைப் பயன்படுத்தி, இவ்விருவரின் குறைகளை நீக்குகிறார். இயேசு பயன்படுத்திய இந்த முறையால், பார்வையற்றவர் படிப்படியாக பார்வை பெறும் நிகழ்வை, நாம் அடுத்த தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 May 2020, 12:05