ஆண்டவரே என் ஆயர் - திருப்பாடல் 23, 1 ஆண்டவரே என் ஆயர் - திருப்பாடல் 23, 1 

உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

தீமைகள், துன்பங்கள் இல்லாத உலகம் என்ற உறுதியைவிட, அத்துன்பங்களில் கடவுளின் துணை உண்டு என்ற உறுதியைத் திருப்பாடல் 23 வழங்குகிறது. அத்தகைய உறுதி, இன்று, நம் அனைவருக்கும் தேவையாக உள்ளது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

கண்ணுக்குத் தெரியாத கிருமியொன்று, மனித சமுதாயத்தை, பகடைக்காயாக புரட்டியெடுத்து வருகிறது. தங்களைத் தாக்கியது யார், அல்லது, எது என்று தெரியாமலேயே ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இக்கிருமிக்கு ஓர் அடையாளம் வழங்கும் வகையில், உலக நலவாழ்வு நிறுவனம் (WHO), இதற்கு, கோவிட்-19 என்று பெயரிட்டுள்ளது.

இக்கிருமியைப் பற்றிய முழுமையான உண்மைகள், தெளிவாகத் தெரியாதச் சூழலில், ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் இக்கிருமியைப் பற்றிய வதந்திகளைப் பரப்பிய வண்ணம் உள்ளன. ஒரு சிலர், இந்தக் கிருமியை மையப்படுத்தி, நகைச்சுவை என்ற பெயரில், காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். அண்மையில், தமிழ் நாட்டிலிருந்து, சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு காணொளி, மனதைப் புண்படுத்தியது. கடினமானப் பணிகளைச் செய்யும் எளிய மனிதர்கள் ஒரு சிலர், இந்தக் கிருமியின் பெயரை தவறுதலாக உச்சரிப்பதைப் பதிவுசெய்து, இக்காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கிருமி, எங்கிருந்து, எப்படி வந்தது, இதை எவ்வாறு ஒழிப்பது, இந்தக் கிருமியால் தாக்கப்பட்டவர்களை எப்படி காப்பாற்றுவது என்ற விவரங்கள், இதுவரை, உறுதியாக, தெளிவாகக் கிடைக்கவில்லை. இருப்பினும், இதைக்குறித்து, ஒவ்வொருநாளும், தொலைக்காட்சிகளில், நாட்டுத் தலைவர்களும், அறிவியல் அறிஞர்களும் தவறான, தாறுமாறான கருத்துக்களைக் கூறிவருகின்றனர். அவர்களைக் கேலிசெய்யவோ, கேள்வி கேட்கவோ துணிவு இல்லாதவர்கள், எளிய மக்கள், இக்கிருமியின் பெயரை தவறுதலாக உச்சரிப்பதை வெளிச்சமிட்டுக் காட்டுவது, கீழ்த்தரமான நகைச்சுவை முயற்சி என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

நம் உலகை பலமுறை நிர்மூலமாக்கிவிடக்கூடிய அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்த நம் அறிவியல் மேதைகள், ஒரு கிருமியை அழிக்கத் தெரியாமல், திணறுகின்றனர். நம் அரசியல் தலைவர்களோ, இந்தக் கிருமியைச் சமாளிக்கும் வழிகளை சரியாகப் புரிந்துகொள்ளாமல், மக்களை, தவறான வழிகளில் அழைத்துச் செல்கின்றனர். அறிவியலும், அரசியலும் நமக்கு சரியான பாதையைக் காட்டமுடியாத இந்நேரத்தில், மக்களை சரியான வழிகளில் நடத்திச்செல்லும் உண்மையான தலைவர்கள் எங்கே என்ற ஏக்கமும், தேடலும் எழுகின்றன. நம் ஏக்கத்திற்கு ஏதோ ஒருவகையில் பதிலளிக்க, தாய் திருஅவை, இன்று நம் எண்ணங்களை, நல்லாயனாக விளங்கும் இயேசுவை நோக்கித் திருப்புகிறார்.

இந்த ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வழிபாட்டு வாசகங்களில், முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது, இன்று நாம் பயன்படுத்தும் பதிலுரைப் பாடல். திருப்பாடல்கள் நூலில் உள்ள 150 பாடல்களில், "ஆண்டவரே என் ஆயர்" என்று துவங்கும் 23ம் திருப்பாடலை, நாம் ஆலயங்களில் பாடி மகிழ்ந்திருக்கிறோம்; பலமுறை தியானித்துப் பலனடைந்திருக்கிறோம். கவலைகள், மனவலிகள் என்று, நம்மை இருள் சூழும் நேரங்களிலும், நிறைவு, நன்றி என்று, நம் மனதில் ஒளி எழும் நேரங்களிலும், இந்தத் திருப்பாடலை நாம் பயன்படுத்துகிறோம். உடல் நோய் கண்டவர்கள், குடும்பத்தில் ஒருவரை இழந்து தவித்தவர்கள் பலர், இந்தப் பாடல் வழியாக, மனஅமைதியும், நம்பிக்கையும் பெற்றுள்ளதைப் பார்த்திருக்கிறோம்.

கோவிட் 19 தொற்றுக்கிருமியால், நோயுற்று இருப்போரின் படுக்கைக்கருகிலும், இந்நோயால் உயிரிழந்தோர் பலரது இறுதி சடங்குகளிலும், இந்தத் திருப்பாடல், பலமுறை சொல்லப்பட்டிருக்கும் என்பது உறுதி. ஏனைய 149 திருப்பாடல்களை விட, விவிலியத்தின் பிற பகுதிகளை விட, 23ம் திருப்பாடலை பலரும் பயன்படுத்துவதற்கு காரணம் என்ன?

இந்தத் திருப்பாடல், நாம் எல்லாரும் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒர் உண்மையை, ஆறு இறைவாக்கியங்களில் சொல்கிறது. அந்த உண்மை இதுதான்: உலகில் அநீதிகள், அவலங்கள், அழிவுகள் நிகழும்போது, குறிப்பாக, அக்கொடுமைகள் நம் வாழ்வைத் தாக்கும்போது, "இறைவா நீ எங்கிருக்கிறாய்? ஏன் எங்களை இந்த இருளில் தள்ளிவிட்டாய்?" என்று நம் மனதில் கேள்விகள் எழுகின்றன. அதற்கு, கடவுளின் பதில் இவ்வாறு ஒலிக்கலாம்: “இந்த உலகம் நீதியாக, அமைதியாக, பிரச்சனைகள் இன்றி இருக்கும் என்று நான் வாக்குறுதி தரவில்லை. மாறாக, பிரச்சனைகளை நீ சந்திக்கும்போது, நான் உன்னோடு இருப்பேன் என்றுதான் நான் உறுதி கூறியுள்ளேன்.” இந்த எண்ணத்தை ஆழமாகச் சொல்கிறது இந்தத் திருப்பாடல்.

துன்பங்கள் வரும்போது, நம்முடன் துணைவந்து, நம்முடன் இணைந்து போராடி, பிரச்சனைகளைத் தீர்க்கும் நல்லதொரு ஆயராக கடவுள் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, ஏற்றுக்கொள்வதற்கு, திருப்பாடல் 23 உதவியாக இருக்கும். “நீர் என்னோடு இருப்பதால், உலகில் எத்தீங்கும் நிகழாது” என்று திருப்பாடலின் ஆசிரியர் கூறவில்லை. “நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” (திருப்பாடல் 23: 4). என்பதே, அவர் அறிக்கையிடும் உண்மை. தீமைகள், துன்பங்கள் இல்லாத உலகம் என்ற உறுதியைவிட, அத்துன்பங்களில் கடவுளின் துணை உண்டு என்ற உறுதியைத் திருப்பாடல் 23 வழங்குகிறது. அத்தகைய உறுதி, இன்று, நம் அனைவருக்கும் தேவையாக உள்ளது.

இஞ்ஞாயிறன்று, பலருடன் கூடி வழிபாட்டில் இந்தப் பாடலைப் பாடமுடியாமல் போகலாம். இல்லத்திலிருந்த வண்ணம் வழிபாடுகளில் நாம் கலந்துகொள்ளும் வேளையில், இத்திருப்பாடலின் வரிகளை, தனியாகவோ, குடும்பமாகவோ இணைந்து வாசித்து, தியானித்து, பலனடைய முயல்வோம்.

உயிர்ப்புக் காலத்தின் 4ம் ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. நல்லாயன் என்ற சொல்லைக் கேட்டதும், பரிவான, அமைதியான கிறிஸ்துவின் உருவம் நம் உள்ளங்களில் தோன்றி, இதமான உணர்வுகளைத் தருகிறது. கிறிஸ்தவப் பாரம்பரியத்தில், இயேசுவைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட முதல் உருவம், நல்லாயன் உருவம் என்பது, வரலாற்று அறிஞர்களின் கருத்து.

கிறிஸ்தவர்கள், உரோமையப் பேரரசால் வேட்டையாடப்பட்ட வேளையில், அவர்கள் உருவாக்கிய நிலத்தடி கல்லறைகளில், கிறிஸ்து, நல்லாயனாக வரையப்பட்டுள்ளார். 3ம் நூற்றாண்டையொட்டி உருவாக்கப்பட்ட இந்தக் கல்லறைகளில், அடிக்கடி தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்களுக்கு, ஆறுதலும், நம்பிக்கையும் தந்த உருவமாக, நல்லாயன் இயேசு இருந்தார். கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தந்த நல்லாயன் என்ற உருவகத்தை, இயேசு தன் வாழ்நாளில் பயன்படுத்தியபோது, அது, இஸ்ரயேல் மக்கள் நடுவே, ஒரு புரட்சியை உருவாக்கியது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

இஸ்ரயேல் மக்களின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், மோசே, தாவீது போன்ற மாபெரும் தலைவர்கள், ஆடுகளைப் பேணிக்காத்தவர்கள் என்பதை அறியலாம். தங்கள் தலைவர்கள், ஆயர்களாக இருந்தனர் என்பதில் பெருமை கொண்ட இஸ்ரயேல் மக்கள், அந்தப் பெருமையின் அடிப்படையில், தங்கள் இறைவனையும் ஓர் ஆயராக ஒப்புமைப்படுத்திப் பேசினர்.

இஸ்ரயேல் சமுதாயத்தில் இத்துணை உயர்ந்த மதிப்பு பெற்றிருந்த ஆயர்கள், அல்லது இடையர்கள், படிப்படியாக தங்கள் மதிப்பை இழந்து, இயேசுவின் காலத்தில், மிக, மிகத் தாழ்வானவர்களாகக் கருதப்பட்டனர். தங்கள் ஆடுகளோடு, அவர்கள், இரவும், பகலும் வாழ்ந்ததால், தூய்மையற்றவர்களாக, நாற்றமெடுத்தவர்களாக கருதப்பட்டனர். பசும்புல்வெளிகளைத் தேடி, ஆடுகளை அவர்கள் வழிநடத்திச் சென்றதால், ஊருக்குள் தங்கி, தொழுகைக்கூடங்களுக்குப் போகமுடியவில்லை. மோசே நிறுவிய ஒய்வுநாள், புனித நாள் கடமைகளை கடைபிடிக்க முடியவில்லை. எனவே, அவர்கள், இஸ்ரயேல் சமுதாயத்தில், மிகத் தாழ்ந்தவர்களெனக் கருதப்பட்டனர்.

அழுக்கானவர்கள், நாற்றமெடுத்தவர்கள், ஒய்வுநாள் கடமையைத் தவறியவர்கள், என்று அடுக்கடுக்காக அவர்கள் மீது குத்தப்பட்ட முத்திரைகள், ஆயர்களை, இஸ்ரயேல் சமுதாயத்தின் ஓரத்திற்குத் தள்ளிவிட்டன. எவ்வளவு தூரம் அவர்கள் ஒதுக்கப்பட்டனர் என்பதை, லூக்கா நற்செய்தியில், இயேசு பிறப்பு நிகழ்வின்போது, நாம் புரிந்துகொள்ளலாம்.

இஸ்ரயேல் சமுதாயத்தின் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது என்று லூக்கா நற்செய்தியில் (லூக்கா 2:1-5) வாசிக்கிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்பில், தங்கள் பெயர்களைப் பதிவுசெய்ய, மக்கள் அனைவரும், அவரவரது சொந்த ஊர்களுக்குச் சென்ற வேளையில், இடையர்கள், ஊருக்கு வெளியே, வயல்வெளியில் தங்கியிருந்தனர் (லூக்கா 2:8) என்பதை நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிட்டுச் சொல்கிறார். மக்கள் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படாத இடையர்கள், ஆடுகளோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். இறைமகன் இயேசுவுக்கும் இதே நிலைதான். அவர் பிறந்தபோது, மக்கள் தங்கியிருந்த இல்லங்களில் இடம் இல்லாமல், மிருகங்கள் தங்கியிருந்த தொழுவத்தில் இடம் கிடைத்தது.

இஸ்ரயேல் குலங்களிலிருந்து, ஏன், சொல்லப்போனால், மக்கள் சமுதாயத்திலிருந்தே ஒதுக்கி வைக்கப்பட்ட இடையர்களைத் தேடி, இறைவனின் தூதர்கள் சென்றனர் (லூக்கா 2:9) என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடுவது, ஒரு புரட்சியின் துவக்கமாக உள்ளது. மனிதரோடு இறைவன் என்ற பொருள்படும் 'இம்மானுவேலாக' தான் வந்துள்ளேன் என்ற உண்மையைச் சொல்வதற்கு, குழந்தை இயேசு, இடையர்களைத் தேர்ந்ததிலிருந்து, அவர்கள் மீது அவர் கொண்டிருந்த பெரும் மதிப்பு வெளிப்படுகிறது.

அன்றைய இடையர்களின் நிலையைச் சிந்திக்கும் இவ்வேளையில், நாம் வாழும் முழு அடைப்பு காலத்தையும் சிந்திப்போம். இந்த முழு அடைப்பு காலத்தில், நாம், ஒரு கூரைக்குக் கீழ், குடும்பத்தோடு வாழும்போது, கோடான கோடி மக்கள், தெருக்களில், சாலைகளில், தங்கள் குழந்தைகளோடு வாழும் அவலத்தையும் நாம் அறிவோம். அவர்களையெல்லாம் கனிவோடு எண்ணிப்பார்க்க, முடிந்தவரை, அவர்களுக்கு, உதவிக்கரம் நீட்ட, நல்லாயனான இயேசு நம்மை அழைக்கிறார்.

முப்பது ஆண்டுகளுக்குப் பின், இயேசு, தன் பணிவாழ்வில், ஆயர்களுக்குரிய மதிப்பை மீண்டும் அளித்தார். அவர், தன்னை, பல வழிகளில் உருவகப்படுத்திப் பேசியுள்ளார். வழி, ஒளி, வாழ்வு, திராட்சைச் செடி, வாழ்வின் நீர், உயிர் தரும் உணவு என்று அவர் அறிமுகப்படுத்திய உருவகங்களை இஸ்ரயேல் மக்கள் எளிதில் ஏற்றுக்கொண்டிருப்பர். ஆனால், "நல்ல ஆயன் நானே' (யோவான் 10:11) என்று அவர் கூறியது, இஸ்ரயேல் மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும். இன்றைய நற்செய்தியில் அத்தகைய ஓர் அதிர்ச்சியை இயேசு வழங்குகிறார்.

இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டுள்ள பகுதி யோவான் நற்செய்தியின் 10ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த நற்செய்தியின் 9ம் பிரிவில், பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமை கொடுக்கப்பட்டுள்ளது. அப்புதுமையின் இறுதியில் எழும் ஒரு காரசாரமான விவாதத்தில், இயேசுவை, ஒரு பாவி என்று அடையாளப்படுத்தினர் பரிசேயர்கள். அவர்களுக்குப் பதில்சொல்லும் வகையில், இயேசு, தன்னை ஒரு நல்ல ஆயனாக அடையாளப்படுத்தினார். உண்மையான ஆயனின் குணங்களாக இயேசு கூறும் பண்புகளில் ஒன்றை, சிறிது ஆழமாகச் சிந்திப்போம்:

யோவான் 10: 3-4

அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின், அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும்.

நூற்றுக்கணக்காய் ஆடுகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றுக்கும் பாசமாய் பெயரிட்டு அழைப்பது, ஆயனின் முக்கிய குணங்களில் ஒன்று. ஒவ்வொரு மனிதருக்கும் மிக நெருக்கமான, உயர்ந்த அடையாளம், அவரது பெயர். ஒருவரைப் பெயரிட்டு அழைக்கும்போது உருவாகும் உறவும், பிணைப்பும், உணர்ந்துபார்க்க வேண்டிய உண்மை. ஆனால், நாம் வாழும் காலத்தில், பெயர்கள் என்ற அடையாளத்தைக் காட்டிலும், எண்ணிக்கை என்ற அடையாளத்திற்குத் தரப்பட்டுள்ள மதிப்பை நாம் அனைவரும் அறிவோம். நமது வாழ்வை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் என்று, பல அடையாள அட்டைகளாக மாற்றி, ஒவ்வொன்றுக்கும் ஓர் எண்ணைக் கொடுத்து, நமது முக்கியமான அடையாளங்கள், எண்களில் சிக்கியுள்ளதை நாம் அனைவரும் உணர்ந்துவருகிறோம். முதல் தர நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளில், ஒருவரது வாழ்வே, அட்டைகளிலும், அவற்றில் உள்ள எண்களிலும் புதைந்து வருவதைப் பார்க்கலாம். இந்த அட்டைகள் தொலைந்துவிட்டால், அவற்றிலுள்ள எண்களை ஒருவர் மறந்துவிட்டால், அவர், தன் சுய அடையாளத்தையே இழக்கும் ஆபத்து உண்டு.

ஆடுகளிடம், ஆயர்களிடம் திரும்பி வருவோம்... மக்களின் மேய்ப்பர்களாக இருக்கும் ஆயர்களும், அருள்பணியாளர்களும், ஆடுகளின் பெயர்களை அறிந்திருப்பதோடு, ஆடுகளின் நறுமணத்தையும் உணர்ந்திருக்கவேண்டும் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுக்கும்  விண்ணப்பம். 2013ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட இரு வாரங்களில், புனித வியாழனன்று, அருள்பணியாளர்களுடன், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை நிறைவேற்றிய வேளையில், ஆடுகளின் நறுமணத்தை மேய்ப்பர்கள் உணரவேண்டும் என்ற அழைப்பை விடுத்தார். இதே விண்ணப்பத்தை, 'நற்செய்தியின் மகிழ்வு' என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட திருத்தூது அறிவுரை மடலிலும், அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்.

ஆயனின் குரல் கேட்டு ஆடுகள் பின்தொடர்வதுபோல், ஆடுகளின் நறுமணம், ஆயனை, ஆடுகளுடன் இணைக்கவேண்டும். அத்தகைய ஆழ்ந்த உறவை வளர்க்கும் ஆயர்களாக, திருஅவைத் தலைவர்களும் பணியாளர்களும் வாழ்வதற்கு, நல்லாயனிடம் உருக்கமாக செபிப்போம்.

தொற்றுக்கிருமியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் நாம், இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடப்பதுபோன்ற உணர்வைப் பெற்றுள்ளோம். இவ்வேளையில், திருப்பாடல் 23ன் நம்பிக்கை வரிகள், துணிவுடன் நடைபோட நமக்கு உதவட்டும்...

திருப்பாடல் 23: 4,6

 சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்... உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்: நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2020, 14:32