இலங்கையில் கோவிட்-19 ஊரடங்கு சூழல் இலங்கையில் கோவிட்-19 ஊரடங்கு சூழல் 

ஆலயங்களைத் தாக்கியவர்களை மன்னித்த கத்தோலிக்கர்

கிறிஸ்துவின் போதனைகளைத் தியானித்ததன் பயனாக, இலங்கை கத்தோலிக்கர், ஆலயங்களைத் தாக்கியவர்களை அன்புகூர்கின்றனர், மன்னிக்கின்றனர் மற்றும், அவர்கள் மீது பரிதாபப்படுகின்றனர் – கர்தினால் இரஞ்சித்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

இலங்கையில், கடந்த ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று ஆலயங்களைக் குண்டு வைத்துத் தாக்கியவர்களை, அந்நாட்டு கத்தோலிக்கர் மன்னித்துவிட்டனர் என்று, கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார்.

ஏப்ரல் 12, கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியில் இதனை அறிவித்த, கொழும்பு பேராயரான, கர்தினால் இரஞ்சித் அவர்கள், கடந்த ஆண்டில், தவறாக வழிநடத்தப்பட்ட சில இளைஞர்கள், இந்த பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தினர், மனிதர் என்ற முறையில், இதற்கு தன்னலத்துடன் பதில் அளித்திருக்க முடியும், ஆயினும், நாங்கள் அவர்களை மன்னிக்கிறோம் என்று கூறினார்.

பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட திருப்பலியில் இவ்வாறு கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், கிறிஸ்துவின் போதனைகளைத் தியானித்ததன் பயனாக, கத்தோலிக்கராகிய நாங்கள், அவர்களை அன்புகூர்கிறோம், மன்னிக்கிறோம் மற்றும், அவர்கள் மீது இரக்கம் கொள்கிறோம் என்று கூறினார்.

நாங்கள் அவர்களை வெறுக்கவில்லை, மற்றும், பழிக்குப்பழி வாங்கவில்லை என்றும் உரைத்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு, தன்னலத்தை முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றது என்று எடுத்துரைத்தார்.

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி, உயிர்ப்புப் பெருவிழாவன்று, ஒன்பது தற்கொலைதாரிகள், இரு கத்தோலிக்க ஆலயங்கள், ஒரு இவாஞ்சலிக்கல் ஆலயம் மற்றும், மூன்று பயணியர் மாளிகைகளில், பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இவற்றில், 259 பேர் உயிரிழந்தனர், மற்றும், 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். 

இந்த பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள், தேசிய Thowheeth Jama’ath எனப்படும், இலங்கையில் செயல்படும் ஓர் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் என்றும், இவர்கள் எல்லாருமே இலங்கை குடிமக்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 April 2020, 13:48