2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி, இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலின் முதலாமாண்டு நினைவு நாள் 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி, இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலின் முதலாமாண்டு நினைவு நாள்  

ஏப்ரல் 21ம் தேதி, இலங்கையில் முதலாமாண்டு நினைவு

இலங்கையில் உள்ளூர் நேரம், காலை 8.45 மணிக்கு, கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரோடும் சேர்ந்து, இஸ்லாமிய மற்றும் புத்த மதத்தினரும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 21 இச்செவ்வாயன்று இலங்கையில் உள்ளூர் நேரம், காலை 8.45 மணிக்கு, அந்நாடெங்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி நடைபெற்றது.

இந்த மௌன அஞ்சலிக்கு முன்னதாக, 8.40 மணிக்கு, அந்நாட்டின் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டு, மக்களுக்கு இந்த அஞ்சலி குறித்து நினைவுறுத்தப்பட்டது.

சென்ற ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி, உயிர்ப்பு ஞாயிறன்று, கொச்சிக்கட புனித அந்தோனியார் திருத்தலம், நீர்க்கொழும்பு புனித செபஸ்தியார் திருத்தலம், மற்றும் சீயோன் ஆலயம் ஆகிய மூன்று கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களிலும் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல்களில் 279 பேர் உயிரிழந்தனர், மற்றும், 500க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

இந்தக் கொடூர நிகழ்வில் மரணமடைந்தோர் நினைவாக, ஆலய மணிகளின் ஒலித்தல், மற்றும் மௌன அஞ்சலி ஆகியவற்றிற்கு, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், அழைப்பு விடுத்திருந்தார்.

கர்தினால் இரஞ்சித் அவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரோடும் சேர்ந்து, இஸ்லாமிய மற்றும் புத்த மதத்தினரும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர் என்றும், அந்த இரு நிமிடங்கள், இலங்கையின் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும், இந்த மௌன அஞ்சலியில் இணைந்தன என்றும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 21, இச்செவ்வாயன்று வழிபாட்டுத் தலங்களின் மணிகளை ஒலித்தும், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியும், இறந்தோருக்கு மரியாதை செலுத்திய அனைவருக்கும் நன்றி என்று, கர்தினால் இரஞ்சித் அவர்கள், Verbum Catholic TV என்ற தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு காணொளியில் கூறியுள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் என்ற விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில், கர்தினால் இரஞ்சித் அவர்களும், மேலும் சில சமயத் தலைவர்களும் இலங்கை அரசுத்தலைவர் Gotabaya Rajapaksa அவர்களிடம் இந்த விசாரணையை இன்னும் தீவிரப்படுத்துமாறு விண்ணப்பித்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2020, 15:02