கந்தமாலில் கிறிஸ்தவர்கள் உதவி கந்தமாலில் கிறிஸ்தவர்கள் உதவி  

கந்தமால் ஏழை கத்தோலிக்கரின் உதவி, செல்வந்தர்க்கு எடுத்துக்காட்டு

கத்தோலிக்க ஏழைத் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், சிறு சிறு நன்கொடைகள் வழியாக வறியோருக்கு உதவிகள் வழங்கி வருகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்று நோயால் ஏழைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் கந்தமால் ஏழை கத்தோலிக்கர்கள், தங்களால் இயன்ற உதவிகளை, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆற்றி வருகின்றனர்.

கொரோனா தொற்று நோய்க்கெதிரான நடவடிக்கைகளில் தாங்களும் உதவ வேண்டும் என்ற ஆவலில், ஒடிசா மாநில கந்தமால் பகுதியிலுள்ள Raikia பங்குத்தளத்தின் ஏழை கத்தோலிக்கர், தங்களுக்குள்ளேயே 28,500 ரூபாய்களைத் திரட்டியுள்ளதாக உரைத்த அப்பங்குதள அருள்பணி Pradosh Chandra Nayak அவர்கள், உதவித் தேவைப்படும் மக்களுக்கு கைகொடுத்து உதவி வருவதாக அறிவித்தார்.

இந்த ஏழை மக்கள் ஆற்றி வரும் உதவிகள், இன்றைய செல்வந்தர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க முடியும் எனவும் எடுத்துரைத்தார் பங்கு அருள்பணி நாயக்.

ஏழைத்தொழிலாளர்களாகவும், சிறு விவசாயிகளாகவும் இருக்கும் தன் பங்குதள மக்கள் பலர் 10 ரூபாய் கொடுத்ததைக்கூட தான் மிகப் பெரிதாக எண்ணுவதாக உரைத்த அருள்பணி நாயக் அவர்கள், ஏழை மக்களின் கொடையைக்கொண்டு, மிகவும் வறிய நிலையில் இருக்கும் மக்களுக்கே உதவி வருவதாகவும், உணவுப் பொட்டலங்கள், பால், பிஸ்கட், மருந்துகள் மட்டுமல்ல, மருத்துவப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறைகள் ஆகியவைகளும் வாங்கி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த கொரோனா தொற்றுநோய் காலத்தில், மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உதவி வரும் கத்தோலிக்கர், 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாத மதவெறித் தாக்குதல்களால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 April 2020, 13:58