நோயுற்றோருக்கு ஆசி வழங்க திருநற்கருணைப் பேழையுடன் வீதி வலம் வரும் அருள்பணியாளர்கள் நோயுற்றோருக்கு ஆசி வழங்க திருநற்கருணைப் பேழையுடன் வீதி வலம் வரும் அருள்பணியாளர்கள் 

விதையாகும் கதைகள் : நோயுற்றோரின் வானதூதர்கள்...

இத்தாலியில், நோயுற்றவர் நடுவே பணியாற்றிய பல அருள்பணியாளர்கள், இருபால் துறுவியர், மற்றும், நலப்பணியாளர்கள், இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். இவர்கள் அனைவருமே, நோயுற்றோரின் வானதூதர்கள்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

1941ம் ஆண்டு, ஏப்ரல் 21ம் தேதி, எங்கல்மார் உன்செய்திக் (Engelmar Unzeitig) என்ற இளம் அருள்பணியாளரை நாத்சி படையினர் கைது செய்தனர். அவர் செய்த குற்றம் என்ன? ஹிட்லரின் சர்வாதிகார அரசையும், யூதர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதையும் எதிர்த்து, அருள்பணி எங்கல்மார் அவர்கள் கடுமையாகப் பேசிவந்தார். அதுவும், ஆலயங்களில், வழிபாட்டு நேரங்களில், இவ்வாறு பேசிவந்தார். எனவே, அவர் கைது செய்யப்பட்டு, தாக்ஹாவ் (Dachau) வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டார். அந்த வதைமுகாமில் 2,700க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். எனவே, அந்த வதைமுகாமை, "உலகிலேயே மிகப்பெரிய துறவு மடம்" என்று, ஜெர்மன் படையினர், கேலியாக அழைத்தனர்.

அருள்பணி எங்கல்மார் அவர்கள், அந்த வதைமுகாமில் அடைக்கப்பட்டபோது, அவருக்கு வயது 30. இளையவர் எங்கல்மார் அவர்கள், தன் 18வது வயதில் Marianhill மறைப்பணியாளர்கள் சபையில் சேர்ந்தார். "வேறு யாரும் போக முடியவில்லையெனில், நான் போவேன்" என்ற விருதுவாக்கைக் கொண்ட இத்துறவுச்சபையில், 28வது வயதில் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட எங்கல்மார் அவர்கள், ஈராண்டு பணிக்குப் பின், வதைமுகாமில் அடைக்கப்பட்டார்.

அருள்பணியாளருக்கென ஒதுக்கப்பட்டிருந்த தாக்ஹாவ் வதைமுகாமில், பல நாட்கள், அவர்கள் மிகக் கேவலமாக நடத்தப்பட்டனர். ஒருமுறை, புனித வெள்ளியன்று, இயேசு அனுபவித்த கொடுமைகளை அனைவருக்கும் நினைவுறுத்தும் வகையில், பல அருள் பணியாளர்கள், மற்றவர்கள் முன்னிலையில், சித்ரவதைகள் செய்யப்பட்டனர்.

வதைமுகாமில் 'டைபாய்ட்' நோய் பரவியது. அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ய, அருள்பணி எங்கல்மார் அவர்கள், தன்னையே அர்ப்பணித்தார். நோயுற்று இறந்தோரை, நல்லடக்கம் செய்தார். ‘தாக்ஹாவ் வதை முகாமின் வானதூதர்’ என்றழைக்கப்பட்ட அருள்பணி எங்கல்மார் அவர்கள், நோயினால் தாக்கப்பட்டு, 1945ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி இறையடி சேர்ந்தார்..

இவ்வாண்டு மார்ச் மாதம், இத்தாலி நாடு, கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் சீர்குலைந்தபோது, இத்தாலியில், நோயுற்றவர் நடுவே பணியாற்றிய பல அருள்பணியாளர்கள், இருபால் துறுவியர், மற்றும், நலப்பணியாளர்கள், இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். இவர்கள் அனைவருமே, நோயுற்றோரின் வானதூதர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 April 2020, 11:49