தேடுதல்

Vatican News
பானமாவில் உலக இளைஞர் நாள் பானமாவில் உலக இளைஞர் நாள் 

வாரம் ஓர் அலசல்: இளைஞர்கள் எழுச்சி பெற

இன்றைய நாளிலே இளைஞர்கள் தங்களது திறமையை உணர்ந்து மாண்புமிக்க மற்றும் சமுதாயத்திற்கு பயனுள்ள ஒரு வாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்துவோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

கத்தோலிக்க திருஅவையில் ஒவ்வோர் ஆண்டும் மறைமாநில அளவில், குருத்து ஞாயிறன்று உலக இளைஞர் நாள் சிறப்பிக்கப்படுகின்றது. இந்த நாளை புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் 1985ம் ஆண்டில் உருவாக்கினார். போலந்து நாட்டில் 1960களிலிருந்து இயங்கத் தொடங்கிய, ஒளி-வாழ்வு இயக்கத்தைச் சேர்ந்த கத்தோலிக்க இளைஞர்கள், கோடை காலத்தில் 13 நாள்களுக்கு மேலாக, "குழும நாள்" என்று கொண்டாடி வந்தனர். இந்த இயக்கத்தால் தூண்டப்பட்டு, திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இந்த நாளை உருவாக்கினார். குருத்து ஞாயிறன்று, உலகின் அனைத்து ஆயர்களும், தங்கள் மறைமாநிலங்களில் உலக இளைஞர் நாளைக் கொண்டாடுமாறும் இத்திருத்தந்தை, 1986ம் ஆண்டில் அழைப்பு விடுத்தார். இந்த உலக இளைஞர் நாள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, பன்னாட்டு அளவில் சிறப்பிக்கப்படுகிறது. ஏப்ரல் 5, இஞ்ஞாயிறன்று, மறைமாநில அளவில், வித்தியாசமான முறையில் சிறப்பிக்கப்பட்ட உலக இளைஞர் நாளை முன்னிட்டு, இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும் என்று உரையாற்றுகிறார், அருள்பணி ஜூலியன் கில்பெர்ட், தஞ்சாவூர் மறைமாநிலம். 

இளைஞர்கள் எழுச்சி பெற - அருள்பணி ஜூலியன்

அருள்பணி ஜூலியன், தஞ்சாவூர் மறைமாநிலம்

வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு அன்பு வணக்கம்! ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒரு மறக்க முடியாத பருவம் உண்டென்றால் அது இளமைப்பருவம் தான். இப்பருவத்தில் எத்தனை எத்தனை சவால்கள்! ஆனால் சவால்களை வெற்றிகரமாக சந்திக்கும் பொழுது எவ்வளவு சந்தோசம்! இந்த இளமைப்பருவத்தில்தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது என்று சொல்லலாம்.

இளைஞர்கள் என்பவர்கள் யார்? இளைஞர்கள் என்பவர்கள் பொதுவாக 15 வயதிலிருந்து 24 வயது வரையுள்ள இளம் பருவத்தினரைக் குறிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 15 வயதிலிருந்து 35 வயது வரையுள்ள திருமணமாகாத அனைவரும் இளைஞர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். இந்த வயதில் உள்ளவர்களுக்கு உடல் ரீதியான மாற்றங்கள் மட்டுமல்ல பல சமுதாய மற்றும், உளவியல் ரீதியான மாற்றங்களும் அதிக அளவில் ஏற்படுகின்றன. சிறுவர்களாக இருக்கும்பொழுது பெற்றோர்களை அதிகம் சார்ந்து வாழும் இளம்பருவத்தினர், ஏறக்குறைய 15 வயதிலிருந்து சுயமாக முடிவெடுக்க ஆரம்பிக்கின்றார்கள். குறிப்பாக இந்த வயதில் பெற்றோர் அல்லாதவர்களிடம் ஈர்ப்பு அதிகமாகிறது. இந்த ஈர்ப்பு நண்பர்கள், நடிகர்கள், தலைவர்கள், பிடித்தவர்கள் என அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதே நேரத்தில் ஓட்டுரிமையின் மூலம் சமுதாயக் கடமையும் அவர்களுக்கு உணர்த்தப்படுகிறது. எனினும்கூட இச்சமுதாயம் இளைஞர்களை முடிவெடுக்கக்கூடிய அளவிற்கு முழுமனிதர்கள் அல்ல என்ற பார்வையில்தான் அவர்களை நோக்குகிறது. இதனால்தான் பல நேரங்களில் இளைஞர்கள் வீடுகளிலும் சரி, நாடுகளிலும் சரி பலவற்றை போராடிப் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அன்றுமுதல் இன்றுவரை பல அறிஞர்களும் தலைவர்களும் நமக்கு உணர்த்தியிருக்கக் கூடிய உண்மை என்னவென்றால், இளைஞர் படை நம்மிடம் இருந்தால் நாம் எதையும் எளிதாக அடையலாம் என்று. அதனால்தான் இன்று பல சமுதாய இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் அதே நேரத்தில் தீவிரவாத இயக்கங்ளும் கூட இளைஞர்களை இன்று அதிகம் குறிவைக்கின்றன. அப்படி மற்றவர்களிம் இல்லாத சிறப்பம்சம் இளைஞர்களிடம் என்ன இருக்கிறது? எல்லாரும் கேட்கக்கூடிய கேள்வி இதுதான். அவை

நிறைய இருக்கின்றன. அவைகளில் முக்கியமானது: உடல் பலம் மற்றும் மன பலம். எதையும் உடனடியாக அடைய வேண்டும் என்ற ஆர்வமும் துணிவும் அவர்களிடம் அதிகம். இன்னொரு முக்கியமான பண்பு என்னவென்றால் அவர்கள் குயவன் கையில் இருக்கும் களிமண்ணைப் போன்றவர்கள். இதுதான் அவர்களின் பலமும் பலவீனமும். குயவனின் விருப்பத்திற்கேற்ப களிமண் உருப்பெறுவது போல, இளைஞர்களும் தாங்கள் யாரால் அதிகம் கவரப்படுகிறார்களோ அவர்களின் விருப்பத்திற்கேற்ப செதுக்கப்படுகிறார்கள். இன்று இளைஞர்களை வழிநடத்த நல்ல தலைவர்கள் இருந்தாலும், இளைஞர்களை மூளைச்சலவை செய்ய பல தீவிரவாத இயக்கங்கள் துடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஏன் சினிமா உலகமும், வியாபார உலகமும் இளைஞர்களிடம் தேவையற்ற ஈர்ப்புகளை உருவாக்கி அவற்றை தங்களுக்குச் சாதகமாக்க எவ்வளவு யுக்திகளை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதில் இன்று விளையாட்டு உலகமும் சேர்ந்துவிட்டது. விளையாட்டுப் போட்டிகளில் தேசப்பற்று திணிக்கப்படுவதால் அநேக இளைஞர்கள் இன்று தொலைக்காட்சிப் பெட்டிக்குமுன் தங்கள் பொன்னான நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்றைய இளைய சமுதாயத்தை அறிஞர்கள் Alpha Generation அதாவது ஆல்ஃபா சந்ததியினர் என்று அழைக்கின்றனர். இந்த ஆல்ஃபா சந்ததி இளைஞர்களுக்கு ஒருசில பொதுவான குணநலன்கள் உள்ளன. அவை ஒரு பக்கம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அதிக திறமை வாய்ந்தவர்களாக இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் மற்றொரு பக்கம் பொதுநலத்தைவிட சுயநலம் மேலோங்கியிருப்பது, போதைப் பழக்கங்களுக்கு எளிதில் ஆளாவது, தேவைக்கு மேல் பொருட்களை வாங்கிக்குவிப்பதில் அதிக நாட்டம், எல்லாவற்றிற்கும் உடனடி நிவாரணம் தேடுதல், வன்முறையில் அதிக ஆர்வம் மற்றும் பக்தி முயற்சிகளில் அதிக ஈடுபாடின்மை போன்றவையாகும். சுருக்கமாக சொல்வதென்றால் இன்றைய இளைஞர்களிடம் ஒருவித ஆன்மீக வறட்சி மேலோங்கியிருப்பதை பார்க்கமுடியும்.

இளைஞர்கள்தானே, போக போக எல்லாம் சரியாகிவிடும் என்று நாம் ஏனோதானோவென்று இருந்துவி;ட முடியாது. காரணம் இன்றைய இளைஞர்கள்தான் நமது நாட்டின் நாளைய தலைவர்கள் மற்றும் நமது திருச்சபையின் தூண்கள். எனவே இளைஞர்களின் முன்னேற்றம் ஒட்டுமொத்த உலகத்தின் முன்னேற்றம் என்பதை நாம் மறந்துவிட முடியாது. இதனால்தான் நமது கத்தோலிக்க திருச்சபை இளைஞர்கள் மீது தனிக்கவனம் செலுத்திவருகிறது. திருந்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் 1985ம் ஆண்டு இளைஞர் தினத்தை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடி இளைஞர்கள் மீது தனிக்கவனம் செலுத்த அழைப்பு விடுத்தார். முன்னால் திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் அவர்களும் ‘நமது திருச்சபை, இளைஞர்கள் மீது அக்கறை செலுத்தத் தவறினால் அது உருவிழந்துவிடும்’ என்றார். காரணம் இளைஞர்கள் திருச்சபையின் ஓர் அங்கம். திருந்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இன்றைய சமுதாயம் பல இளைஞர்களை அகதிகளாகவும், தீண்டத்தகாதவர்களாவும், வேலையில்லாதவர்களாவும் உருவாக்கி அவர்களை இந்ந சமுதாயத்தைவிட்டே ஒதுக்கி வைத்துவிட்டது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். அதே நேரத்தில் திருச்சபை அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறார்.

நம்முடைய திருவிவிலியம்கூட இளைஞர்களின் முக்கியததுவத்தை அழகாக எடுத்துரைக்கின்றது. கடவுள் முதன்முதலாக மனிதர்களை படைத்தபொழுது அவர்களை இளம்பருவத்தினராய் படைத்ததாகத்தான் தொடக்க நூல் விவரிக்கிறது. அதோடு ஆபிரகாம் தொடங்கி அன்னை கன்னி மரியாள் வரை இறைவனின் மீட்புத்திட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலோனோர் இளைஞர் பருவத்தில் இருக்கும்பொழுது இறைஅழைப்பை ஏற்றனர். இயேசு ஆண்டவர் கூட இறைஅரசை இவ்வுலகில் கட்டியெழுப்பிய பொழுதும், இறைவிருப்பத்தை கல்வாரியில் நிறைவேற்றிய போதும் ஓர் இளைஞராகத்தான் இருந்தார். இவ்வாறு இளைஞர்களின் பங்கு இறைபணியில் எவ்வளவு முக்கியம் என்பதை திருவிவிலியம் நமக்கு அழகாக எடுத்துரைக்கிறது. அதே நேரத்தில் இளைஞர்களுக்கு மேற்கோள் காட்டக்கூடிய அளவிற்கு மத் 19 வது அதிகாரத்தில் ஒரு நிகழ்வு வருகிறது. இயேசுவை பின்பற்ற வரும் ஒரு பணக்கார இளைஞன் இறுதியில் வருத்தத்துடன் இயேசுவை விட்டு அகன்றதாக வருகிறது. இங்கு இயேசு அந்த இளைஞனை ஒதுக்கவில்லை, மாறாக அந்த இளைஞன்தான் சொத்தின் மீதுள்ள நாட்டத்தால் இயேசுவை வேண்டாமென்று ஒதுக்கினான். அவனிடம் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் ஆர்வம் இருந்த அளவிற்கு, அவனை அடிமைப்படுத்தி வைத்திருந்த பணத்தாசையிலுருந்து அவனால் வெளியே வரமுடியவில்லை.

இதே போல் இன்றைய இளைஞர்களின் வாழ்விலும் பல தீய பழக்க வழக்கங்கள் அல்லது பல எதிர்மறை எண்ணங்கள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதை பல நேரங்களில் நாம் காண முடிகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி வழங்கிய இளைஞர் தினச் செய்தியில், இன்றைய இளைஞர்கள் நம்பிக்கையின்மை, விரக்தி, சமூக ஊடகங்களில் தன்னை எல்லோரும் விரும்ப வேண்டும் என்ற மோகம் மற்றும் பணம் ஈட்டுவது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் போன்ற எதிர்மறை எண்ணங்களால் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்றார். அவர்கள் எழ வேண்டும், எழுந்து உலகை மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.

ஒரு முறை இளைஞன் ஒருவன் இறைவனிடம் சொன்னானாம்: இறைவா! நீர் படைத்த இவ்வுலகம் சரியில்லை. இங்கு பல பிரச்சனைகள்... குளறுபடிகள்,  இடர்பாடுகள். நானாக இருந்திருந்தால் இதைவிட சிறந்த உலகை படைத்திருப்பேன். கடவுள் சொன்னாராம்: அதனால்தான் உன்னைப் படைத்தேன், இளைஞனே!

ஆம், இன்றைய நாளிலே இளைஞர்கள் தங்களது திறமையை உணர்ந்து மாண்புமிக்க மற்றும் சமுதாயத்திற்கு பயனுள்ள ஒரு வாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்துவோம்

06 April 2020, 12:46